கர்நாடகத்திற்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதித்துப் போராட வேண்டும்!

திங்கள் ஜூலை 02, 2018

காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதை ஏற்க முடியாது” என்று நேற்று (30.06.2018) கர்நாடக முதலமைச்சர் தலைமையில் பெங்களூருவில் கூடிய அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப் போவதாகவும், நாடாளுமன்றத்தில் கர்நாடக உறுப்பினர்கள் போராடப் போவதாகவும் அத்தீர்மானம் கூறுகிறது.

உச்ச நீதிமன்றத்தின் காவிரித் தீர்ப்பை நாடாளுமன்றத்தில் வைத்து - விவாதித்து அதில் பெரும்பான்மை அடிப்படையில்தான் நிறைவேற்றியிருக்க வேண்டும், அவ்வாறில்லாமல் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நேரடியாக ஏற்க முடியாது என்றும் அத்தீர்மானத்தில் கூறியுள்ளார்கள்.

இப்பொழுது, கர்நாடகத்தின் வெளிப்படையான காவிரி அணைகள் நான்கிலும் தண்ணீர் நிரம்பி – அணைகள் உடையாமல் இருப்பதற்காக மிகை நீர் திறந்துவிடப்பட்டிருக்கிறது. கபிணி அணை உடைந்துவிடும் என்ற அச்சத்தில் 25,000 கன அடி தண்ணீர் திறந்துவிட்ட வேளையில், மேற்படி தீா்மானம் கர்நாடக அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. காவிரிச் சிக்கல் என்பது தண்ணீர்ச் சிக்கல் அல்ல – அது கன்னடர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலே உள்ள இனச்சிக்கல் என்பதை கர்நாடக அரசும், அனைத்துக் கட்சிகளும் மீண்டும் உணர்த்தியுள்ளன.

மேற்படி தீர்மானம், இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது! உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது! இப்படிப்பட்ட தீர்மானம் நிறைவேற்றிய கூட்டத்தில், நடுவண் அரசின் மூத்த அமைச்சர்கள் அனந்தகுமார், சதானந்த கவுடா ஆகியோர் கலந்து கொண்டு தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்துள்ளார்கள். அவர்கள், தமிழ்நாட்டிற்கும் சேர்த்துத்தான் நடுவண் அமைச்சர்களா? அல்லது அரசமைப்புச் சட்ட உரிமை கோரப்படாத ஒதுக்கப்பட்ட (Aparthied)  இனத்தின் தாயகமாக தமிழ்நாட்டை நடுவண் அரசு வைத்திருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது! நாட்டின் தலைமையமைச்சர் நரேந்திர மோடி, இதற்கு விடை சொல்ல வேண்டும்!

மேற்படி சட்டவிரோதத் தீர்மானத்தை நிறைவேற்றியவர்கள், இந்தியத்தேசியம் பேசக் கூடிய “ஒற்றை பாரத மாதா” புகழ் பாடக் கூடிய காங்கிரசு, பா.ச.க., மதசார்பற்ற சனதா தளக் கட்சித் தலைவர்கள் என்பது கவனத்திற்குரியது! அவர்கள் பேசும் இந்தியத்தேசியம் – பாரததேசியம் ஆகியவற்றில் தமிழ்நாட்டுக்கு இடமில்லை, கர்நாடகத்தின் கன்னட இனவெறிச் செயல்களுக்குத் தான் இடமிருக்கிறது என்பதை அவர்களே வெளிப்படுத்திக் கொள்கிறார்கள்.

இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கும், உச்ச நீதிமன்றத்திற்கும் எதிராக இனவெறி அடிப்படையில் நடந்த கர்நாடக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்ட நடுவண் அமைச்சர்கள் அனந்தகுமார் மற்றும் சதானந்த கவுடா ஆகியோரை, தலைமையமைச்சர் நரேந்திர மோடி உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும். அவ்வாறு பதவி நீக்கம் செய்யவில்லையென்றால், நரேந்திர மோடி தமிழர்களுக்கு எதிரான கன்னட இனவெறியை ஆதரிக்கிறார் என்று பொருளாகும்!

நடுவண் அரசில் காங்கிரசு இருந்தாலும், பா.ச.க. இருந்தாலும் நீண்ட நெடுங்காலமாக காவிரி வழக்கில் – காவிரித் தீர்ப்பாயம், உச்ச நீதிமன்றம் ஆகியவை வழங்கிய எந்தத் தீர்ப்பையும் இந்திய அரசு செயல்படுத்தவில்லை என்ற துணிச்சலில்தான் கர்நாடகத்தின் கன்னட இனவெறிச் செயல்கள் தீவிரமடைகின்றன.

காவிரித் தீர்ப்பாயம் வழங்கிய இறுதித் தீர்ப்பை அப்படியே செயல்படுத்தும் வகையில், “காவிரி மேலாண்மை வாரியம்” அமைக்கும் முன்மொழிவைத்தான் நாடாளுமன்றத்தில் நடுவண் அரசு வைத்து, தேவைப்படும் திருத்தங்களை செய்திருக்க வேண்டும் என்பதுதான் “மாநிலங்களுக்கு இடையிலான தண்ணீர்த் தகராறுச் சட்டம் – 1956”இன்படி சட்டத்தேவையாகும். அந்த இறுதித் தீர்ப்பை எதிர்த்து, கர்நாடகம் போட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் அந்த இறுதித் தீர்ப்பின் பகுதிகளை ஏற்றுக் கொண்டு, அத்தீர்ப்புக்குப் பதிலாக புதிய தீர்ப்பை வழங்கியபின் அந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நாடாளுமன்றத்தில் வைக்கக்கூடிய சட்டத்தேவை எதுவுமில்லை! உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நாடாளுமன்றம் விவாதித்துதான் செயல்படுத்த வேண்டும் என்ற சட்டக் கட்டாயம் எப்போதும் இல்லை!

இந்நிலையில், தமிழ்நாடு அரசு, கர்நாடகத்தின் இனவெறிச் செயல்களை எதிர்கொண்டு சட்டப்படியான தமிழ்நாட்டு உரிமையை மீட்பதற்கு என்ன அரசியல் மற்றும் சட்ட நடவடிக்கைகளை எடுக்கப்போகிறது?

கர்நாடக அனைத்துக் கட்சித் தீர்மானத்திற்கு ஒரு கண்டனத்தைக் கூட தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவிக்கவில்லை! காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதற்கு முன்பாகவும், அதன் செயல்பாடுகள் தொடங்குவதற்கு முன்பாகவும் “வெற்றி விழா” கொண்டாடி, தமிழ்நாட்டு மக்களைத் திசைதிருப்பி வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, இப்பொழுது என்ன செய்யப் போகிறார்?

கன்னட இனவெறிச் செயல்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், ஒரு வாரம் கர்நாடகத்திற்கு எதிராக தமிழ்நாடு அரசு பொருளாதாரத் தடை விதித்து தமிழ்நாட்டுக்கும் கர்நாடகத்துக்கும் இடையே எந்தவகைப் பொருளாதாரப் போக்குவரத்தும் இல்லாமல் செய்ய வேண்டும்! தமிழ்நாடு அரசு இந்த சனநாயகப் போராட்டத்தை முன்னெடுக்கவில்லை என்றால், முதன்மை எதிர்க்கட்சியான தி.மு.க. அனைத்துக் கட்சிகளையும், அனைத்து உழவர் அமைப்புகளையும், மற்றுமுள்ள அமைப்புகளையும் ஒருங்கிணைத்து கலந்தாய்வு நடத்தி, ஒரு வாரம் கர்நாடகத்திற்கு எதிரான பொருளாதாரத் தடைப் போராட்டத்தை நடத்த முன்வர வேண்டுமென்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

நாளை (02.07.2018), புதுதில்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி சூன் மாதத்திற்குரியத் தண்ணீரையும், சூலை மாதம் முதல் பத்து நாட்களுக்குரியத் தண்ணீரையும் திறந்துவிட ஆணையிட வேண்டும். அவ்வாறு ஆணையிட வில்லை என்றால், இந்திய அரசைக் கண்டித்து ஒரு வார காலத்திற்கு தமிழ்நாட்டில் இந்திய அரசு அலுவலகங்களை மூடும் போராட்டத்தை அனைத்துக் கட்சிகளும் நடத்த வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

  பெ. மணியரசன்