கதறியழும் தொப்புள் கொடி உறவுகளுக்கு ஓர் திறந்த மடல் - கலாநிதி சேரமான்

புதன் ஓகஸ்ட் 08, 2018

விழிநீர் பெருக்கெடுத்தோடக் கதறியழுதும்,
நெஞ்சுக்கூடு பிளக்கும் வகையில் நெஞ்சின் மேல் அடித்தும்
நீங்கள் துவளும் காட்சிகள் ஒவ்வொன்றையும்
காணும் பொழுது எமது நெஞ்சைப் பிழிவது போல் உள்ளது.

நீங்கள் கண்ணீர் சொரிவதைக்
காணும் பொழுது எங்கள்
கண்களிலும் கண்ணீர் மழை பொழிகின்றது.

நீங்கள் அழுது துடிப்பது,
மாண்டு போன உங்கள் தலைவனுக்காக.

நாங்களோ துவள்வது உங்களுக்காக.

உங்களுக்காக மட்டுமே தான்!

ஈழ மண்ணில் ஆறென எமது குருதி வடிந்தோடிய பொழுதும்,
எமது மண்ணைக் கந்தக் காற்றும்,
பிணவாடையும் சூழ்ந்த பொழுதும்,
உலகெங்கும் நாம் கண்ணீர் மழை சொரிந்து துவண்ட பொழுதும்,
உங்கள் தலைவன் மட்டும் வள்ளி-தெய்வானை உடனிருக்க,
பணநாயகம் எனும் சிம்மாசனத்தில் கொலுவிருந்து,
பூனை கண்ணை மூடினால் உலகம் இருண்டுவிடும்
என்ற கதையாக ஈழ மக்களைக் கனவுலகில் காத்த நாயகன் அல்லவா!

கொத்துக் கொத்தாய் எதிரியின்
எறிகணை மழையில் எமது உறவுகள்
நரபலி வேட்டையாடப்பட,
உங்கள் தலைவனோ காலையில் ஆகாரமுண்டு,
மதிய ஆகாரத்திற்கு இடையில் டில்லி மீது பட்டினிப் போர் புரிந்து
ஈழ மண்ணில் போர்நிறுத்தம் கொண்டு வந்த சாணக்கியர் அல்லவா!

நாளுக்கு சில நூறு பேர் என மடிந்து கொண்டிருந்த எமது உறவுகள்,
நாளுக்கு ஆயிரம் பேர் என பலிகொள்ளப்பட்ட பொழுது,
உங்கள் தலைவனோ
மழை நின்றாலும் தூவாணம் விடவில்லை
என்றுரைத்த முத்தமிழ் வித்தகர் அல்லவா!

உங்களின் அந்தத் தலைவனுக்காக
ஒரு துளி கண்ணீர் கூட நாம் சிந்தப் போவதில்லை.

கலைஞருக்குக் கண்ணீர் அஞ்சலி என்றும்,
தலைவனை இழந்த உடன்பிறப்புக்களின் துயரில் பங்கேற்கிறோம் என்றும்,
ஈழமண்ணில் இருந்தும்,
புலம்பெயர் தேசங்களில் இருந்தும்
எழும் சில பிதற்றல்கள் உங்கள் காதுகளில் விழலாம்.

அப்படியெல்லாம் பசப்பு வார்த்தை பேசி
உங்களை நாங்கள் ஏமாற்றப் போவதில்லை.

நாங்கள் அழுவதாயின் உங்களுக்காக மட்டுமே அழுவோம்.
உங்களுக்காக மட்டும்தான் அழுவோம்.
ஒரு நாளும் உங்கள் தலைவனுக்காக அல்ல!

உங்கள் தலைவன் மடிந்ததில் எங்களுக்கு
எந்தக் கவலையும் இல்லை.

ஏனென்றால் ஈழ மண்ணில்
146,679 தமிழ் உயிர்கள் நரபலிகொள்ளப்பட்ட பொழுது,
உங்கள் தலைவன் ஒரு துளி கண்ணீர் கூட சிந்தியதில்லை.

தொண்ணூற்று நான்காவது அகவையில்
செத்து மடிந்த உங்கள் தலைவன்,
ஒன்பது ஆண்டுகளுக்கு முன்
ஈழமண்ணில் போர்நிறுத்தம் வேண்டிப்
பட்டினிப் போர் தொடுத்து
மடிந்திருப்பாராக இருந்தால்
நிச்சயம் உங்கள் தலைவனைத்
தெய்வமாக நாங்கள் தொழுதிருப்போம்.

எதிரியிடம் மண்டியிட மறுத்து
பட்டினிப் போர்புரிந்து மடிந்த
சங்கத் தமிழ் மன்னன் சேரமான் கணைக்கால் இரும்பொறை
தமிழ்நாட்டிற்குப் புதிய வழிகாட்டிச் சென்றான்
என்று இந்தி மொழியெதிர்ப்புப் போர் காலத்தில் கவிபாடி
முழங்கிய உங்கள் தலைவன்,
ஈழப் போர்க் காலத்தில் அதே
வழிநின்று,
டில்லிக்கும்,
இத்தாலி சைத்தான் சோனியாவிற்கும்
மண்டியிட மறுத்துப்
பட்டினிப் போர் புரிந்து மடிந்திருந்தால்
உங்கள் தலைவனுக்காக நாங்கள்
ஆயிரம் ஆண்டுகள் கண்ணீர் சிந்தியிருப்போம்.

மாவீரன் என்றும்,
அடலேறு என்றும்,
ஈகச்சுடர் என்றும்,
உலகத் தமிழர்களின் தலைவன் என்றும்,
உங்கள் தலைவனைப் போற்றியிருப்போம்.

ஓர் ஏழை நாதசுவர வித்துவான் குடும்பத்தில் பிறந்து,
இன்று பல நூறு கோடி ரூபா
சொத்துக்களின் அதிபதியாக மடிந்த
பணநாயகர் ஒருவருக்காக
இன்று ஏழ்மையில் வாடும்
நீங்கள் விழிநீர் சொரிவது
எமது இதயத்தைப் பிசைய வைக்கத்தான் செய்கிறது.

உங்கள் கண்ணீரும்,
உங்கள் கதறல்களும்,
முள்ளிவாய்க்காலில் வழிந்தோடிய
எங்கள் உறவுகளின் கண்ணீரையும்,
அனாதரவாக அடங்கிப் போன
எங்கள் உறவுகளின் கதறல்களையும் தான்
நினைவூட்டி நிற்கின்றன.

நாதியற்ற நாம்,
எங்கள் தங்கத் தலைவன் பிரபாகரனை
இன்றும் தேடிக் கொண்டிருக்கும் நாம்,
உங்களுக்கு நாமிருக்கிறோம் என்று கூறுவதைத் தவிர
வேறு எந்த வார்த்தைகளும் அற்றவர்களாகவே இருக்கிறோம்.

உதயசூரியன் மறைந்து விட்டான் என்று நீங்கள் கதறுகின்றீர்கள்.

ஆனால் உங்கள் உதயசூரியன் மறைந்து விடவில்லை.

அல்பிரட் துரையப்பா,
அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம்,
நீலன் திருச்செல்வம்,
லக்ஸ்மன் கதிர்காமர்
போன்றோர் கொலுவிருக்கும்
துரோகிகள் உலகத்தில்
உங்கள் உதயசூரியனும் பிரகாசிக்கிறான்.

மரணத்தை வென்று மாவீரர்களும் வாழ்வார்கள்.
துரோகிகளும் வாழ்வார்கள்.

ஆனால் மாவீரர்கள் வாழ்வார்கள் புகழுலகில்.
துரோகிகள் வாழ்வார்கள் நிந்தனையுலகில்.

ஈழத்தமிழர்களின் நிந்தனையுலகில்
உங்கள் உதயசூரியன் கருணாநிதி என்றும் எட்டப்பனாக உயிர்வாழ்வான்.

அந்த ஆறுதலோடு இந்த மடலை நிறைவு செய்கிறோம்.