கார்த்தி சிதம்பரத்திடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சி.பி.ஐ முடிவு!

Wednesday March 07, 2018

கார்த்தி சிதம்பரத்தின் விசாரணைக் காவல் நாளை மறுநாளுடன் முடிய உள்ள நிலையில் அவரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சி.பி.ஐ முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரம் 6 நாள் விசாரணைக்காவல் முடிந்து நேற்று பாட்டியாலா ஹவுஸ் கோர்ட்டில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அவரது வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.

ஜாமீனுக்கு எதிர்ப்பு தெரிவித்த சி.பி.ஐ வழக்கறிஞர் கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக முக்கிய ஆதாரங்கள் சிக்கியுள்ளதாகவும், எனவே, மேலும் 9 நாட்கள் விசாரணையை நீட்டிக்க அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கார்த்தி சிதம்பரத்தை மூன்று நாட்கள் விசாரிக்க சி.பி.ஐ.க்கு அனுமதி அளித்தார்.

இந்நிலையில், விசாரணைக்கு கார்த்தி சிதம்பரம் சரியாக ஒத்துழைக்கவில்லை என புகார் கூறியுள்ள சி.பி.ஐ அதிகாரிகள், அவரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்காக கோர்ட்டில் அதிகாரிகள் மனு தாக்கல் செய்துள்ளனர்.

நாளை மறுநாளுடன் விசாரணைக்காவல் முடிய உள்ள நிலையில், மேலும் கால அவகாசத்தை நீட்டிக்க கோரிக்கை வைக்க முடியாது என்பதால் அதிகாரிகள் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.  

உண்மை கண்டறியும் சோதனை என்பது குற்றம் சாட்டப்பட்ட நபரை மயக்க நிலைக்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணை நடத்தப்படும். இந்த சோதனைக்கு நீதிமன்றத்தின் அனுமதி அவசியமானதாகும்.