கதிர்காமத்தில் பௌத்த பிக்குகள் மீது துப்பாக்கிச் சூடு

செவ்வாய் ஜூன் 12, 2018

சிறிலங்காவில் பௌத்த பிக்குகள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இரு பிக்குகள் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் நேற்று (12) செவ்வாய்க்கிழமை இரவு 11.30 மணியளவில் கதிர்காமத்தில் இடம்பெற்றுள்ளது. 

கதிர்காமம் கிரிவெஹெர ரஜமகா விகாரையின் விகாராதிபதி ருகுணு மாகம்பத்து பிரதான சங்கநாயக்கர் கொபவக தம்மின்த தேரர் மீதே இனந்தெரியாத மூவர்  துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். 

துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகிய தேரர் ஹம்பாந்தோட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தேரருடன் காணப்பட்ட சோபித எனும் தேரரும் இச்சம்பவத்தில் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வழிபாடுகளில் ஈடுபட்டு விட்டு விகாரைக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் போதே விகாரைக்கு அருகில் வைத்து இவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிவப்பு நிற மோட்டார் சைக்கிளில் வந்த மூவரினால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  பின்னர் இவர்கள் விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.