காட்டுப்புற மேய்ச்சல் நிலமும், வழி தவறிய ஆடுகளும் - ‘கலாநிதி’ சேரமான்

வியாழன் ஏப்ரல் 14, 2016

கடந்த ஏழு ஆண்டுகளாகப் புலம்பெயர் தேசங்களில் மையம் கொண்டு நிற்கும் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்ட அசைவியக்கத்தை சிதைப்பதற்கு மிகவும் நயவஞ்சகமான வியூகம் ஒன்றை மைத்திரி - ரணில் அரசாங்கம் வகுத்திருப்பதைப் பட்டவர்த்தனமாக்கும் வகையிலான நிகழ்வுகள் அண்மைக் காலங்களில் கட்டவிழ்ந்து வருகின்றன.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், தலைமைச் செயலகம் போன்ற கவர்ச்சிப் பெயர்களைப் பயன்படுத்திக் கடந்த ஏழு ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்டு வந்த சதி நடவடிக்கைகள் அனைத்துமே மண்கவ்விப் போன நிலையில், பிரித்தானியாவில் மாவீரர் நினைவாலயம் ஒன்றை அமைக்கும் பெயரில் இச் சதி வியூகத்தை சிங்களம் வகுத்திருக்கின்றது.

1980களில் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மாவீரர்களின் இறுதி நிகழ்வுகள், அவர்கள் பின்பற்றிய சமய நெறிமுறைகளுக்கு அமைவாகவே நடைபெற்றன.

வீரச்சாவைத் தழுவிய மாவீரர்கள் சைவ சமயத்தவர்களாக இருந்தால் அவர்களின் வித்துடல்கள் சைவ முறைப்படி தகனம் செய்யப்பட்டும், அவர்கள் கிறிஸ்துவ, இஸ்லாமிய மதங்களைச் சார்ந்தவர்களாக இருந்தால் அவர்களின் வித்துடல்கள் புதைக்கப்பட்டும் ஈம நிகழ்வுகள் நடத்தப்பட்டன.

எனினும் 1991 ஆம் ஆண்டின் இறுதியில் இந்நடைமுறையில் தமிழீழ விடுதலைப் புலிகளால் மாற்றம் கொண்டு வரப்பட்டது. மாவீரர்களின் வித்துடல்களைத் தகனம் செய்வதற்கென்று வடிவமைக்கப்பட்ட ஈம நிலங்கள், மாவீரர் துயிலும் இல்லங்களாக மாற்றியமைக்கப்பட்டு அங்கு மாவீரர்களின் வித்துடல்கள் விதைக்கப்பட்டன. பண்டைக் காலத்தில் தமிழர்கள் பின்பற்றிய நடுகல் அமைத்தல், படைப்பள்ளி அமைத்தல், ஈமத்தாளிகளில் மூதாதையர்களைப் புதைத்தல் போன்ற நடைமுறைகளின் தொடர்ச்சியாக மாவீரர்களுக்குக் கல்லறைகள் அமைக்கப்பட்டன.

இந்நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டமைக்குத் தமிழீழ விடுதலைப் புலிகளால் அன்று இரண்டு காரணங்கள் வழங்கப்பட்டிருந்தன. முதலாவது காரணம் மாவீரர்களின் வித்துடல்கள் விதைக்கப்படும் கல்லறைகள் என்றென்றும் உயிர்த்துடிப்புள்ள நினைவுச் சின்னங்களாக அமையும் என்பதால். இரண்டாவது காரணம் வீரச்சாவைத் தழுவும் மாவீரர்களின் இறுதி நிகழ்வுகளில் பங்கு பற்ற முடியாத பெற்றோர், உறவினர், நண்பர்கள் போன்றவர்கள் எதிர்காலத்தில் அவர்களின் கல்லறைகளுக்கு வருகை தந்து அவர்களின் நினைவுகளை மீட்டுக் கொள்ளலாம் என்பதால்.

அதாவது வெறுமனவே பெயர்களைத் தாங்கிய கற் தூண்களைக் கொண்ட கட்டாந்தரைகளாக அல்லாது மாவீரர்களின் வித்துடல்களைத் தாங்கி நிற்கும் விளைநிலங்கள் என்ற வகையில் தமிழீழ தேசத்தின் சுதந்திர வேட்கையையும், மாவீரர்களின் ஈகங்களையும் மீண்டும் மீண்டும் நினைவூட்டி விடுதலைத் தீயைக் கொழுந்து விட்டெரியச் செய்யும் கருவூலங்களாகவே அன்று மாவீரர் துயிலும் இல்லங்கள் அமைக்கப்பட்டன.

தமிழீழ தாயகத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் இன்று சிங்களப் படைகளால் உழுதெறியப்படும், படை முகாம்களாக்கப்பட்டும் புதர்கள் மண்டிய கட்டாந்தரைகளாகவும் மாற்றப்பட்டுள்ள பொழுதும் அங்கே உள்ள ஒவ்வொரு பிடி மண்ணிலும் மாவீரர்களின் சதையும், குருதியும், என்பும் கலந்திருக்கின்றது. அதாவது எந்த மண்ணின் விடுதலைக்காக மாவீரர்கள் மடிந்தார்களோ, அந்த மண்ணோடு மண்ணாக அவர்கள் கலந்திருக்கின்றார்கள். கல்லறைகள் இல்லாத மாவீரர்கள் காற்றோடு காற்றாகவும், கடலோடு நீராகவும் கலந்திருக்கின்றார்கள்.

இவை தவிர மாவீரர் துயிலும் இல்லங்களில் விதைக்கப்படாத மாவீரர்களின் கல்லறைகள் தமிழீழ தாயகத்தின் ஏனைய இடங்களிலும் உள்ளன. போராளிகள் களமாடி வீழ்ந்த வனப்பகுதிகள் பலவற்றிலும், கைவிடப்பட்ட காணிகளிலும் புதர்களாக மூடப்பட்ட நிலையில் உள்ள விளை நிலங்களிலும் பல மாவீரர்கள் மீளாத்துயில் கொள்கின்றனர்.

இவற்றை விட மாவீரர்களின் வித்துடல்களை விதைக்கும் முடிவைத் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை எடுப்பதற்கு முன்னர் வீரச்சாவைத் தழுவிய கிறிஸ்துவ, இஸ்லாமிய மதங்களைச் சேர்ந்த மாவீரர்களின் வித்துடல்கள் அவர்களின் மத முறைப்படி கிறிஸ்துவ - இஸ்லாமிய சேமக்காலைகளில் உள்ள கல்லறைகளில் விதைக்கப்பட்டிருக்கின்றன.

ஆக, மாவீரர்களின் துயிலும் இல்லங்களை மட்டுமே சிங்களத்தால் அழிக்க முடிந்துள்ளதே தவிர, தமிழீழ மண்ணில் மீளாத்துயில் கொள்ளும் மாவீரர்களைத் தமிழீழ மண்ணில் இருந்தும், தமிழீழக் காற்றில் இருந்தும், தமிழீழக் கடலில் இருந்தும் எதிரியால் அகற்ற முடியவில்லை. இவ்வாறு மண்ணோடு மண்ணாகவும், காற்றோடு காற்றாகவும், கடலோடு நீராகவும் தமிழீழ தேசத்தோடு ஒன்றாகக் கலந்திருக்கும் மாவீரர்களுக்கு, மீண்டும் தமிழீழ மண்ணில் நினைவாலயங்களையும், துயிலும் இல்லங்களையும் அமைப்பதே அவர்களுக்கு நாம் செய்யக்கூடிய குறைந்த பட்ச நன்றிக் கடனாகும். இன்று இதற்கான சூழல் தமிழீழத்தில் இல்லாத பொழுதும், அச்சூழலை உருவாக்குவது எமது தலையாய பணிகளில் ஒன்றாகும்.

கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற வடமாகாண சபைத் தேர்தலில் மாவீரர்களின் துயிலும் இல்லங்களை மீண்டும் கட்டியயழுப்பும் உறுதிமொழியுடனேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றது என்பதை இன்று எம்மவர்கள் பலர் மறந்திருந்தாலும், தமிழீழ தாயகத்தில் உள்ள மாவீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் மறந்திருக்க மாட்டார்கள். இதனால் தான் கடந்த ஆண்டு ஐப்பசி மாதம் தனது தேர்தல் தொகுதியான உடுத்துறைப் பகுதிக்கு சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களிடம், உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தை திறந்து, அங்கு மாவீரர்களை நினைவுகூர்வதற்கு வழிவகை செய்து தருமாறு மாவீரர்களின் உறவினர்கள் பலர் கோரிக்கை விடுத்திருந்தார்கள். இக் கோரிக்கையை சிறீலங்கா நாடாளுமன்றத்தில் சுமந்திரன் அவர்களும் பின்னர் முன்வைத்திருந்தார்.

நல்லிணக்கம் பேசி நயவஞ்சக அரசியலில் ஈடுபடும் சுமந்திரன் கூட மாவீரர் துயிலும் இல்லங்கள் மீண்டும் திறக்கப்பட வேண்டியதன் அவசியத்தை நாடாளுமன்றத்தில் வலியுறுத்தும் அளவிற்குத் தமிழீழ தாயகத்தில் உள்ள மக்களின் உணர்வுகள் இருக்கின்றன. இதனைப் புரிந்து கொண்டு இதற்கான புறச்சூழலைத் தோற்றுவிப்பதற்கான பணிகளைத் தமது அரசியல் வேலைத் திட்டங்களில் புலம்பெயர் தமிழ்த் தேசிய அமைப்புக்கள் உள்ளடக்குவது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.

ஈழத்தமிழர்களாகிய நாம் இன்று அலைந்துழலும் சமூகமாக உலகெங்கும் பரந்து வாழ்ந்தாலும், எமது வேர் தமிழீழ தாயக மண்ணிலேயே ஆழப் பதிந்துள்ளது. ஆனால் இதனை மறுதலித்து எம்மை நிரந்தரமாகவே அலைந்துழலும் சமூகம் என்ற நிலைக்குள் வைத்திருப்பதையே சிங்களம் விரும்புகின்றது. அதாவது ஈழத்தீவை விட்டுத் தமிழர்கள் மட்டுமன்றி, அவர்களின் அடையாளங்களும் முற்றாக அகற்றப்பட வேண்டும் என்பதே சிங்களத்தின் நீண்ட நாள் அவாவாகும். இதற்கான வியூகங்களையும் மிகவும் கனக்கச்சிதமாக சிங்களம் வகுத்திருக்கின்றது. இவ் வியூகத்தின் ஓர் வடிவமாகவே பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் காட்டுப் புறத்தில் மாவீரர்களின் நினைவாலயம் ஒன்றை அமைப்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகளை நாம் பார்க்க வேண்டும்.

ஒக்ஸ்போர்ட் என்ற பெயரைக் கேட்டதும் பலரது நினைவில் வரக்கூடியது உலகப் பிரசித்தி பெற்ற ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழகம். இப் பல்கலைக்கழகம் அமைந்திருக்கும் நகரில் மாவீரர்களுக்கு நினைவாலயம் அமைப்பது நல்லது தானே என்று சிலர் கேட்கலாம். ஆனால் யதார்த்தம் அவ்விதம் அல்ல. ஒக்ஸ்போர்ட் என்ற பெயர் தான் உண்மையானதே தவிர, மற்றையவை எல்லாம் வெறும் மாயைகள்.  ஒக்ஸ்போர்ட் பிராந்தியத்தின் காட்டுப் புறம் ஒன்றில் உள்ள மாடு வளர்க்கும் பண்ணையை விலைக்கு வாங்கி, அங்கு உலகத் தமிழர்களின் வரலாற்றைப் பேணிப் பாதுகாக்கப் போவதாகக் கூறிக் கொண்டு மாவீரர் நினைவாலயத்தின் பெயரில் ஒரு மாயா ஜாலம் அரங்கேற்றப்படுகின்றது. இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த மாடு வளர்க்கும் பண்ணை விலைக்கு வாங்கப்பட்டுள்ள பகுதியின் சுற்றுவட்டத்தில் தமிழர்கள் எவருமே வசிப்பதில்லை. இனித்தான் எவராவது குடியேற வேண்டும்.

தவிர, தமிழர்கள் செறிந்து வாழும் இலண்டன் மாநகரில் மாவீரர்களின் நினைவாலயம் ஒன்றை அமைப்பதற்கான சகல வசதிகளையும் கொண்ட கட்டிடம் ஒன்று இருக்கும் நிலையில், அதனை இருட்டடிப்பு செய்து விட்டு இந்த மாயா ஜாலம் அரங்கேற்றப்படுகின்றது.

புலம்பெயர் தேசங்களில் சிதறிக் கிடந்த தமிழ்த் தேசியக் கட்டமைப்புக்களை ஒன்றிணைத்து அவற்றைப் பலமான சக்தியாக மாற்றிய பெருமைக்குரியவர் தளபதி கேணல் கிட்டு. 1989ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து 1992ஆம் ஆண்டு வரை இலண்டனில் வாழ்ந்த அவர், அங்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயலகத்தை நிறுவினார். தளபதி கிட்டு அவர்களால் அனைத்துலக செயலக முகவரியாகப் பயன்படுத்தப்பட்ட கட்டிடம், ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் உருத்திராபதி சேகர் என்பரின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது. இங்கு தான் தளபதி கிட்டுவும் வசித்து வந்தார். மூன்று தளங்களைக் கொண்ட இந்தக் கட்டிடம் இலண்டனில் தமிழர்கள் செறிந்து வாழும் ஈஸ்ற்காம் பகுதியில் உள்ளது. இது உருத்திராபதி சேகர் அவர்களின் பெயரில் பதிவு செய்யப்பட்டதே தவிர, இதற்கான கொள்வனவு அடமானப் பணம் தமிழ்த் தேசியக் கட்டமைப்பாக விளங்கிய ஐக்கிய தமிழர் அமைப்பினாலேயே கொள்வனவு நாள் முதல் செலுத்தப்பட்டு வந்தது. அதாவது மக்கள் பணத்திலேயே இந்தக் கட்டிடத்திற்கான கொள்வனவு அடமானப் பணம் செலுத்தப்பட்டது. இப்பொழுது இந்தக் கட்டிடத்தின் பெறுமதி ஏழு இலட்சம் பவுண்கள்.

தளபதி கிட்டு அவர்கள் வாழ்ந்து, உறங்கி, செயற்பட்ட இடம் என்ற வகையில் மாவீரர்களுக்கான நினைவாலயத்தை அமைப்பதற்கு இவ்விடமே முற்றிலும் பொருத்தமானது. இதற்காக இக்கட்டிடத்தை நாம் மறுசீரமைக்கவோ, அன்றி உடைத்து மீளக்கட்டவோ வேண்டியதில்லை. கட்டிடம் முழுவதையும் ஒரு சமூக மையமாக்கி, அங்கு தளபதி கிட்டு வாழ்ந்து, உறங்கி, செயற்பட்ட அறைகளை நினைவிடங்களாக மாற்றி, அங்கு உள்ளரங்க நினைவுத் தூபி ஒன்றை அமைக்கலாம். மக்களின் பணத்தில் கொள்வனவு செய்யப்பட்டு, மக்களின் பணத்தில் பேணப்பட்ட இந்தக் கட்டிடத்தில் எப்பொழுதோ இந்தப் புனிதப் பணி மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஒரு மாவீரர் குடும்ப உறுப்பினரான உருத்திராபதி சேகர் அவர்கள் இதனைக் கடந்த ஏழு ஆண்டுகளாக ஏன் செய்யவில்லை என்பது நெருடலுக்குரிய ஒன்றாகும்.

யதார்த்தம் இவ்விதம் இருக்கும் பொழுது, தளபதி கிட்டு வாழ்ந்த கட்டிடத்தை நினைவாலயமாக மாற்றியமைப்பதை விடுத்து, எங்கோ ஒரு காட்டுப் புறத்தில் உள்ள மாடு மேய்க்கும் பண்ணையை விலைக்கு வாங்கி, அங்கு நினைவாலயம் என்ற பெயரில் மாயா ஜாலம் செய்வதில் எந்த விதமான அர்த்தமும் இல்லை. இதனை ஒரு வகையில் மக்களின் பணத்தை விரயம் செய்யும் கைங்கரியம் என்றுதான் கருத வேண்டியுள்ளது.

இதனை விட இன்னும் பல ஆபத்தான அம்சங்களும் ஒக்ஸ்போர்ட் காட்டுப் புற மாடு மேய்க்கும் பண்ணையில் உள்ளன. அக் காணியைக் கொள்வனவு செய்திருப்பதாகக் கூறப்படும் அமைப்பின் உறுப்பினர்களில் ஒருவர் கடந்த ஆண்டு தை மாதம் இலண்டனில் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் மைத்திரி அணியை அங்குரார்ப்பணம் செய்து வைத்தவர்.

இக் காணியைக் கொள்வனவு செய்த அமைப்பின் உறுப்பினர்கள் சிலர் வணங்கா மண் கப்பலுக்கான நிதி திரட்டலில் பல மோசடிகளைச் செய்தவர்கள். அதுவும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பல கோடி ரூபா நிதியை சிங்கள அரசாங்கத்திடம் தாரைவார்த்த காந்தலிங்கம் பிறேம் ரெஜி என்ற பெயருடைய கே.பி.ரெஜி அல்லது அறிவன் என்றழைக்கப்படும் நபரின் பினாமிகள் இவர்கள். கே.பி.ரெஜியின் திருவிளையாடல்கள் பற்றி ‘தந்திரிகளின் மறுமுகம்’ என்ற தொடரில் ஏற்கனவே நாம் ஆதாரபூர்வமாக வெளியிட்டமை வாசகர்களுக்கு நினைவில் இருக்ககூடும் என்பதால், அவற்றை இங்கு மீள்பிரசுரம் செய்வதைத் தவிர்த்துக் கொள்கின்றோம்.

தவிர, இக் காணிக் கொள்வனவிற்கான நிதி சேகரிப்பில் ஈடுபட்ட தயாபரன் என்ற நபர் சிங்களப் புலனாய்வாளராக ஏற்கனவே அடையாளம் காணப்பட்டவர். இறுதி யுத்தத்தில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையின் தளபதிகளில் ஒருவரான மாவீரன் சங்கீதனின் பெயரைப் பயன்படுத்தி பிரித்தானியாவில் போட்டி மாவீரர் நாளை நடத்தி மண்கவ்விய சிங்களப் புலனாய்வாளர் இவர்.

கொள்ளையர்கள், தெருச் சண்டியர்கள் போன்றோரைப் பயன்படுத்தி தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் மீது 2010ஆம், 2011ஆம், 2012ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் பிரித்தானியாவில் வன்முறைகளை ஏவி விட்டதில் சங்கீதனின் பெயரில் இயங்கும் தயாபரன் என்ற சிங்களப் புலனாய்வாளருக்கு முக்கிய பங்கு உண்டு.

பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளராக விளங்கிய அ.தனம் அவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டமை, ஏனைய செயற்பாட்டாளர்கள் மீது தாக்குதல்கள் முயற்சிகளை மேற்கொண்டமை உட்பட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இவர் மீதும், இவருக்கு உடந்தையாக இயங்கும் கே.பி.ரெஜியின் வாகன சாரதி ஒருவர் மீதும் உண்டு. இவர்களினதும், இவர்களுக்கு உடந்தையாக இயங்கும் நபர்களினதும் விபரங்கள் பாதிக்கப்பட்ட செயற்பாட்டாளர்கள் சிலரால் பிரித்தானிய காவல்துறையில் பதிவு செய்யப்பட்டு இவர்கள் காவல்துறையின் திரையில் இருக்கின்றனர்.

ஏற்கனவே இவர்களுக்கு உடந்தையாக இயங்கிய வன்முறைக் கும்பல் ஒன்றைச் சேர்ந்த காடையர்கள் சிலர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டமைக்காக தற்பொழுது சிறைவாசம் அனுபவித்து வருகின்றார்கள். அத்தோடு வன்முறையைப் பிரயோகித்து தனியார் ஒருவரின் உணவகத்தைக் கையகப்படுத்த முற்பட்டமைக்காக சங்கீதன் என்ற பெயரில் இயங்கும் தயாபரனின் மைத்துனர் ஒருவரும் சிறையில் உள்ளார். இவர்களோடு சிங்களத்தின் கைப்பாவையான கே.பியைத் தலைவராக வரித்துக் கொண்ட இராமு.சுபன் என்பவரும் கூட்டுச் சேர்ந்துள்ளார்.

இவ்வாறு சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் மைத்திரி அணியின் பிரமுகரையும், சிங்களப் புலனாய்வாளர்களையும், காகிதப் புலிகளையும், கொள்ளையர்களையும், காடையர்களையும் கொண்ட இந்த அமைப்பு, மாவீரர் நினைவாலயம் என்ற பெயரில் எவ்வாறான மாயா ஜாலத்தை அரங்கேற்றப் போகின்றது என்பதை இலகுவாக புரிந்து கொள்ளலாம்.

இவர்களின் உடனடி இலக்கு வரும் கார்த்திகை மாதம் காட்டுப் புற மாடு மேய்க்கும் பண்ணையில் போட்டி மாவீரர் நாள் நிகழ்வை நடத்தி, மாவீரர் நாளின் அரசியல் முக்கியத்தை இல்லாதொழிப்பது தான். இதில் வேதனைக்குரிய விடயம் என்னவென்றால், இந்த புலித்தோல் அணிந்த ஓநாய்களின் சுயரூபத்தைப் புரிந்து கொள்ளாது, வழிதவறிய ஆடுகளாக சில தமிழ்த் தேசிய உணர்வாளர்களும் இருப்பது தான்.

நன்றி: ஈழமுரசு