கருணாநிதி உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்!

Tuesday August 07, 2018

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக காவேரி மருத்துவமனை புதிய மருத்துவ அறிக்கை வெளியிட்டுள்ளது. 

காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதிக்கு கடந்த 11 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவரது உடல்நிலை நேற்று மாலை முதல் கவலைக்கிடமாக உள்ளது. நேற்று மாலை வெளியான மருத்துவ அறிக்கையில், கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு இருப்பதாக கூறப்பட்டிருந்தது.

இன்று காலை முதல் தொடர்ந்து பதற்றமான சூழல் நீடித்து வரும் நிலையில், பிற்பகலில் ஸ்டாலின், அழகிரி, கனிமொழி உள்ளிட்ட கருணாநிதி குடும்பத்தினர் மற்றும் திமுக நிர்வாகிகள் முதல்வர் எடப்பாடியை சந்தித்து பேசினர்.

தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த போலீஸ் டிஜிபி ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார். அனைத்து காவல் ஆணையர்கள், துணை ஆணையர்கள், காவல்துறை துணை தலைவர்கள், மண்டல ஐஜிக்கள், எஸ்.பிக்கள் அனைவருக்கும் டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், கருணாநிதியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக காவேரி மருத்துவமனை புதிய அறிக்கை வெளியிட்டுள்ளது. சில மணி நேரங்களாக கருணாநிதியின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.