கதைதான் முக்கியம்.. என் கதாபாத்திரம் அல்ல! - சமந்தா

Friday September 14, 2018

‘‘இந்தக் காட்சியில் இப்படி நடிக்க வேண்டும் என முன் கூட்டியே மனதுக்குள் ரிகர்சல் பார்ப்பது எனக்குப் பிடிக்காது. ஒரு கதாபாத்திரத்துக்கு முன்பே தயாராகிச் சென்றால் அது புத்திசாலித்தனமாக இருக்கலாம். ஆனால், அதில் நேர்மை இருக்காது. படப்பிடிப்புக்குச் சென்று அங்குள்ள சூழ்நிலையை உணர்ந்து, அதன் பிறகு தயாராகி நடித்தால்தான் அதில் நேர்மை, உண்மை இருக்கும்..’’ - அனுபவபூர்வமாக பேசுகிறார் சமந்தா.

‘யூ டர்ன்’, ‘சீமராஜா’ படங்கள் வெளிவர உள்ள நிலையில்,  சமந்தா   அளித்த பிரத்யேக நேர்காணலில் இருந்து..

‘யூடர்ன்’ பட அனுபவத்தில் இருந்து தொடங்கலாமா?

‘படம் பார்க்கிற எல்லோருமே நல்ல கதையை சமந்தா தேர்வு செய்திருக்காங்க என்று பாராட் டுவார்கள். அனைவராலும் இயக்கு நர் பாராட்டப்படுவார். தொடக்கம் முதல் இறுதி வரை திரில்லர் பாணியிலேயே கதை பயணிக்கும். முதன்முறையாக நாயகி சம்பந்தப் பட்ட கதை என்பதால் உள்ளுக்குள் பதற்றம் இருக்கிறது. என் மீது எத்தனை பேர் நம்பிக்கை வைத்திருக் கிறார்கள் என்பதை, நானே பார்த்து தெரிந்துகொள்ளப் போகிறேன்.

தியாகராஜன் குமார ராஜா இயக்கத்தில் உருவாகிவரும் ’சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் உங்கள் பொறுப்பு என்ன?

எந்த காலகட்டத்திலும் பழைய படம் என்ற நிலை வராமல், புதிய கதைக் களமாகவே இருக்கக்கூடிய படம் அது. இயக்கு நர் தியாகராஜன் குமார ராஜா தொடர்ந்து அப்படித்தான் யோசிக்கிறார். அவரது தைரிய மான கதைக் களத்துக்காகத்தான் நாங்கள் எல்லோரும் நடித்தோம். கதையின் முக்கிய முடிச்சு என்பதால் என் கதாபாத்திரம் பற்றி சொல்ல மாட்டேன்.

வெற்றிப் பட நாயகி என்ற இடத்தை தொடர்ந்து தக்கவைத்திருக்கிறீர்களே?

இப்போதெல்லாம் கதைதான் ஹீரோ. அதற்குப் பிறகுதான் நாயகன், நாயகியை பார்க் கிறார்கள். அதனால், நல்ல கதாபாத்திரங்களாக தேடித் தேடி நடிக்கிறேன். கதைக்கு முக்கியத் துவம் உள்ள படங்களில்தான் நடிக்கிறேன். அப்படி நடிப்பதையே விரும்புகிறேன். எப்போதும் ஒரே மாதிரி கதாபாத்திரங்கள் என்றால் ரொம்ப போரடிக்கும்.

‘நடிகையர் திலகம்’ படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்புக்கு இப்போதும் பாராட்டுகள் குவிகின்றன. அதுபோன்ற ஒரு வெற்றியை அனுபவிக்கும் ஆசை இருக்கிறதா?

கீர்த்தி சுரேஷுக்கு ‘நடிகையர் திலகம்’ படம் மூலமாக ஒரு நல்ல வாய்ப்பு வந்தது. அதை நன்கு பயன்படுத்திக்கொண்ட அவர், தன் திறமையை சிறப்பாக வெளிப்படுத்தி, அனைவரையும் தன்னைப் பற்றி பேச வைத்தார். அசர வைத்தார். உரிய வாய்ப்புகள் வந்தால், எல்லோரும் தங்கள் திற மையை நிரூபிப்பார்கள். நானும் அதுபோன்ற வாய்ப்புக்காக காத் திருக்கிறேன்.

‘சீமராஜா’, ‘யூ-டர்ன்’ என ஒரே நாளில் உங்களது 2 படங்கள் வெளியாகின்றன. உங்கள் மனநிலை எப்படி இருக்கிறது?

இரண்டுமே இரு வேறு எல்லை. ரொம்ப வித்தியாசமான படங்கள். அதனால்தான் ஒரே தேதி யில் வெளியிட முடிவு செய்தோம். குடும்பத்தினரோடு உட்கார்ந்து ரசித்துப் பார்க்கிற படம் ‘சீமராஜா’. ‘யு-டர்ன்’ திரில்லர் படம். தொடர்ந்து விடுமுறை தினங்கள் என்பதால் 2 படங்கள் வருவதில் தவறில்லை. இரு படங்களுக்குமே கடுமையாக உழைத்திருக்கிறோம். அதோடு, தெலுங்கில் என் கணவர் நாக சைதன்யா நடித்துள்ள ‘சைலஜா ரெட்டி’ படம் வெளிவரும் அதே நாளில் ‘யு-டர்ன்’ வெளிவருகிறது. ‘கணவன் - மனைவி இடையே போட்டி’ என்கின்றன மீடியாக்கள். போட்டியும், பொறாமையும் எங்க ளுக்கு எதற்கு? இரு படங்களும் ஜெயிக்கணும். நிச்சயம் ஜெயிக் கும்.