காணாமல் போன கூரையும், கூரேயும் - பிலாவடிமூலைப் பெருமான்

Monday October 22, 2018

என்ன குஞ்சுகள், எல்லோரும் சுகமாக இருக்கிறியளே?

போன முறை பிலாவடி மூலையைத் தேடி வந்து ஏமாந்து போனது தான் மிச்சம். அந்த நாட்களில் ஊரில் வேப்ப மரத்துக்குக் கீழே குந்தியிருந்து பிலாவிலை உறிஞ்சி உறிஞ்சிக் கள்ளுக் குடிச்சு, பொன்னம்மா தருகிற சூடை மீன் பொரியலை ருசிக்க ருசிக்கத் தின்ற காலம் எல்லாம் இனி வருமே? அது ஒரு சோக்கான காலம் தான். அதுவும் கள்ளு அடிச்ச களையில் வேப்ப மரத்துக்குக் கீழே நித்திரை கொள்ளுகிற சுகம் இருக்கெல்லோ, அந்தச் சுகமே ஒரு தனிச் சுகம் தான் பாருங்கோ.

என்ன இது, கிழவன் கன சங்கதியளோடை வரும் என்று பார்த்தால், ஆள் ஏதோ அலட்டுது என்று நீங்கள் புறுபுறுக்கிறது எனக்கு விளங்குது. பிலாவடி மூலையைத் தேடி ஸ்கார்புறு பக்கம் வந்தால், இஞ்சை மேப்பிள் மரத்துக்குக் கீழை நாலு தடியை நட்டுப் போட்டு திராட்சைப் பழ இரசம் விக்கிறாங்கள். அதுவும் இத்தாலியில் இருந்து வந்த புளிச்ச திராட்சைப் பழ இரசமாம். சரி, தூணின்ரை இடத்துக்கு நாலு தடி நட்டுக் கிடக்குது எங்கே கூரையைக் காணவில்லை என்று கேட்டால், தவறணைக்கார தம்பி சொன்னார், கூரை இலண்டன், பாரிஸ், சுவிஸ் என்று சுத்தித் திரிஞ்சு கடைசியில் கொழும்பில் கிடக்குது என்று. இது என்ன கண்றாவி என்று இலண்டனில் இருக்கிற என்ரை கூட்டாளிக்கு ரெலிபோன் அடிச்சுக் கேட்டால் அவன் அச்சுவேலிச் சந்தையில் பூட்டிக் கிடந்த ரிறங்குப் பெட்டிக்குள் இருந்து சீறிப் பாய்ந்த சிங்கக் குட்டி மாதிரி என்னைத் திட்டுகிறான். ‘கூரையை இஞ்சையிருக்கிற பொடி, பெட்டையள் எல்லாம் அடிச்சுக் கலைச்சுப் போட்டுது, நீ என்னவென்றால் கூரையைக் காணவில்லை என்று இஞ்சை போன் அடிக்கிறியோ?’ என்று அவன் தாறு மாறாக திட்டித் தீர்க்கிறான். முதலில் எனக்கு ஒன்றும் விளங்கவில்லை.   

பிறகு தான் விளங்கிச்சுது உந்த ரெஜினோல்ட் கூரே இருக்கிறார் பாருங்கோ... அவர் தான் உந்த வடக்கு மாகாண ஆளுநராக இருக்கிறவர். அவரைத் தான் எல்லோரும் கூரை, கூரை என்று சொன்னவையள் என்று.

இன்னும் இரண்டு கிழமையில் வடக்கு மாகாண சபையை மைத்திரி கலைக்கப் போகிறாராம். அதுக்குப் பிறகு ஒரு வருசத்துக்கு வடக்கு மாகாணம் உந்தக் கூரேயின் ஆட்சிக்குக் கீழ்தான் வரப் போகுதாம்.

அது தான் வெளிநாட்டில் வாழுகிற எங்கடை சனத்தை மடக்கி கோடிக் கணக்கில் சுருட்டுவம் என்று ஆள் கிளம்பி வந்தவராம். முந்தி சந்திரிகா அம்மையாரின் காலத்திலை மேற்கு மாகாண முதலமைச்சராக இருந்த பொழுது கொழும்பில் இருந்து தமிழ், முசுலிம் வியாபாரிகளிடம் கோடிக் கணக்கில் சுருட்டினது காணாது என்று, இப்ப வெளிநாடுகளில் இருக்கிற எங்கடை வியாபாரிகளிடம் சுருட்டுகிறதுக்கு ஆள் கிளம்பி வந்தவராம்.

பிக்குகளுடன் கூரே

நானும் முதல் ஆளின்ரை படத்தைப் பார்த்துப் போட்டு, உவர் ஒரு ஆமத்துறு என்று தான் நினைச்சனான். வடதமிழீழத்தில் புத்த விகாரைகளைக் கட்டுகிறதிலையும், பிக்குமாரோடை சேர்ந்து பிரித் ஓதுகிறதிலையும் ஆள் அக்கறை காட்டுகிறதைப் பார்க்க எனக்கு முதலில் அப்படித்தான் இருந்தது. ஆனாலும் ஆளுக்குத் துணிச்சல்தான் பாருங்கோ.

ஒரு பக்கத்தில் வடதமிழீழத்தில் இருக்கிற சிவன் கோவில்களை இடித்து அங்கு புத்த விகாரைகளைக் கட்டிக் கொண்டு, இலண்டனில் இருக்கிற லூசியம் சிவன் கோவிலில் ஆள் கூட்டம் வைக்க இருந்தவராம். அதுவும் தமிழரின்ரை காசில் வடக்கை அபிவிருத்தி செய்யிறதுக்கான கூட்டமாம். படிக்கிறது தேவாரம், இடிக்கிறது சிவன் கோவில் என்று இதைத் தான் சொல்லுகிறது. ஆனாலும் பாருங்கோ எங்கை இலண்டன் தமிழ்ச் சனம் சும்மா இருக்கவில்லை. இது பற்றின சங்கதி தெரிஞ்சதும், சனம் கொந்தளிச்சுப் போட்டுது. லூசியம் சிவன் கோவிலை இடிச்சுப் போட்டு, அங்க புத்த விகாரை கட்டுறதுக்கு கூரேயைக் கொண்டு பிரித் ஓதப் போகிறியளோ என்று ஐயர்மாரிட்டையும், கோவில் நிர்வாகிகளிடமும் நாக்கைத் தொங்கைப் போட்டுச் சாகிற மாதிரி சனம் கேள்வி கேட்டிச்சுது.

Lewisham Sivan Temple

வேறை வழியில்லாமல் கோவில்காரரும், கூரேயை வர வேண்டாம் என்று சொல்லிப் போட்டீனம். பிறகென்ன, வேறொரு மண்டபத்தை இரவோடு இரவாக ஒழுங்கு செய்து அங்கு ஐந்தாறு மொட்டந் தலைகளுக்கும், அறுபது எழுபது வெற்றுக் கதிரைகளுக்கும் கூரே பிரித் ஓதினவராம்.

ஆனாலும் விசயம் தெரிஞ்ச எங்கடை இலண்டன் சனம் சும்மா இருக்கவில்லை. கூரே கூடின இடத்தை தமிழீழ தேசியக் கொடியோடை முற்றுகையிட்டு முழக்கம் போட்டிருக்குது. உந்த இடத்தில் கிரகம் கடந்த அரசாங்கத்தின் அமைச்சர் என்று சொல்கிற கோமாளி ஒருத்தருக்கும், கூரேயிற்கு பரிவட்டம் கட்டிக் கொண்டிருந்த இன்னொருத்தருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் முற்றி, அவர் உடனே குய்யோ முறையோ, பயங்கரவாதிகள் வந்திருக்கீனம் எங்களுக்குப் பயங்கரப் பயமாக இருக்குது என்று பிரிட்டிஸ் பொலிஸ்காரரிட்டை முறையிட்டிருக்கிறார். விசயம் தெரியாத பொலிஸ்காரரும், ஏதோ பயங்கரம் நடக்கப் போகுது என்று நினைச்சு மோப்ப நாய்களோடை வந்து விலக்குப் பிடிக்கப் பார்த்தவையள்.

Yogi-Police

ஆனாலும் அடுத்த நாள் பிரிட்டிஸ் பொலிஸ்காரர் செய்தது பெரிய அநியாயம் தான். ஒக்ஸ்போட்டில் அணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக... மன்னிக்கோணும் பிள்ளையள், எனக்கு அணிலுக்கும், ரணிலுக்கும் பெரிய வித்தியாசம் தெரியிறதில்லை. அது தான் ரணில் என்றதை மாறி அணில் விக்கிரமசிங்க என்று சொல்லிப் போட்டன். சரி விசயத்துக்கு வாறன்.

உவர் ரணில் மாத்தையா போன திங்கட்கிழமை காதும் காதும் வைச்சாற் போல் பிரித்தானியா போய் ஒக்ஸ்போர்ட்டில் உரையாற்றினவராம். நான் சொல்லுறது வரலாற்று மையம் என்ற பெயரில் இருக்கிற ஒக்ஸ்போர்ட் மாட்டுப் பண்ணையில் இல்லைப் பாருங்கோ. அங்கை இருக்கிற வரலாற்றுப் பிரசித்தி பெற்ற ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தின் மாணவர் சங்கத்தில் தான் ரணில் உரையாற்றினவராம். ஆனால் விசயத்தை மோப்பம் பிடிச்ச எங்கடை இலண்டன் தமிழ்ச் சனம் ரணிலுக்கு எதிராகப் போர்க் கொடி தூக்கியிருக்கிது. அதுவும் தமிழீழத் தேசியக் கொடியோடை. பிறகென்ன?

Yogi-arrest

ஆனால் உந்த ஆர்ப்பாட்டத்தில் நின்ற சொக்கலிங்கம் யோகலிங்கம் என்ற தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரை ரணிலின்ரை அல்லக்கை ஒன்று புலி என்று இனம் காட்ட, உடனே அவரையும் புலிக்கொடியோடை நின்ற இன்னும் மூன்று பேரையும் பிரிட்டிஸ் பொலிஸ் கைது செய்தது தான் பெரிய அநியாயம் பாருங்கோ. உந்த யோகலிங்கம் ஒரு அப்பாவி பாருங்கோ. அவர் புலியும் இல்லை, கறியில் கரைக்கிற புளியும் இல்லை.

Yogi

எல்லோருக்கும் அரசர் ஆக வேண்டும், அமைச்சர் ஆக வேண்டும் என்று ஆசை இருக்கிற மாதிரி அவருக்கும் அமைச்சர் ஆக வேண்டும் என்று ஆசை. பொலிஸ்காரர் அவரைப் பார்த்து ‘நீர் யார்?’ என்று கேட்க, தான் கிரகம் கடந்த அரசாங்கத்தின்ரை அமைச்சர் என்று ஆள் முழங்கியிருக்கிறார். அமைச்சர் என்றால் தன்னைப் பொலிஸ் பிடிக்க மாட்டாங்கள் என்று ஆள் நினைச்சுதோ தெரியவில்லை. ஆனால் பின்னால் நின்ற ரணிலின் ஆள் அவரைப் புலியென்று சொல்ல, பொலிஸ்காரரும் உடனே ஆளுக்கு கைவிலங்கிட்டுப் பிடிச்சுக் கொண்டு போய் விட்டீனம்.

உதிலை பகிடி என்னவென்றால், யோகலிங்கத்தைப் பிடிச்சதும், இலண்டனில் இருந்த கிரகம் கடந்த அமைச்சர்மார் எல்லோரும் தங்கடை மொபைல் போனை சுவிட்ச் ஓவ் செய்து போட்டு ஒளிச்சிட்டீனமாம். கடைசியில் எங்கடை சங்கதி-24 இணையமும், தொழிற்கட்சிக்கான தமிழர்கள் அமைப்பும் தான் ஆளுக்காக குரல் கொடுத்து பிரட்டிஸ் எம்.பிமாரைக் கொண்டு பிரித்தானிய உள்துறை அமைச்சருக்கு அவசர காயிதம் போட்டு, ஆளின் விடுதலைக்காக அழுத்த குடுத்தவையள்.

ஆள் பிணையில் வெளியில் வந்த பிறகுதான் நியூயோர்க்கில் இருக்கிற தன்ரை நிலக்கீழ் பங்கருக்கு வெளியால் வந்து என்ன நடந்தது என்று கிரகம் கடந்த பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமாரன் விசாரிச்சவராம்.

Rudra

உதுக்குள்ளை இலண்டனில் இருந்தால் பிரச்சினை என்று கூரே நைசாக பிரான்சுக்குக் கிளம்பிப் போயிருக்கிறார். ஆனால் அது இல்லை விசயம் பாருங்கோ. இலட்சுமணன் இளங்கோவன் என்று அவருக்கு ஒரு செயலாளர் இருக்கிறார். அவர் பிரான்சில் இருக்கிற தமிழ் வணிகர்மார் கொஞ்சப் பேருக்கு ரெலிபோன் எடுத்துச் சொன்னவராம், ‘பாஸ் பிரான்சு வாறார், நீங்களும் ஆளை வந்து சந்தியுங்கோவன்’ என்று. அதுக்கு மறுத்த வணிகர்களை பாஸின் ஒபிசுக்கு வந்து சந்திக்கச் சொன்னவராம் இளங்கோவன். முதலில் பாஸ் என்றதும் ஏதோ சிவாஜி படத்தில் மொட்டபாஸ் வேடத்தில் ரஜினிகாந்த வந்த மாதிரி ஆரோ ஒராள் வரப் போகுது, ஒபிசுக்குள் தங்களை அடைச்சு வைச்சுப் பின்னப் போகுது என்று தான் எங்கடை பிரான்சு வணிகர்மார் பயந்தவையளாம். பிறகு தான் தெரிஞ்சுது இது சிவாஜி படத்தில் வந்த மொட்டபாஸ் இல்லை, மைத்திரி அனுப்பிய ரெஜினோல்ட் கூரே என்கிற பிரித் ஓதுகிற கோமாளி என்று.

Rajani

பிறகென்ன, இலண்டனில் நடந்த மாதிரி ஐஞ்சாறு மொட்டந் தலையளுக்கும், வெற்றுக் கதிரைகளுக்கும் தான் பிரான்சில் கூரே பிரித் ஓதினவராம். சரி, இலண்டனும் வேண்டாம், பாரிசும் வேண்டாம் சுவிசுக்குப் போய் அங்கை காசைக் கிண்டியள்ளுவம் என்று கூரே போயிருக்கிறார்.

ஆனால் விடாது துரத்தும் காத்துக் கறுப்பு என்ற மாதிரி, எங்கடை சுவிஸ் தமிழ்ச் சனமும், தமிழீழத் தேசியக் கொடியோடை போய் கூரேயிற்கு செருப்படி கொடுத்திருக்கீனம். பிறகென்ன, நாற்பத்தைந்து இலட்சம் ரூபா செலவில் இலண்டன், பாரிஸ், சுவிஸ் என்று கிளம்பின கூரே, இப்ப வெறும் கையோடை சீமையை விட்டு கொழும்புக்குக் கிளம்பிப் போய் விட்டாராம்.

Cooray-Monks1

சரி, கூரேயைப் பற்றிக் கதைச்சதில் இஞ்சை ஸ்காபுறோ பிலாவடி மூலையில் இருக்க வேண்டிய கூரையைப் பற்றி நான் மறந்தே போனேன்.

வேறை என்ன பிள்ளையள்? இன்னும் இரண்டும் கிழமையில் உங்களைச் சந்திக்கிறன். அடுத்த முறையாவது பிலாவடி மூலையில் நட்டிருக்கிற மரத் தூண்களுக்கு மேலே கூரை இருக்குதோ என்று பார்ப்போம்.    

நன்றி: ஈழமுரசு (16.10.2018)