கண்ணிருந்தும் குருடர்கள்! - கந்தரதன்

December 12, 2016

நவம்பர் மாதம் என்பது மாவீரர்களுக்குரிய மாதம். தமிழர் தாயகத்தில் கடந்த காலங்களில் நவம்பர் மாதத்தில் மாவீரர்களை நினைவுகொள்ள அனைவரும் தயாராகிவிடுவார்கள். வீதிகள் எங்கும் மாவீரர் நாள் வளைவுகள் பிரமாண்டமாக போடப்பட்டிருக்கும். பிரதேச சபைகளினாலும் பொது அமைப்புகளினாலும் போட்டிபோட்டு வீதிகள் கட்டடங்கள் என அனைத்து பகுதிகளும் சிவப்பு மஞ்சள் கொடிகள் கட்டப்பட்டு அலங்கரிக்கப்படும். எங்கும் நவம்பர் மாதம் முழுவதுமே மாவீரர்களின் நினைவு சுமந்த நிகழ்வுகளே இடம்பெறுவது வழமை. அத்துடன், மாவீரர் வாரத்தில் இன்னும் விசேடமாக நவம்பர் 27 இனை நோக்கியதாக அனைத்து நிகழ்வுகளும் அமைந்திருக்கும்.

நவம்பர் மாதத்தில் கேளிக்கை நிகழ்வுகள் மற்றும் திருமண நிகழ்வுகள், பூப்புனித நீராட்டுவிழாக்கள் என எந்த நிகழ்வுகளையும் கொண்டாடுவது இல்லை. மாவீரர்களை நினைவுகொள்ளும் பாடல்கள் மட்டுமே தேசம் எங்கும் ஒலிக்கும். தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி, தமிழீழ வானொலிகள் என அனைத்துமே மாவீரர்கள் தொடர்பான சிறப்பு நிகழ்ச்சிகளே ஒளி, ஒலி பரப்பப்படும்.

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் 1989 ஆம் ஆண்டு மாவீரர் நாள் பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர் காலம் காலமாக தமிழ் மக்கள் பின்பற்றிவரும் வரலாற்றுக்கடமையாக இது இருந்து வருகிறது.

புலம்பெயர் தேசங்களிலும் குறித்த நடைமுறை எழுதப்படாத விதியாக தமிழ் மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளது. தாயகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆட்சி நிலவிய காலங்களில் புலம்பெயர் தேசங்களிலும் இது முழுமையாகக் கடைப்பிடிக்கப்பட்டுவந்தது என்றே சொல்லலாம். ஆனால், இன்று புலம்பெயர் தேசங்களில் பலரும் தமது மனம்போன போக்கில் செயற்பட ஆரம்பித்துள்ளனர். இவ்வாறானவர்கள் மாவீரர் நாளையே மறந்தவர்களாக இருப்பது வேதனைக்குரிய விடயம். மாவீரர் நாளை கூறுபோட முனைந்தது ஒரு கூட்டம். மாவீரர்களை காரணம்காட்டி வதிவிட உரிமைபெற்று, இன்று அவர்களை நினைவுகூரவே மறந்து தமது சொந்த அலுவல்களில் மூழ்கியுள்ளது இன்னொரு கூட்டம். இந்த இரு கூட்டத்தையும் வரலாறு ஒருபோதும் மன்னிக்காது.

இதைவிட இன்னொரு விடயத்தை கட்டாயம் குறிப்பிட்டே ஆகவேண்டும். மாவீரர் மாதத்தையும் மாவீரர் வாரத்தையும் பற்றிக்குறிப்பிட்டோம். ஆனால் மாவீரர் நாள் அன்று கூட புலம்பெயர் தேசங்களில் திருமணம் மற்றும் இதர கொண்டாட்டங்கள் நடைபெற்றுள்ளது என்றால், எவராலும் நம்பமுடியுமா? நம்பித்தான் ஆகவேண்டும்.

இம்முறை தாயகத்தில் நடைபெற்ற மாவீரர் நாளை ஊடகங்களில் பார்த்திராவிட்டால், அது யாரின் தப்பு என்று சொல்வது. மாவீரர் வாரத்தில் சிறிலங்கா பேரினவாதப் படைகளால் சிதைத்து சின்னாபின்னமாக்கிய மாவீரர் துயிலும் இல்லங்களை சிரமதானம் செய்து சிதிலமாக்கப்பட்ட மாவீரர் கல்லறைகளை தேடி எடுத்து குவித்து, அதனைப் புனிதமாக அலங்கரித்து, விளக்கேற்றிய காட்சி உருகாதவரையும் உருகவைக்கும். பாடசாலை மாணவர்கள் சீருடையுடன் நின்று மாவீரர்களின் கல்லறைகளைத் துடைத்துக்கொண்டிருக்கும் காட்சி வேறு,  இக்காட்சிகளைக் கண்ட பலர் இந்த நேரத்தில் நாங்கள் தாயகத்தில் இல்லாமல் போய்விட்டோமே என ஏங்கியதும் உண்டு.

ஆனால், புலம்பெயர் தேசத்தில் ஐந்தறிவு படைத்தவர்கள் திருமணத்தை, கேளிக்கை கொண்டாட்டத்தை மாவீரர் நாள் அன்று வைத்திருக்கின்றார்கள் என்றால் இவர்களை எப்படிச்சொல்வது? இதைப்பார்க்கும்போது எனக்கு ஒருவிடயம் நினைவுக்கு வருகின்றது. சின்ன வயதில் ஆலயம் ஒன்றுக்கு சென்றபோது, அங்கே தொங்கவிடப்பட்டுள்ள வாசகம் ஒன்று ‘பரம்பொருளின் பெரும் புகழைப் பாடிப் பணிவதன்றி, பிற வார்த்தை பேசற்க’ இது இறைவனுக்கு மட்டுமல்ல, எமது மான மாவீரத் தெய்வங்களுக்கும் பொருந்தும். மாவீரர்களைப் பூசிக்கும் மாதத்தில் அவர்களின் புகழைப் பாடிப் பணியவேண்டுமே தவிர பிற விடயங்களைத் தவிர்ப்பது நன்று.

மாவீரரைப் பூசிக்கும் நாளில் பிற கேளிக்கை நிகழ்வுகளை நிகழ்த்தும் எம்மவர்கள், கண்ணிருந்தும் குருடர்கள், காதிருந்தும் செவிடர்கள், வாயிருந்தும் ஊமைகள் என்பதே சாலப் பொருந்தும். (மாற்று வலுவுடையவர்களை புண்படுத்துவதற்காக அல்ல) இவ்வாறானவர்களை இனம் கண்டு சமூகத்தில் புறந்தள்ளி விடுவதே சாலச்சிறந்தது. இனிவரும் காலங்களிலாவது இவ்வாறானவர்கள் தமது நடவடிக்கைகளை மாற்றி மாவீரத் தெய்வங்களை பூசிக்கத் தலைப்படவேண்டும். அத்துடன் உங்கள் பிள்ளைகளையும் இவ்வாறான நிகழ்வுகளில் பங்குகொள்ளத் தயார் படுத்தவேண்டும்.

பல பெற்றோர்கள், எனது பிள்ளைக்கு பரீட்சை வருகின்றது, உடல் நலம் சரியில்லை, வர விரும்பவில்லை என நொண்டிச் சாட்டுக்களை அடுக்கி அவர்களை வீட்டில் விட்டு மாவீரர் நாளுக்கு வருகின்றனர்.  மாவீரர் நாளில் கலந்துகொள்வதென்பது நம் ஒவ்வொருவருடைய கடமை என்பதையும், மாவீரர்கள் எமக்காகவே தமது உயிர்களை அர்ப்பணித்தார்கள் என்பதையும் பிள்ளைகளுக்கு எடுத்துச்சொல்லி அவர்களையும் அழைத்துவருவதே பெற்றோராகிய ஒவ்வொருவரின் பங்களிப்பாகும். இதைச் செய்யத் தவறுவதும் வரலாற்றுத் தவறாகும்.

நாளை இந்த வரலாற்றுக்கடமை உங்களுடனேயே முடிந்துவிடும். எதிர்கால சந்ததிக்கு கொண்டுசெல்லாமல் முடிந்துவிடும் என்பதே உண்மை. இதனை உணர்ந்து செயற்படவேண்டும்.  இது சிந்திக்கும் நேரமல்ல  நம் ஒவ்வொருவரும் சிந்தித்து செயற்படும் நேரம்.

(சூறையாடல்கள் தொடரும்)

நன்றி: ஈழமுரசு

செய்திகள்
புதன் செப்டம்பர் 06, 2017

எந்தவொரு தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு ஆதர்சமாக அமைவது அப்போராட்டத்தை வழிநடத்தும் சித்தாந்தமாகும்.

வியாழன் August 24, 2017

உலகில் பெரும்பாலான மனிதர்கள் இன்று பதவியை நோக்கியே ஓடுகின்றார்கள். ஏதாவது ஒரு பதவியைப் பிடித்து பணம், புகழ், கெளரவத்தோடு வாழ்ந்துவிட வேண்டும் என்பதே இந்த ஓட்டத்திற்கான மூலகாரணம்.

வியாழன் August 24, 2017

ஒரு துளிகூட தன்னலம் இல்லாத அவரது தலைமைப்பண்பும் தனது இலட்சியத்துக்கு அவர் காட்டிய நேர்மையும்...

புதன் August 23, 2017

ஈழத்தமிழர்களின் வரலாற்றுத் தாயகமாகிய வடக்குக் கிழக்கின் குடிசனப் பரம்பலை மாற்றியமைக்கும் நோக்கத்துடன் கடந்த அறுபத்தொன்பது ஆண்டுகளாக சிங்கள அரசு முன்னெடுத்து வரும் சிங்களக் குடியேற்றங்களுக்கு நிகராக