கருணாஸ் மீது நடவடிக்கை - எச்.ராஜாவை கைது செய்யாதது ஏன்?

ஞாயிறு செப்டம்பர் 23, 2018

கருணாஸ் மீது நடவடிக்கை எடுத்த தமிழக அரசு எச்.ராஜாவை கைது செய்யாதது ஏன்? என்று சீமான் நிருபர்களிடம் அளித்து பேட்டியில் கூறியுள்ளார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஒரு லட்சம் பனை விதைகள் நடும் திட்டம் நடைபெற்றது.

அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையை அடுத்த நெடுங்குன்றம் பகுதியில் பனை விதைகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழர்களின் அடையாளமான பனை மரத்தை இன்று 50, 100 ரூபாய்க்கு விற்பனை செய்யும் நிலை உள்ளது. பனை மரத்தின் அருமை தெரியாமல் இளைய தலைமுறையினர் உள்ளனர். ஒரு கிணற்றை சுற்றி பனைமரங்கள் இருந்தால் தண்ணீர் வற்றாது என்று நம்மாழ்வார் கூறி இருக்கிறார்.

இதனை உணர்த்தும் வகையிலேயே பசுமை திட்டமான இதனை நாம் தமிழர் கட்சி கையில் எடுத்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து 5 ஆயிரம் பனை விதைகளையும் வாங்கி வந்துள்ளோம். இதனையும் நட்டுள்ளோம். புளி, வேம்பு, பூவரசு, புங்கை மரக் கன்றுகளையும் நட்டுள்ளோம்.

கருணாஸ் சாதி உணர்வை தூண்டிய குற்றச்சாட்டுக்காக கைது செய்யப்பட்டுள்ளார் என்றால், எச்.ராஜா மத உணர்வை தூண்டும் வகையில் பேசவில்லையா? காவல் துறை  அதிகாரியை தரக்குறைவாக பேசியதாக கருணாஸ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எச். ராஜாவும் அப்படித்தான் பேசினார். கருணாசை கைது செய்தது போல எச்.ராஜாவை ஏன் கைது செய்யவில்லை. அரசுக்கு எதிராக செயல்பட்டதால் கருணாஸ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எச்.ராஜா அதிகாரத்தில் இருக்கும் கட்சியின் தேசிய செயலாளர் என்பதால் தமிழக அரசு கைவைக்க தயங்குகிறது.இவ்வாறு சீமான் கூறினார்.