கப்டன் வானதியின் 27 ஆவது நினைவேந்தல்

புதன் ஜூலை 11, 2018

தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிக் கவிஞை கப்டன் வானதி வீரமரணம் அடைந்து இன்று 27 வருடங்கள். 

விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டு களமாடிய வானதி சிறந்த கவிஞராகத் திகழ்ந்தார். 

இவர் எழுதிய கவிதைகள் பல போராளிகளுக்கு விடுதலைப் போராட்டம் தொடர்பான உந்துதலைக் கொடுத்தது. தமிழீழ தேசம் மீட்கப்பட வேண்டும் என்ற வேட்கையை விதைத்தது. 

வானதி அக்காவின் கவிதைகளைப் படித்துப் பார்த்துவிட்டுத்தான் நான் இயக்கத்திற்கு வந்தனான் என்று பல போராளிகள் வெளிப்படையாகவே கூறிக்கொண்டனர்.  

பெண் போராளிகளுக்கு அப்பால் ஆண் போராளிகள் பலரும் வானதியின் கவிதைகளால் ஈர்க்கப்பட்டு போராட்டத்தில் இணைந்தனர். 

மிகத் திறமைமிக்க போராளியான வானதி 1991 ஆம் ஆண்டு ஜீலை மாதம் 11 ஆம் திகதி ஆனையிறவு படைத்தளம் மீதான தாக்குதலில் வீரமரணம் அடைந்தார். 

இவர் எந்த இலட்சியத்திற்காக தன்னை ஆகுதி ஆக்கினாரோ அந்த இலட்சியத்தில் பயணிப்பதே தமிழ் மக்கள் அவருக்கு செய்கின்ற வீர வணக்கம் ஆகும். 


அது கப்டன் வானதி அக்காவின் இறுதிக் கவிதை

எழுதுங்களேன்...
நான்
எழுதாது செல்லும்
என் கவிதையை
எழுதுங்களேன்!

ஏராளம்.....
ஏராளம்..... எண்ணங்களை
எழுத
எழுந்துவர முடியவில்லை.

எல்லையில்
என் துப்பாக்கி
எழுந்து நிற்பதால்.
எழுந்துவர என்னால் முடியவில்லை!

எனவே
எழுதாத என் கவிதையை
எழுதுங்களேன்!

சீறும்
துப்பாக்கியின் பின்னால்
என் உடல்
சின்னாபின்னப்பட்டு போகலாம்.
ஆனால்
என் உணர்வுகள் சிதையாது
உங்களை சிந்திக்க வைக்கும்.

அப்போது
எழுதாத என் கவிதையை
எழுதுங்களேன்!

மீட்கப்பட்ட எம் மண்ணில்
எங்கள்
கல்லறைகள்
கட்டப்பட்டால்
அவை
உங்கள்
கண்ணீர் அஞ்சலிக்காகவோ
அன்றேல் மலர் வளைய
மரியாதைக்காகவோ அல்ல!

எம் மண்ணின்
மறுவாழ்விற்கு
உங்கள் மன உறுதி
மகுடஞ் சூட்டவேண்டும்
என்பதற்காகவே!

எனவேஇ
எழுதாத என் கவிதையை
எழுதுங்களேன்!

அர்த்தமுள்ள
என் மரணத்தின் பின்
அங்கீகரிக்கப்பட்ட
தமிழீழத்தில்
நிச்சயம் நீங்கள்
உலாவருவீர்கள்!

அப்போ
எழுதாத
என் கவிதை
உங்கள் முன்
எழுந்து நிற்கும்!

என்னைத்
தெரிந்தவர்கள்
புரிந்தவர்கள்
அரவணைத்தவர்கள்
அன்பு காட்டியவர்கள்
அத்தனை பேரும்
எழுதாது
எழுந்து நிற்கும்
என்
கவிதைக்குள்
பாருங்கள்!

அங்கே
நான் மட்டுமல்ல
என்னுடன்
அத்தனை
மாவீரர்களும்
சந்தோசமாய்
உங்களைப் பார்த்து
புன்னகை பூப்போம்!

(ஆனையிறவு முகாம் தாக்குதலில் வீரமரணமடைந்த கப்டன் வானதி எழுதிய இறுதிக் கவிதை இது)