கர்நாடக மாநிலத்துக்கு தனி மூவர்ண கொடி!

புதன் பெப்ரவரி 07, 2018

அரசின்  சின்னத்துடன்  கர்நாடக மாநிலத்துக்கு மஞ்சள், வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்கள் அடங்கிய தனி மூவர்ண கொடியை 9 பேர் கொண்ட குழு பரிந்துரைத்துள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. கர்நாடகா மாநிலத்துக்கு தனியாக ஒரு கொடி உருவாக்கப்படும் என்று முதல்- மந்திரி சித்தராமையா ஏற்கனவே அறிவித்து இருந்தார்.

கொடியை வடிவமைப்பதற்காக 9 பேர் கொண்ட குழுவையும் அவர் அமைத்து இருந்தார். இந்த குழு அதற்கான பரிந்துரையை மாநில அரசிடம் சமர்ப்பித்து உள்ளது.

மஞ்சள், வெள்ளை மற்றும் சிவப்பு ஆகிய மூன்று நிறங்களில் கொடி இருக்கும். கொடியின் மத்தியில் வெள்ளை நிறம் இருப்பதுடன் மாநில அரசின் லோகோ இடம் பெற்று இருக்கும் என்று அந்த குழுவில் இடம் பெற்றுள்ள உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

இந்த பரிந்துரைக்கு அரசியல் அமைப்பு அல்லது சட்ட விதிகளில் தடைகள் இருக்கும் என்றால் நாங்கள் அறிக்கையை சமர்ப்பித்து இருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

பா.ஜனதா இதற்கு ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்த இருந்தது. தங்களிடம் கலந்து ஆலோசிக்காமல் குழு பரிந்துரை செய்து இருப்பதாக கன்னட பக்ஷா என்ற அமைப்பு தெரிவித்து இருக்கிறது.

முதல்-மந்திரி சித்தராமையா கூறும் போது, கர்நாடக மாநிலத்துக்கு தனி மூவர்ண கொடியை வடிவமைப்பது தொடர்பாக பரிந்துரை குழுவின் அறிக்கை கிடைத்தது. இந்த அறிகை மந்திரி சபை கூட்டத்தில் வைக்கப்படும் என்றார்.