கனடா ஒன்ராறியோ நாடாளுமன்றத்தில் பொங்கல் விழா!

வெள்ளி சனவரி 25, 2019

ஒன்ராரியோ மாகாண சபை அமைந்துள்ள குயீன்ஸ் பார்க்கில் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா அரச நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டதுடன், தமிழர் மரபுரிமை மாதமும் நினைவுகூரப்பட்டது.

செவ்வாய்க்கிழமை, ஜனவரி 15ம் திகதி, மாலை 6 மணியளவில் இடம்பெற்ற இந்த நிகழ்விற்கு, தமிழர்களின் பல ஊடகங்களும் சமூகமளித்து, நிகழ்வை உள்வாங்கிக்கொண்டன.

மாகாணசபை உறுப்பினரான திரு. விஜய் தணிகாசலம் அவர்கள் நிகழ்வை மிக லாவகமாகத் தொகுத்து வழங்கினார். இன் நிகழ்வில் ஒன்ராரியோ மாகாண அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உதவியாளர்கள் பங்குபற்றி சிறப்பித்தார்கள். 

ஒன்ராறியோ மாகாண பொது அரச சட்டவாளரும் அமைச்சருமான கௌரவ கரோலின் மல்ரோனி அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, நல்ல வாழ்த்துரை ஒன்றை வழங்கினார். இவர் தமிழர்கள் கனடாவுக்கு அகதிகளாக வருவதற்கான கதவை முதலாவதாக திறந்த முன்னால் கனடிய பிரதமர் பிரையின் மல்ரோனியின் மகள்.

மாகாணசபை உறுப்பினரான திரு. லோகன் கணபதி அவர்களும் சிறப்புரையாற்றிய இந்த நிகழ்வில், ஏராளமான தமிழ் சமூகப் பிரதிநிதிகளும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

பொங்கல், வடை உட்பட பல்வேறு சிற்றுண்டிகளும் பரிமாறப்பட்டதுடன், ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்க நீதி வழங்கப்பட வேண்டுமென்ற சிபாரிசும் முன்வைக்கப்பட்டது. இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கே காணலாம்.