க.பொ.த சாதாரண தர மாணவர்களின் கவனத்திற்கு!

Thursday December 07, 2017

இம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரிட்சைகள் எதிர்வரும் 12ம் திகதி தொடக்கம் 21ம் திகதி வரை இடம்பெறவுள்ளது.  இதற்கமைய, காலை 08.30க்கு பரிட்சைகள் ஆரம்பமாகும் எனவும், பரிட்சார்த்திகள் அனைவரும் காலை 08.00 மணிக்கு முன்னதாக, மண்டபத்திற்கு வருமாறும், பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அத்துடன், பரிட்சார்த்திகள் பரீட்சைக்கான அனுமதிப் பத்திரம் மற்றும் அடையாள அட்டை அல்லது பாஸ்போட் உள்ளிட்ட உரிய ஆவணங்களை கொண்டு வர வேண்டியது கட்டாயம் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

இதேவேளை, பரீட்சைகளின் போது, மாணவர்கள் ஸ்மான் கடிகாரங்கள், கையடக்கத் தொலைபேசிகள் போன்றவற்றின் மூலம் மேற்கொள்ளும் மோசடிகள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் பரீட்சை நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பரீட்சைகள் திணைக்களம் கூறியுள்ளது. 

இவ்வாறான விடயங்களில் ஈடுபடும் மாணவர்களின் பெறுபேறுகள் இரத்துச் செய்யப்படுவதோடு, பரீட்சைகள் திணைக்களத்தினால் நடத்தப்படும் எந்தவொரு பரீட்சைகளிலும் ஐந்து வருடங்களுக்கு தோற்ற முடியாத படி தடையும் விதிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அத்துடன், மாணவர்களுக்கு வௌியில் இருந்து ஏதேனும் தொந்தரவுகள் வரின், அது குறித்து காவல் துறை  தலைமையகம் அல்லது பரீட்சைகள் திணைக்களத்திற்கு தெரியப்படுத்துமாறு, பரீட்சை நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதேவேளை, பரீட்சை மண்டபத்தினுள் எந்தவொரு மோசடிகள் இடம்பெறினும் அது குறித்து பரிட்சார்த்திகள் அல்லது பெற்றோர், பரீட்சைகள் திணைக்களத்தின் 1911 என்ற அவசர இலக்கத்திற்கு அழைத்து தெரியப்படுத்த முடியும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.