கன்னியாகுமரி மீனவர்கள் 1000 பேர் கரை திரும்பாததால் உறவினர்கள் பதற்றம்!

Friday October 05, 2018

வானிலை மையம் விடுத்த புயல் எச்சரிக்கை போய் சேராததால் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 1000 மீனவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை. 

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மேலடுக்கு சுழற்சியானது குறைந்த காற்றழுத்த பகுதியாக உருவாகி பின்னர் புயலாக மாறவும் வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. 
 
இதன் காரணமாக தமிழகத்திற்கு அடுத்து வரும் நாட்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 7-ம் தேதி அதீத கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. புயல் சின்னம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் ஆழ்கடலுக்கு ஏற்கனவே சென்றவர்கள் 5-ம் தேதிக்குள் கரை திரும்ப வேண்டும் என்றும் வானிலை மையம் அறிவுறுத்தியிருந்தது.

இந்நிலையில், கன்னியாகுமரியில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 1000 மீனவர்கள் கரை திரும்பவில்லை. இன்று காலை வரை அவர்கள் வராததால் உறவினர்களிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.

அரசு விடுத்த புயல் குறித்து அரசு எச்சரிக்கை மீனவர்களுக்கு போய் சேராததால் அவர்கள் கரை திரும்பவில்லை என தெரியவந்துள்ளது. இதையடுத்து ராணுவம், கப்பல் படை மற்றும் மீன்வளத்துறை மூலம் தகவல் அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

கன்னியாகுமரி கடற்கரையில் இருந்து 200 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீனவர்கள் இருப்பதாக சக மீனவர்கள் கூறியுள்ளனர்