கம்போடியாவிலிருந்து இடம்பெயரும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Thursday November 08, 2018

கம்போடியாவிலிருந்து வேலைக்காக இடம்பெயரும் அந்நாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதாக கடத்தலுக்கு எதிரான தேசிய குழு தெரிவித்துள்ளது. இன்றைய நிலையில், 18 லட்சம் கம்போடிய தொழிலாளர்கள் பல்வேறு நாடுகளில் பணியாற்றி வருகின்றனர். இந்த எண்ணிக்கையை கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில், கூடுதலாக 20,000 தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். 

சமீபத்தில் வெளியான இக்குழுவின் அறிக்கையின் படி, வெளிநாடுகளில் வேலை செய்யும் 1,836,666 தொழிலாளர்களில் 10 லட்சம் (1,039,797) தொழிலாளர்கள் முறையான பதிவுகளுடனும், 8 லட்சம் (796,869) தொழிலாளர்கள் முறையான பதிவுகளின்றியும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் தாய்லாந்து, சிங்கப்பூர், ஹாங்காங், சவுதி அரேபியா, ஜப்பான், மற்றும் தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் பணியாற்றி வருகின்றனர். 

சட்டவிரோதமான முறையில் பணியாற்றும் பெரும்பாலான தொழிலாளர்கள் தாய்லாந்தில் பணியாற்றுவதாக கூறியுள்ள இக்குழுவின் துணைத்தலைவர் சோவ் புன் எங், அத்தொழிலாளர்கள் பாதிக்கப்படக்கூடிய நிலைமையிலும் சுரண்டல், தடுப்புக்காவல், நாடுகடத்தல் உள்ளிட்டவற்றை எதிர்கொள்ளும் நிலையிலும் வாழ்வதாக கூறியுள்ளார். 

“முன்பு ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் 100 கம்போடிய தொழிலாளர்கள் தாய்லாந்து அதிகாரிகளால் நாடுகடத்தப்படுவார்கள். இப்போது, கம்போடியா மற்றும் தாய்லாந்து அரசுகளிடையே தொழிலாளர்களை பதிவு செய்யும் வேலைகள் நடப்பதால் நாடுகடத்தும் எண்ணிக்கை குறைந்துள்ளது” என்கிறார் இடம்பெயரும் தொழிலாளர்களின் ஒருங்கிணைப்பு குழு துணை இயக்குனர் சின் நம் யோங்.  

முறையான ஆவணங்களின்றி சட்டவிரோத பாதையில் தாய்லாந்து செல்லும் பல தொழிலாளர்கள் இடைத்தரகர்களால் ஏமாற்றுப்படுவதை கம்போடியாவின் கடத்தலுக்கு எதிரான தேசிய குழுவின் துணைத்தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இந்த நிலையில், தாய்லாந்தில் பணியாற்றும் கம்போடிய தொழிலாளர்களை பாதுகாக்கும் விதமாக கம்போடிய தொழில்துறை அமைச்சர் இத் சம்ஹெங் முன்னிலையில் ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளது. அதில் பேசிய சம்ஹெங், “இழுத ஒப்பந்தம் தாய்லாந்தில் பதிவுகளற்ற நிலையில் இருக்கும் கம்போடிய தொழிலாளர்களுக்கு உதவும், அத்துடன் நாடுகளுக்கிடையே நடக்கும் மனித கடத்தலை எதிர்கொள்ள துணைப்புரியும்” என குறிப்பிட்டுள்ளார். 

கம்போடியாவின் மனிதவள சங்கம், கம்போடிய ஆட்சேர்ப்பு முகவர்களின் சங்கம் மற்றும் தாய்லாந்து- கம்போடிய உறவு சங்கம் இடையே இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. 

படம் 01: புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்வில் கம்போடிய தொழில்துறை அமைச்சர்

படம் 02: தாய்லாந்திலிருந்து நாடுகடத்தப்பட்ட கம்போடிய தொழிலாளர்கள்