காசோலையில் தமிழ் கையெழுத்து!

ஞாயிறு டிசம்பர் 30, 2018

புதுடெல்லியில் 1997-ம் ஆண்டு ‘காதல் கோட்டை’ திரைப்படத்தின் இந்திப் பதிப்பின் படப்பிடிப்பு நடந்தது. அப்போது தயாரிப்பாளரால் எனக்கு அளிக்கப்பட்ட காசோலையில் தமிழிலேயே என் பெயரை எழுதச் சொன்னேன்.

பின் அந்தக் காசோலையைப் புதுடெல்லியில் உள்ள தேசிய வங்கி ஒன்றில் வாங்க மறுத்தபோது, நான் விடுவதாக இல்லை. ‘இது இந்தியா! தமிழ் மாநிலத்தின் வரியிலிருந்தும் உங்களுக்கான ஊதியம் தரப்படுகிறது. பல மொழிகளைக் கடன்வாங்கி இந்தி மொழி எனப் பெயரிட்டுக்கொண்ட ஒரு மொழியில் கையெழுத்திட்டால் அதை அனுமதிக்கும் நீங்கள், எந்த மொழியையும் கடன் வாங்காத செம்மொழி தமிழில் எழுதப்பட்ட இந்தக் காசோலையை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்’ என நான் கூறியபோது, அதற்கு அதன் மேலாளர் ‘எங்களிடம் தமிழ் தெரிந்த ஊழியர் இல்லையே... என்ன செய்ய முடியும்?’ எனப் பதிலுரைத்தார்.

‘தமிழ்நாட்டில் இந்தி மட்டுமே பேசத் தெரிந்த ஊழியர்கள் பலர் பணியாற்றும்போது அதை நாங்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறோம். ஆகவே, உடனடியாக நீங்கள் தமிழ்நாட்டிலிருந்து தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களைப் பணியில் அமர்த்துவது கட்டாயம்’ எனச் சொல்லி காசோலையை அவரிடமே தந்துவிட்டு வந்துவிட்டேன். பிறகு என்ன, ஒரு வார காலத்தில் அந்தக் காசோலை ஏற்றுக்கொள்ளப்பட்டு பணம் என் வங்கிக் கணக்கில் வந்துசேர்ந்தது. அன்றிலிருந்து இன்றுவரை காசோலைகளில் தாய்மொழி தமிழிலேயே அனைத்து விவரங்களையும் எழுதுகிறேன்.

கவிஞர் வைரமுத்துவுக்கு ‘ஒன்பது ரூபாய் நோட்டு’ திரைப்படத்தில் பாடல் எழுதிய ஊதியத்தைக் காசோலையாகத் தந்தபோது, தமிழில் எழுதியிருந்ததைக் கண்டு வியந்ததோடு பாராட்டிக்கொண்டே இருந்தார். அன்றிலிருந்து ‘தானும் இனி தமிழிலேயே நிரப்பப்போகிறேன்’ என்றார். இதைச் செய்தாலே தமிழகத்தின் வங்கிகளில் தமிழுக்கான இடத்தை உறுதிப்படுத்த முடியும். இன்னும்கூடத் தங்களின் கையெழுத்தைத் தமிழில் பதிக்கத் தயங்குபவர்களையும், மறுப்பவர்களையும் வைத்துக்கொண்டு நாம் இங்கே என்ன மாற்றங்களைச் செய்துவிட முடியும்?

- தங்கர் பச்சான் எழுத்தாளர், திரைப்பட இயக்குநர்.