கல்லில் நார் உரிக்கின்றது சர்வதேசம் தமிழர்களுக்கு உரிமை கிடைக்குமா?

Sunday November 19, 2017

ஈழ விடுதலையைக் கனவாகச் சுமந்து விதையாகிப் போனவர்களின் வீரமிகு மாதமிது. தங்கள் இனம் நிம்மதியாக, சுதந்திரமாக வாழவேண்டும் என்பதற்காக தமிழீழம் ஒன்றே இலட்சியமாக வரிந்துகொண்டு, தலைவன் காட்டிய வழியில் நடந்து ஈழத்தின் விடுதலையை உலகெங்கும் முரசறைந்தவர்கள் எங்கள் மாவீரர்கள். அவர்கள் அறைந்த முரசுதான் ஈழ விடுதலைப் போராட்டத்தில் உலக நாடுகள் உள்நுழைய வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியது.

இப்போது ஆயுதம் தாங்கிய விடுதலைக்கான போராட்டம் இடைநிறுத்தப்பட்டிருக்கின்றது. ஆனாலும் விடுதலைக்கான தமிழர்களின் உரிமைக் குரல் இன்றும் உலகெங்கும் ஒலித்துக்கொண்டே இருக்கின்றது. இந்தக் குரல்களையும் ஒடுக்குவதற்கு சிங்கள தேசம் இன்றும் தனது பயங்கரவாதக் கரங்களை நீட்டியபடியேதான் இருக்கின்றது. இதனையும் தாண்டித்தான் தமிழர்கள் தங்கள் விடுதலைக்கான பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கின்றார்கள். 

சிறீலங்காவின் புதிய ஆட்சியாளர்கள் நல்லிணக்கமானவர்கள் என்று பட்டயங்களை வழங்கிய சர்வதேசம், தமிழர்களுக்கான உரிமையைத் தந்துவிடுவார்கள் என்று நம்பவைக்க முயல்கின்றது. ஆனால், தமிழர் தேசம் பலமாக இருந்தபோதே தமிழ் மக்களுக்கான உரிமையைத் தரமறுத்த சிங்கள தேசம், இன்று பலமிழந்த நிலையில் தமிழர்களுக்கு நீதியான தீர்வைத் தந்துவிடப்போவதில்லை. அல்லது சுதந்திரமான வாழ்விற்கு அனுமதிக்கப்போவதில்லை. இன்னும், இன்னும் ஒடுக்கி தமிழர்களின் வாழ்வியலை இல்லாமல் செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்து அழிக்கவே அது முயலும். அதனையேதான் அது இப்போது நல்லிணக்கம் என்ற பெயரில் அது செய்கின்றது.

ஆனால், கல்லில் நார் உரிக்க முடியுமென்று இன்னும் நம்புகின்றது சர்வதேசம். அல்லது நம்புவதுபோல் தமிழர்களுக்கு பாவனை செய்கின்றதோ தெரியவில்லை. சிங்கள ஆட்சியாளர்களும் தமிழ் மக்களின் நிலைமைகளைப் புரிந்துகொள்ளப்போவதில்லை. பெளத்த மதவாதிகளும் தமிழ் மக்களுக்கான உரிமையை வழங்க அனுமதிக்கப்போவதில்லை. ஆனால் பாமர சிங்கள மக்கள் தமிழ் மக்களின் உரிமைகளையும், நிலைமைகளையும் புரிந்துகொள்வார்கள். அவர்களுக்கு புரியவைப்பதற்காகத்தான், தமிழ் மக்களின் பிரச்சனைகளை சிங்கள மக்களுக்கு எடுத்துச் சென்று கூறுவதற்காகத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விடுதலைப் புலிகள் உருவாக்கினார்கள். 2009 வரை அது அதனையேதான் சிறீலங்கா நாடாளுமன்றம் ஊடாகச் செய்துகொண்டிருந்தது. ஆனால், 2009ற்குப் பின்னர் அது சிங்கள மக்களுக்கு என்ன பிரச்சனை என்பதை தமிழ் மக்களுக்கு எடுத்துவந்து கூறும் ஒரு ‘சிங்களத் தேசியக் கூட்டமைப்பாக’ மாற்றம் கண்டிருக்கின்றது.

30 வருட ஜனநாயக் போராட்டத்தினாலும்,30 வருட அர்ப்பணிப்பு நிறைந்த ஆயுதப் போராட்டத்தின் மூலமும் பெறமுடியாத தீர்வை அல்லது உரிமையை அரசாங்கத்துடன் ஒட்டிக்கொண்டிருந்து 30 நாட்களுக்குள் எட்டிப்பிடித்துவிட்டதாக சிறுபிள்ளைத் தனமாக கொக்கரிக்கின்றது கூட்டமைப்பு. ‘இனப்பிரச்சினைக்கான தீர்வினைப் பெறும் தருணத்தை எட்டியுள்ளதாகவும் பிளவுபடாத நாட்டிற்குள் சமனான அதிகாரப்பகிர்வுகளை வலியுறுத்தியுள்ளோம். இதில் வெற்றியடையலாம். வெற்றியடைவதற்காகவே பயணித்துக் கொண்டிருக்கின்றோம்’ என்று சிங்கள தேசத்தின் அரசியல் ஏமாற்றுத் தனத்தினையே புரிந்துகொள்ள முடியாத கற்றுக்குட்டியாக இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், புதிய அரசியல் திட்டத்தில் உள்ள தமிழினத்தின் இருப்பிற்கே பெரும் பாதகத்தை ஏற்படுத்தக்கூடிய ‘பெளத்தத்துக்கு முன்னுரிமை என்ற விடயம் தமிழர்களுக்கு பிரச்சினையில்லை’ என்று மிகச் சுலபமாக நாடாளுமன்றத்தில் கூறுகின்றார்.?

தமிழர்களின் பிரச்சனையை சர்வதேசத்தின் மத்தியில் எடுத்துச்சென்று தங்கள் உரிமையைப் பெற்றுவிட வேண்டும் என்று தமிழர்கள் உலகெங்கும் கடுமையாக முயன்றுகொண்டிருக்கும் நிலையில் ‘தேசிய பிரச்சினையானது உள்நாட்டில் தீர்க்கப்பட வேண்டும். அதனுVடாக, நாட்டின் மீதான சர்வதேச அழுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டுமென நாங்கள் விரும்புகின்றோம். இந்தப் பிரச்சினையை அவ்வாறு உள்நாட்டில் தீர்க்கப்படாவிட்டால், சிறீலங்கா மீதான சர்வதேச அழுத்தம் மேலும் மோசமடைவதைத் தவிர்க்க முடியாது’ என்று இவர்கள் தமிழர்களின் பிரதிநிதிகளாக சிங்களவர்களின் பிரதிநிதிகளா என்று அச்சப்படும் அளவிற்கு சர்வதேசம் இந்தப் பிரச்சனைக்குள் முழுமையாக தலையைக் கொடுத்துவிடுமோ என்று கவலைப்படுகின்றார் சம்பந்தர். வடக்கு, கிழக்கு தமிழர் தாயகத்திற்கு படையயடுக்கும் உலகப் பிரதிநிதிகள், தமிழர்களின் பிரதிநிதிகளாக சந்திப்பது இவர்களைத்தான். இவர்கள் அவர்களிடம் எவ்வாறான கருத்துக்களை எடுத்துவைப்பார்கள் என்பதற்கு கண்ணாடி தேவையில்லை.

எனவே, மைத்திரி போடும் சதையற்ற எலும்புத் துண்டை வேண்டுமானால் சம்பந்தன், சுமந்திரன் போன்றவர்கள் கெளவிக்கொள்ளலாம். ஆனால், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்களையும், 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களையும் இந்த விடுதலைக்கான போராட்டத்தில் அர்ப்பணித்த தமிழ் மக்கள் சிங்களத்தின் இந்த எலும்புத் துண்டுகளை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. மாடு இளைத்திருந்தாலும் கொம்புகள் இளைக்காது. தமிழர்களின் இலட்சியமான தமிழீழத்திற்காகப் போராடிய விடுதலைப் புலிகளை அழிக்க இந்த உலகத்திடம் வலிமையான ஆயுதங்கள் இருந்திருக்கலாம். ஆனால் தமிழர்களின் இலட்சியத்தை அழிக்கும் எந்த ஆயுதத்தையும் இந்த உலகத்தால் உருவாக்க முடியாது. தமிழர்கள் வாழும் காலம் முழுவதும் மாவீரர்களின் கனவைச் சுமந்தபடி அந்த இலட்சியம் கனன்றுகொண்டே இருக்கும்.  

ஆசிரியர் தலையங்கம்
நன்றி: ஈழமுரசு