கார்ட்டூன் பாலாவை விடுதலை செய்க!

Monday November 06, 2017

வழக்கறிஞர் செம்மணி காலை ஒடித்த காவல்துறையினரை இடைநீக்கம் செய்க! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கண்டனம்!

கருத்துப்படச் சிந்தனையாளர் கார்ட்டூன் பாலா அவர்களை இன்று (05.11.2017) பகல் ஒன்றரை மணிக்கு சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்,து திருநெல்வேலி காவல்துறையின் நான்கு பேர் வலுவந்தமாக இழுத்துச் சென்று காவல் வண்டியில் ஏற்றியுள்ளார்கள். பாலாவின் கணிப்பொறி, ஹார்டிஸ்க் உள்ளிட்ட கருவிகளையும், அவர் கைப்பேசியையும், மேற்படி காவல்துறையினர் பறித்துக் கொண்டுள்ளார்கள்.

ஊடகத்துறையினர் இதுபற்றி காவல்துறையில் விசாரித்தபோது, அண்மையில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள், கந்துவட்டிக் கடன் தொல்லை தாங்காமல், கணவன், மனைவி, அவர்களது இரு குழந்தைகள் ஆக நான்கு பேரும் தீ வைத்து எரித்துக் கொண்டு, இறந்த செய்தி தொடர்பாகக் கருத்துப்படம் போட்டதற்காக, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் தெரிவித்த புகாரில், கார்ட்டூன் பாலாவைக் கைது செய்து, திருநெல்வேலிக்கு அழைத்துச் செல்கிறார்கள் என்று கூறி இருக்கிறார்கள்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் தாமாகச் செயல்பட்டிருக்க வாய்ப்பில்லை. தமிழ்நாடு அரசுதான் இந்நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். கார்ட்டூன் பாலா மீது மிகக் கடுமையான - கருத்துரிமைப் பறிப்புத் தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு – 67, ஒருவருடைய நன்மதிப்பைக் கெடுப்பது தொடர்பான இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவு 501 ஆகியவற்றின்கீழ் வழக்குப் போட்டுள்ளார்கள்.

அரியவகைக் கருத்துப்படங்கள், ஆவணங்கள் ஆகியவற்றைச் சேமித்து வைத்துள்ள பாலாவின் ஹார்டிஸ்க் மற்றும் கணிப்பொறி ஆகியவற்றை எப்படிச் சின்னாபின்னப்படுத்தப் போகிறார்களோ தெரியவில்லை.

எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமையில் இப்போதுள்ள தமிழ்நாடு அரசு, மேல் தோற்றத்திற்கு தாராளத் தன்மையுள்ள – தொள தொளப்பான – உறுதியற்ற அரசு போல் காட்சி அளிக்கிறது. அரசியல் கணிப்பில் அது உண்மையாகக் கூட இருக்கலாம். ஆனால் கருத்துரிமைப் பறிப்பில் மிகவும் கடுமையாக எதேச்சாதிகாரத்துடன் நடந்து கொள்கிறது.

நெல்லை மாவட்டக் காவல்துறை, சில நாட்களுக்கு முன் மிகக்கொடிய வன்முறை வெறியாட்டம் ஒன்றை நடத்தியுள்ளது. கூடங்குளம் வழக்குகளில் உதயகுமார் உள்ளிட்டோர்க்காக சட்டப்பணி ஆற்றி வரும் வழக்கறிஞர் செம்மணி என்ற இராசரத்தினத்தை வள்ளியூர் மாறன்குளத்திலுள்ள அவரது இல்லத்திலிருந்து, 03.11.2017 நள்ளிரவு கடத்திக் கொண்டு வந்த காவல்துறையினர் காவல் நிலையம் ஒன்றில் வைத்து, அடித்து நொறுக்கி சித்திரவதை செய்து அவர் காலை ஒடித்துள்ளார்கள்.

வழக்கறிஞர்கள் 04.11.2017 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தி, நீதிபதி ஆணை பெற்று பின்னர் செம்மணியை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள். வழக்கறிஞர் செம்மணி மீது எந்தப் புகாரும் இல்லை; வழக்கும் இல்லை! தமிழ்நாடு அரசின் கருத்துரிமைப் பறிப்பு, எதேச்சாதிகார ஒடுக்குமுறை ஆகியவற்றால் ஊக்கம் பெற்ற காவல்துறையினர் நெல்லையில் காவல் நிலையத்தில் வைத்து ஒரு வழக்கறிஞரை அடித்து நொறுக்கி காலை முறித்துள்ளனர்.

தமிழ்நாடு அரசின் கருத்துரிமைப் பறிப்பு, ஒடுக்குமுறை ஆகியவற்றையும் காவல்துறையினரின் வன்முறைகளையும், தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

வழக்கறிஞர் செம்மணியைத் தாக்கியக் காவல்துறையினரை உடனடியாக இடைநீக்கம் செய்து அவர்கள் மீது வழக்குப் பதிய வேண்டும்.

கார்ட்டூன் பாலா மீது போடப்பட்ட பழிவாங்கும் வழக்கை உடனடியாகக் கைவிட்டு, அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் தமிழ்நாடு முதல்வரைக் கேட்டுக் கொள்கிறேன்.