காணாமல் போனவர்களுக்கு ”காணவில்லை சான்றிதழ்”

Wednesday February 24, 2016

காணாமல் போனவர்கள் தொடர்பாக மரண சான்றிதழ்கள் பெற முடியாதவர்கள் உரிமைகளை வெளிப்படுத்துவதற்காக விஷேட சான்றிதழ் ஒன்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

உலகில் பல நாடுகளில் அவ்வாறான சான்றிதழ்கள் வழங்கப்படுவதாகவும் அதன்படி அந்த சான்றிதழை “காணவில்லை சான்றிதழ்” என்று அறிமுகப்படுத்துவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

கொழும்பு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற, பரந்தளவிலான பிறப்பு, இறப்பு, விவாக பதிவாளர்கள் சங்கத்தின் 27வது ஆண்டு நிறைவு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.

நாங்கள் விரும்பியோ விரும்பாமலோ நிகழ்ந்த துரதிஷ்டவசமான சம்பவங்கள் இதுவென்றும் அவர்களுக்காக இந்த சான்றிதழ்கள் மூலம் உரிமை கிடைக்கும் என்று தான் நம்புவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

உயிரை மீண்டும் வழங்க முடியாதென்று கூறிய அமைச்சர் சிறு உதவிகளை வழங்க முடியும் என்று இங்கு கூறினார்.  அத்துடன் எதிர்காலத்தில் பதிவாளர் துறையை சார்ந்தவர்களுக்கு சீருடை ஒன்றை அறிமுகப்படுத்த இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.