கமல் - விக்ரம் புதிய கூட்டணி!

சனி சனவரி 20, 2018

தூங்காவனம்' பட இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா இயக்கும் அடுத்த படத்தில் கமல்ஹாசன் - விக்ரம் - அக்‌ஷரா ஹாசன் இணைவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விக்ரம் தற்போது ஹரி இயக்கத்தில் `சாமி ஸ்கொயர்' படத்திலும், கவுதம் மேனன் இயக்கத்தில் `துருவ நட்சத்திரம்' படத்திலும்   நடித்து வருகிறார். 

இந்த இரு படங்களை முடித்த பிறகு விக்ரம் அடுத்ததாக `தூங்காவனம்' பட இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது. அந்த படத்தை கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்க இருப்பதாகவும், கமல் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்ட நிலையில், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை கமல்ஹாசன் வெளியிட்டிருக்கிறார்.

இதுகுறித்து கமல் அவரது டுவிட்டரில் தெரிவித்திருப்பதாவது, `திரு.விக்ரம், செல்வி.அக்ஷரா ஹாசன், இயக்குநர் ராஜேஷ் M செல்வா  மற்றும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனலுடன் இணையும் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்திற்கும் வாழ்த்துக்கள். புதிதாய்த் துவங்கவிருக்கும்  நம் திரைப்படம் வெற்றிகாண விழைவோம்.' என்று குறிப்பிட்டிருக்கிறார். 

அதன்படி விக்ரம் மற்றும் அக்‌ஷரா ஹாசன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ராஜேஷ் எம்.செல்வா இயக்கும் இந்த படத்தை  கமலின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரிக்கிறது. 

விக்ரமின் 56-வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.