கார்டூனிஸ்ட் பாலா கைது!

Sunday November 05, 2017

கந்துவட்டி கொடுமையால் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளித்த சம்பவம் தொடர்பாக கேலிச்சித்திரம் தீட்டிய கார்டூனிஸ்ட் பாலா என்பவரை காவல் துறையினர்  இன்று (5)கைது செய்தனர்.

நெல்லையில் கந்துவட்டி கொடுமைக்கு நான்கு உயிர்கள் தீயில் கருகிய பரிதாபம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த சம்பவத்தை கருத்துச் சித்திரமாக தீட்டிய கார்டூனிஸ்ட் பாலா என்பவர் அதை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். 

மிகப் பரவலாக பகிரப்பட்ட அந்தப் பதிவில் தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, நெல்லை மாவட்ட கலெக்டர், நெல்லை மாவட்டகாவல் துறை சூப்பிரண்ட் ஆகியோரை கேலிச்சித்திரமாக அவர் தீட்டி இருந்தார்.

இந்நிலையில், இந்த கருத்துப்படத்தை வரைந்த கார்டூனிஸ்ட் பாலாவை அரசுக்கு எதிராக அவதூறு பிரச்சாரம் செய்த குற்றச்சாட்டின்கீழ்காவல் துறை இன்று கைது செய்தனர். நெல்லை மாவட்ட கலெக்டர் அளித்த புகாரின்பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்த அவரை காவல் துறை அழைத்து செல்லும் நிலையில் கார்டூனிஸ்ட் பாலாவின் கைதை கண்டித்து சமூக வலைத்தளங்களில் ஆதரவு குரல்கள் ஒலிக்க தொடங்கியுள்ளது.