கண் தானம் செய்ய விஜய்சேதுபதி வேண்டுகோள்!

June 07, 2017

மதுரையில் நேற்று முன்தினம் (5)   நடைபெற்ற மருத்துவமனை திறப்பு விழாவில் பங்கேற்ற விஜய் சேதுபதி, அவரது கண்ணை தானம் செய்துள்ளதாக தெரிவித்தார். அவரது ரசிகர்களுக்கும் வேண்டுகோள் விடுத்தார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. படத்தில் நடிப்பதோடு நிற்காமல், சமூக நலத்திற்காக அவ்வப்போது குரல் கொடுத்தும் வருகிறார். அந்த வகையில் சினிமா துறையில் உள்ள பல்வேறு துறையை சேர்ந்த 100 மூத்த கலைஞர்களுக்கு தலா ஒரு சவரன் தங்க நாணயம் வழங்கியிருந்தார்.

இந்நிலையில், நேற்று மதுரையில் உள்ள பிரபல தனியார் கண் மருத்துவமனை ஒன்றின் திறப்பு விழா நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி, கே.வி.ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் மருத்துவமனையை திறந்து வைத்த விஜய் சேதுபதி கண் தானம் குறித்து பேசினார். 

அதில் அவர் கூறியதாவது,  தானத்தில் சிறந்தது கண்தானம் என்பதால், எனது கண்ணை தானம் செய்துவிட்டேன். பார்வை இல்லாமல் தவிக்கும் அனைவருக்கும் பார்வை கிடைக்க வேண்டும். அவர்களும் இந்த உலகத்தை எட்டிப் பார்க்க வேண்டும். அதற்கு அனைவருமே அவர்களது கண்களை தானம் செய்ய உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று கூறினார். மேலும் தனது ரசிகர்களையும் கண் தானம் செய்யச் சொல்லி வேண்டுகோள் விடுத்தார். 

செய்திகள்