காணி பத்திரத்தில் கூறப்பட்டுள்ள சரத்துக்களை மீறி காணி விற்பனை

புதன் ஜூலை 11, 2018

மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவு கோவில்குளம் பகுதியில் மரமுந்திரிகை செய்கைக்காக அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட காணிகள் விற்பனை செய்யப்படுவது தொடர்பாக மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கிராம மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இப்பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கோவில்குளம் மற்றும் தாழங்குடா பகுதியில் மரமுந்திரிகை செய்கைக்காக 3 ஏக்கர் திட்டத்தின் கீழ் சுமார் நூறு ஏக்கர் காணி ஆரையம்பதியைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டு, மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்தினால் முந்திரிகைக் கன்றுகள் வழங்கப்பட்டு செய்கை பண்ணப்பட்டது. எனினும் கடந்த காலங்களில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையினால், இச்செய்கையை வெற்றியளிக்கவில்லை.

அதுமாத்திரமல்ல, மரமுந்திரி செய்கைக்கு வழங்கப்பட்ட காணி சுவீகரிப்புத் சட்டத்தைப் பயன்படுத்தி காணி பெறப்பட்டு கல்வியல் கல்லூரி அமைக்கப்பட்டது. இதற்கு மாற்றீடாக ஏறாவூர் சவுக்கடிப் பகுதியில் காணி வழங்கப்பட்டாலும், காணியை இழந்தவர்கள் அங்கு செல்லவிரும்பாமையினால் காணியைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை.

தாழங்குடா மற்றும் கோவில்குளம் பகுதியில் வழங்கப்பட்ட 3ஏக்கர் காணிக்கு சுவர்ண பூமித் திட்டத்தின் கீழ் ஒப்பம் (மஞ்சள் பத்திரம்) வழங்கப்பட்டது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள சரத்தில் இக்காணி இரத்த உறவு அல்லாதோருக்கு விற்கவோ அல்லது கைமாறவோ முடியாது என கூறப்பட்டுள்ளது.

ஆனால், கடந்த வாரத்தில் இப்பகுதியில் இரு காணித் துண்டுகள் சகோதர இனத்தவர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வேலி போடப்பட்டுள்ளது. இது எவ்வாறு முடியும் என கிராம மக்கள் பிரதேச செயலாளரை கேட்கின்றனர்.

ஆரையம்பதியைச் சேர்ந்த ஒரு பெண் குறிப்பிடுகையில் எனக்கு மூன்று பிள்ளைகள் மூவருக்கும் ஒரு ஏக்கர் படி பகிர்ந்தளிக்க முற்பட்ட போது பல சட்டதிட்டங்களை கையாள வேண்டும் என பிரதேச செயலகத்தின் காணிப்பிரிவு தெரிவித்தது. 

ஆனால், இன்று மாற்றினத்தவர்கள் எந்த ஒரு இரத்த உறவுமில்லாமல் எவ்வாறு காணியை கொள்வனவு செய்ய முடிந்தது. இதற்கு யார் அனுமதி வழங்கியது? பணத்திற்காக சோரம் போகும் அதிகாரிகளினால், எந்தச் சட்டத்தையும் மீறி செயற்பட முடியும் என அப்பெண்மணி தனது உள்கிடக்கைகளை கக்கினார்.

எவ்வாறாயினும், ஒரு இனம் செறிந்துவாழும் பகுதியில் மற்றொரு இனம் உள்நுழைவது எதிர்காலத்தில் ஏற்படும் இன முறுகளை தடுப்பதற்கு அதிகாரிகள் முன்னேற்பாடுகளுடன் செயற்பட வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.