காகிதப் புலிகளும், தமிழீழ தேசிய விடுதலைச் சித்தாந்தமும் - கலாநிதி சேரமான்

Wednesday September 06, 2017

எந்தவொரு தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு ஆதர்சமாக அமைவது அப்போராட்டத்தை வழிநடத்தும் சித்தாந்தமாகும். ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கும் அமைப்பு அழிக்கப்பட்டாலும், அப்போராட்டம் மீண்டும் முளைவிடுவதற்கு அல்லது புதுவடிவில் முன்னெடுக்கப்படுவதற்கு அச் சித்தாந்தமே காலாக இருப்பதுண்டு. இது தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் விடயத்திலும் பொருந்தும்.

1972ஆம் ஆண்டில் இருந்து தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்திற்குத் தலைமையேற்று அதனை முன்னெடுத்து வந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் செயற்பாடுகள் மெளனிக்கப்பட்டு ஏறத்தாழ எட்டரை ஆண்டுகள் ஆகிவிட்டன. தமிழீழத்திலும் சரி, புலம்பெயர் தேசங்களிலும் சரி, தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரைப் பயன்படுத்திப் பல்வேறு தரப்பினரால் அடிக்கடி அறிக்கைப் போர்கள் தொடுக்கப்பட்டாலும், இவையயல்லாம் காகிதப் புலிகளால் நிகழ்த்தப்படும் காகிதப் போர்கள் என்பது எம்மவர்களுக்கு மட்டுமன்றி சிங்கள அரசுக்கும்கூட நன்கு தெரியும்.

இதனால் தான் தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியில் தாம் தோற்கடித்து விட்டதாகவும், இனித் தமிழீழ விடுதலைப் புலிகளால் நாட்டில் தலைதூக்க முடியாது என்றும் கடந்த எட்டரை ஆண்டுகளாக சிங்களம் மார்தட்டி வருகின்றது. கடந்த வாரம் கூட பிறேசில் நாட்டில் தனக்கு எதிராகத் தொடரப்பட்ட போர்க்குற்ற வழக்கை அடுத்து அந்நாட்டை விட்டு அவசர அவசரமாக முன்னாள் சிங்களத் தரைப்படைத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய தப்பியோடிய பொழுது, அது தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட சிங்கள தரைப்படைப் பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனிவிரத்தின, தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியில் தமது படைகள் தோற்கடித்ததை அங்கு நின்ற செய்தியாளர்களுக்கு நினைவூட்டிக் கொள்ளத் தவறவில்லை. அதேநேரத்தில் விரும்பியோ, விரும்பாமலோ இன்னுமொரு விடயத்தையும் அவ்விடத்தில் பிரிகேடியர் செனிவிரத்தின அவர்கள் ஒப்புக் கொண்டார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் வழிகாட்டியாகத் திகழ்ந்த சித்தாந்தம் உயிர்ப்புடன் இருக்கின்றது என்பதும், அதுவே ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவிற்கு எதிரான வழக்கு உட்பட தமது அரசுக்கும், அதன் ஆயுதப் படைகளுக்கும் எதிரான அரசியல், இராசரீக மற்றும் சட்ட நடவடிக்கைகள் புலம்பெயர் தேசங்களில் இடம்பெறுவதற்கும் காரணமாக இருக்கின்றது என்பதுமே அவர் அளித்திருக்கும் ஒப்புதல் வாக்குமூலமாகும்.

உண்மையில் ஜெகத் ஜெயசூரியவிற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் முன்னின்று உழைத்தவர்கள் ஒரு சில தமிழர்கள் மட்டுமே. அதுவும் இவ்வழக்குத் தொடரப்படுவதற்குக் காரணமாக அமைந்தவர் ஐ.நா. மன்றின் முன்னாள் ஆலோசகரும், அனைத்துலக சட்ட நிபுணருமாகிய தமிழர் அல்லாதவரான வேற்று இனத்தவராகிய யஸ்மின் சூக்கா அவர்களே.

இப்படித்தான் சிங்கள அரசுக்கு எதிராகப் புலம்பெயர் தேசங்களில் ஒவ்வொரு அரசியல், இராசரீக மற்றும் சட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வாறான நடவடிக்கைகளைப் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தனிநபர்களே முன்னின்று மேற்கொள்வதுண்டு. விரல்விட்டு எண்ணக்கூடிய சந்தர்ப்பங்களில் மட்டும் இவ்வாறான நடவடிக்கைகளின் பின்னணியில் தமிழ்த் தேசிய அமைப்புக்கள் இருப்பதுண்டு. அவ்வாறு தமிழ்த் தேசிய அமைப்புக்களால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் கூட, அவ் மைப்புக்களின் அச்சாணிகளாகத் திகழும் ஒரு சில செயற்பாட்டாளர்களின் கடின உழைப்பின் வெளிப்பாடாகவே அமைவதுண்டு.

இதுதான் புலம்பெயர் தேசங்களில் நிலவும் அரசியல் யதார்த்தமாகும். ஒரு காலத்தில், அதுவும் 2009 வைகாசி 18இற்கு முன்னர், புலம்பெயர் தேசங்களில் முன்னெடுக்கப்பட்ட சகல அரசியல் செயற்பாடுகளும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவாலும், அதன் உப அமைப்புக்களாலுமே மேற்கொள்ளப்பட்டன. ஆனால் 2009 வைகாசி 18இற்குப் பின்னர் நிலைமை அவ்வாறு இல்லை. இதற்குக் காரணம் போராளிகள் என்று தம்மை அடையாளப்படுத்தியவாறு இக்கட்டமைப்புக்களை உடைப்பதற்குக் காகிதப் புலிகளும், அவர்களின் அடிவருடிகளும் மேற்கொண்ட நடவடிக்கைகளே.

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகத்தின் கீழ் தமிழீழ தாயகப் பகுதிகள் இயங்கிய பொழுது போராளிகள் என்ற சொற்பதம் புனிதத்தன்மை மிகுந்த ஒன்றாகவே விளங்கியது. போராளிகள் என்பவர்கள் ஒழுக்கம், கட்டுப்பாடு, கொள்கைத் திட்டம் ஆகியவற்றிற்கு உட்பட்டவர்களாகத் திகழ்வார்கள் என்ற எண்ணமே அன்று மக்களிடையே மேலோங்கியிருந்தது. போராளிகளும் அவ்வாறுதான் நடந்து கொண்டார்கள்.

இன்று நிலைமை அவ்வாறு இல்லை. இதற்கும் காகிதப் புலிகளே காரணம். இதில் வேடிக்கை என்னவெனில், போராளிகள் என்று தம்மைத் தாமே அடையாளப்படுத்திக் கொள்ளும் இந்தக் காகிதப் புலிகள் எவருமே கடந்த எட்டரை ஆண்டு காலப்பகுதியில் சிங்களப் படைகளுக்கு எதிராக ஒரு கூழாங்கல்லைக் கூடத் தூக்கியயறிந்தது கிடையாது. அப்படிச் சிங்களப் படைகளை நோக்கிக் கல்லெறியும் திராணிகூட இவர்களிடம் இல்லை.

புலம்பெயர் தேசங்களில் வாழும் ஏனைய தமிழர்களைப் போலவே இவர்களும் வாழ்கின்றார்கள். இவர்களில் ஒரு தொகுதியினரிடம் இயக்கச் சொத்துக்களும் இருக்கின்றன. இறுதி யுத்தத்தில் வெளிநாடுகளில் திரட்டப்பட்ட நிதியில் கணிசமான தொகையும் இவர்களிடமே இருக்கின்றது: வன்னியில் மக்களிடம் பெறப்பட்ட நிதியும் இவர்களின் வசமே உள்ளது. இவ்வாறு இயக்கப் பணத்தில் சொகுசு வாழ்வு வாழும் இவர்கள், கடந்த எட்டரை ஆண்டுகளில் எவ்விதமான அரசியல் பணிகளிலும் ஈடுபட்டது கிடையாது. போட்டி மாவீரர் நாள் நிகழ்வுகளை ஏற்பாடு செய்தல், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாட்டாளர்கள் மீது வன்முறைகளை ஏவி விடுதல், மின்னஞ்சல்கள், இணையத் தொலைபேசி வலையமைப்புக்கள், முகநூல் பக்கங்கள் போன்றவற்றின் ஊடாகத் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் கொலை மிரட்டல் விடுத்தல் போன்றவையே இவர்களின் செயற்பாடுகள் எனலாம்.

இவர்களின் நாசகார நடவடிக்கைகளால் அதிக அளவில் பாதிப்பிற்கு உள்ளாகியிருப்பது பிரான்ஸ் மற்றும் சுவிற்சர்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களும், உணர்வாளர்களுமே.

இதிலும் குறிப்பாகக் கடந்த காலங்களில் புலம்பெயர் தேசங்களில் தமிழ்த் தேசிய எழுச்சியின் சிகரமாக வர்ணிக்கப்பட்ட சுவிற்சர்லாந்து, இன்று சிங்களக் கைக்கூலிகளின் கூடாரமாக மாறியிருப்பதற்கும், இதன் காரணமாகத் தமிழ்த் தேசிய செயற்பாடுகளில் இருந்து சுவிற்சர்லாந்து வாழ் தமிழர்கள் விலகியிருப்பதற்கும் இவர்களே காரண கர்த்தாக்களாவர்.

சுவிற்சர்லாந்து ஜெனீவா நகரில் உள்ள ஐ.நா. மன்றின் முன்பாக நடைபெறும் எழுச்சிப் பேரணிகளில் கடந்த காலங்களைப் போன்று இப்பொழுது பெரும் எண்ணிக்கையில் சுவிற்சர்லாந்து வாழ் தமிழ் மக்கள் பங்கேற்பதில்லை. மாறாக ஐரோப்பிய நாடுகளில் இருந்து, அதுவும் பிரான்ஸ் தேசத்தில் இருந்து, செல்லும் மக்களே அதிக அளவில் ஜெனீவா பேரணிகளில் பங்கேற்கின்றனர். அதனால் தான் என்னவோ, இப்பொழுது பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவிற்குள் ஊடுருவி அதனை உடைப்பதற்கான நடவடிக்கைகளில் போராளிகள் என்ற பெயரில் இயங்கும் காகிதப் புலிகள் ஈடுபடுகின்றார்கள் என்றே எண்ணத் தோன்றுகின்றது.

ஆனாலும் இதனை முறியடித்துத் தமிழீழ தேசிய விடுதலை எழுச்சியை உயிர்ப்புடன் வைத்திருக்கும் ஆற்றல் பிரான்ஸ்வாழ் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களுக்கு உண்டு. ஏனென்றால் அவர்களை வழிநடத்துவது சிங்களம் பெரிதும் அஞ்சும் தமிழீழ தேசிய விடுதலைச் சித்தாந்தமே.

நன்றி: ஈழமுரசு

ஈழமுரசு இதழ் 55, முழுமையாக பார்க்க கீழே அழுத்தவும்.