காய்கறி விற்று நிதி திரட்டிய சமந்தா!

Friday August 31, 2018

சென்னை ஜாம்பஜார் சந்தைக்கு  சென்ற நடிகை சமந்தா, ஏழைகளுக்கு உதவுவதற்காக காய்கறி விற்று நிதி திரட்டி இருக்கிறார்.  நடிகை சமந்தா சினிமாவில் நடித்துக்கொண்டு பிரதியுஷா என்ற பெயரில் அறக்கட்டளை ஆரம்பித்து சமூக சேவை பணிகள் செய்கிறார். ஆந்திராவில் இதய நோயால் பாதித்த குழந்தைகளை ஆஸ்பத்திரியில் சேர்த்து அறுவை சிகிச்சைக்கு உதவினார். பள்ளிகளிலும் துப்புரவு பணிகள் செய்து மாணவ - மாணவிகளுக்கு உதவிகள் செய்கிறார்.

இப்போது விஷாலுடன் நடித்துள்ள இரும்புத்திரை பட விழாவில் கலந்து கொள்ள ஐதராபாத்தில் இருந்து சென்னை வந்த அவர் திருவல்லிக்கேணியில் உள்ள ஜாம்பஜார் மார்க்கெட்டுக்கு சென்று ஏழைகளுக்கு உதவுவதற்காக காய்கறி விற்று நிதி திரட்டினார். சந்தையில் உள்ள ஒரு கடையில் உட்கார்ந்து காய்கறிகளை அவர் விற்றார். 

சமந்தா கையால் காய்கறி வாங்க பெரிய கூட்டம் கூடியது. ரசிகர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் திரண்டார்கள். அவர்கள் அதிக பணம் கொடுத்து சமந்தாவிடம் இருந்து போட்டி போட்டு காய்கறிகளை வாங்கினார்கள். சிறிது நேரத்திலேயே கடையில் இருந்த அத்தனை காய்கறிகளும் விற்று தீர்ந்தன. இதில் வசூலான தொகை முழுவதையும் நலிந்த மக்களுக்கு சமந்தா வழங்குகிறார்.