கனகராயன்குளம் காவல் துறை நிலையப் பொறுப்பதிகாரியிடம் விசாரணை!

வெள்ளி செப்டம்பர் 14, 2018

கனகராயன்குளம் காவல் துறை  நிலையப் பொறுப்பதிகாரியிடம் நேற்று காலை மனித உரிமைகள் ஆணைக்குழு சுமார் இரண்டரை மணி நேரம் வாக்குமூலத்தை பெற்றுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய இணைப்பாளர் ரோஹித பிரியதர்ஷன தெரிவித்துள்ளார்.

கனகராயன்குளம் பகுதியிலுள்ள உணவகம் ஒன்றில் கடந்த 10 ஆம் திகதி  காவல் துறை நிலையப் பொறுப்பதிகாரியொருவர் சிவில் உடையில் சென்று தாக்குதல் நடத்தியுள்ளர்.

இதனால் தாக்குதலுக்குள்ளாகிய தந்தை மற்றும் இரு பிள்ளைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இதனையடுத்து தாக்குதலுக்குள்ளானவரின் மனைவி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கமையவே கனகராயன்குளம்  காவல் துறை நிலையப் பொறுப்பதிகாரி மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய அலுவலகத்தில் ஆஜராகி வாக்குமூலம்  அளித்திருந்தார்.

அத்துடன் இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை 24 மணி நேரத்திற்குள் மேற்கொண்டு அறிக்கையினை வழங்குமாறு  மாங்குளம் பொலிஸ் நிலையத்திற்கும் வன்னிப்பிராந்திய பிரதிப்  காவல் துறை மா அலுவலகத்திற்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு   கடிதம் மூலம் கேட்டுக்கொண்டுள்ளது. 

சம்பவ தினம் குறித்த மூவரும் தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள், குறித்த தந்தை மற்றும் இரு பிள்ளைகளும் தாக்கப்பட்டிருந்தால் அதற்குரிய சட்ட நடவடிக்கையினை உடன் மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.