காணமல்போன மீனவர்களை விமானம் மூலம் தேட நடவடிக்கை!

புதன் மார்ச் 14, 2018

முல்லைத்தீவு நாயாற்று பகுதியில் தொழிலுக்கு சென்ற சிலாபத்தினை சேர்ந்த மூன்று மீனவர்கள் இதுவரை திரும்பி வராத நிலையில் அவர்களை தேடும் நடவடிக்கையில் மீனவர்கள் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளனர். 

12 ஆம் திகதி அதிகாலை முல்லைத்தீவு நாயாற்று பகுதியில் இருந்து மூன்று மீனவர்கள் ஒரு படகில் மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றனர்.  சிலாபத்தினை சேர்ந்த 51 வயதுடைய மில்ராஜ் மிரண்டா, 48 வயதுடைய இமானுவேல் மிரண்டா, 24 வயதுடைய மிதுறதன் மிரண்டா என்ற மூவருமே இவ்வாறு காணமல்போனவர்களாவர். 

இவர்கள் அனைவரும் ஒரோ குடும்பத்தை சேர்ந்த தந்தை, மகன் மற்றும் தம்பி என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனினும், இவர்கள் 12 ஆம் திகதி நண்பகல் கரை திரும்புவதாக தெரிவித்துள்ளபோதும், கரை திரும்பாத நிலையில் மீனவர்களை காணவில்லை என நேற்று (13) காலை நாயாற்று பகுதியினை சேர்ந்த மீனவ படகுகள் காணாமல்போன மீனவரின் படகினை தேடியும் இதுவரை கண்டுபிடிக்காத நிலையில் கரை திரும்பியுள்ளார்கள். 

தொடர்ந்தும் தேடுதல் நடைபெற்ற போதும் இதுவரை எந்த சாதகமான பதிலும் கிடைக்கப்பெறவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த மீனவர்களின் படகு 40 குதிரைவலுக் கொண்டது என்றும் படகு கடலில் மூழ்கி இருக்கலாம் என்றும் இந்நிலையில் நேற்று காலை எரிபொருள் நிரப்பும் கான் ஒன்று குறித்த பகுதிக்கு கரை ஒதுங்கியுள்ளதையும் நாயாற்று வாடியில் உள்ள மீனவர்கள் தெரிவித்துள்ளார்கள். 

அத்தோடு காணாமல் போன மீனவர்களை தேடுவதற்கு கடற்ப்படைக்கு தகவல் வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு ஊடாக, முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் மூலம் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துக்கு மீனவர்களை தேட விமானப்படையின் உதவியை கோரியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.