கருணாநிதி சிலை திறப்பு விழாவில் மின்சார திருட்டு-ஜெயகுமார்

செவ்வாய் டிசம்பர் 18, 2018

கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்காக தி.மு.க.வினர் மாநகராட்சி மின்சாரத்தை திருடியுள்ளதாக அமைச்சர் ஜெயகுமார் செல்போனில் எடுக்கப்பட்ட பட ஆதாரத்துடன் குற்றம் சாட்டியுள்ளார்.
முடக்கியுள்ளோம்.

சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழகத்தில் அ.தி.மு.க. அரசு, முதலமைச்சர், அமைச்சர்கள் எல்லோரும் தமிழகத்தின் உரிமைக்காகக் குரல் கொடுத்து பேராடி கொண்டிருக்கிறோம்.

மேகதாது, மீனவர்கள் பிரச்னை, கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று பல்வேறு வகையில் குரல் கொடுத்துப் போராடி வருகிறோம். மத்திய அரசோடு இணக்கமாக இருந்து நிதி பெற்று வரும் நிலையில் மத்திய அரசு, மாநில அரசுக்கு விரோதமாக நடக்கின்ற சூழ்நிலையிலும் கூட எங்கள் குரல் ஓங்கி ஒலிக்கிறது. மேகதாது விஷயத்தில் பாராளுமன்றத்தை அ.தி.மு.க. எம்.பிக்கள் முடக்கியுள்ளோம். கடந்த காலத்திலும் பாராளுமன்றம் முற்றிலும் முடக்கப்பட்டது உங்களுக்குத் தெரியும்.

தற்போது பல்வேறு கட்சித் தலைவர்கள் சென்னைக்கு வந்தார்கள். கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கு மேகதாது குறித்து யாராவது பேசினார்களா? கஜா புயலுக்கு மத்திய அரசு நிதி தர வேண்டும் என்று கேட்டார்களா, கேட்கவில்லை. ஆந்திர முதல்வர் வந்தார். ஆந்திராவில் தமிழர்களுக்கு பாதுகாப்பு இல்லை. எதிர்காலத்தில் தமிழர்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படாது என்று சந்திரபாபு நாயுடு உறுதியளித்தாரா ? முன்னாள் முதல்வர் கருணாநிதி கூடா நட்பு கேடாய் முடியும் என்றுதெரிவித்தார். இந்தக் கூடா நட்பு கேடாகதான் முடியும்.

இவர்களால் தமிழ்நாட்டுக்கு ஒரு நன்மையும் வரப்போவதில்லை. இலங்கையில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள். அவர்களுக்குச் சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்றுள்ளார்கள். எதிர்காலத்தில் தமிழர்களை அழிக்க இந்தக் கூட்டணி கைகோர்த்துள்ளதா? இதுதான் எங்களின் கேள்வி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக ஸ்டாலின் தெரிவித்த கருத்து குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், உள்ளத்தில் ஒன்றும் உதட்டில் ஒன்றும் பேசும் பழக்கம் எங்களுக்கு கிடையாது. ஆனால் தி.மு.க.வை பொறுத்தவரை இது கைவந்த கலை. இன்று ஆட்சிக்கே வரவில்லை. ஆனால் ஒரு டீ கடை, வடை கடை, பிரியாணி கடைஎதையும் விடுவதில்லை. ஓட்டுக் கேட்பதற்கு பதில் மன்னிப்புதான் கேட்கவேண்டிய நிலையில் ஸ்டாலின் உள்ளார். தி.மு.க. தலைவர் சிலை திறப்பு விழாவிற்கு  பெரிய பெரிய கட்அவுட் வைத்தனர். இந்த கட் அவுட்டுக்குச் சென்னை மாநகராட்சியின் மின்சாரத்தை திருட்டுத் தனமாக எடுத்துள்ளனர். இதற்கான அனைத்து ஆதாரங்களையும் எடுத்துள்ளோம். கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம்.

அதிகாரம் இல்லாத நிலையில் அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளனர் என்று ஆதாரப்பூர்வமான காட்டியுள்ளேன். மக்கள் இதனைத் தெரிந்து கொள்ள வேண்டும். இது தொடர்பாக தி.மு.க.வினர் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும்.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.