காலம் தாழ்ந்து அறிவிக்கப்படும் தமிழக அரசின் விருதுகள்!

யூலை 15, 2017

தமிழக அரசின் சிறந்த திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்களுக்கான விருதுகள் 2008ஆம் ஆண்டிலிருந்தே வழங்கப்படாத நிலையில், இவற்றில் சில ஆண்டுகளுக்கான விருதுப் பட்டியலை தற்போது அறிவித்துள்ளது தமிழக அரசு. அதேபோல, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் வழங்கும் கருணாநிதி விருதுகள் 6 ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது பரிந்துரைகளைக் கோரியுள்ளது.

தமிழக அரசு வருடம் தோறும் தமிழ் சினிமா, தொலைக்காட்சி தொடர்பான விருதுகளை வழங்குவது வழக்கம். சிறந்த திரைப்படம், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் எனப் பல்வேறு விரிவுகளில் இந்த விருதுகளை வழங்குவது வழக்கமாக இருந்தது. அதேபோல எம்.ஜி.ஆர். அரசு திரைப்பட பயிற்சிக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் எடுக்கும் குறும்படங்களுக்கும் விருதுகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

ஆனால், 2008ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த விருதுகள் வழங்கப்படவேயில்லை. இந்த நிலையில் தி.மு.க. ஆட்சியின் இறுதிக் காலத்தில், 2009 மற்றும் 2010ஆம் ஆண்டுகளுக்கான சினிமா விருதுகளையும், 2008, 2009, 2010 ஆகிய ஆண்டுகளுக்குரிய அரசு திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கான விருதுகளையும் தேர்வுசெய்ய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி எஸ்.மோகன் தலைமையில் தேர்வுக் குழு அமைக்கப்பட்டது.

 இந்தக் குழு தனது அறிக்கையை அப்போதைய அரசிடம் தாக்கல் செய்துவிட்டது. ஆனால், அதற்குப் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்படவே விருதுகள் அறிவிக்கப்படவில்லை.

தொலைக்காட்சித் தொடர்களுக்கும் கடந்த 2006ஆம் ஆண்டிலிருந்து தமிழக அரசின் விருதுகள் வழங்கப்பட்டுவந்த நிலையில், அந்த விருதும் 2008ஆம் ஆண்டுக்குப் பிறகு வழங்கப்படவில்லை. அதற்குப் பிறகு, 2011ல் 2009, 2010ஆம் ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகளை தேர்வுசெய்ய ஓய்வுபெற்ற நீதிபதி சண்முகம் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு தனது அறிக்கையை அளிப்பதற்கு முன்பே அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததால், அந்த விருதுகளும் பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்தன.

சினிமா விருதுகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இதுகுறித்து தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் வாகை சந்திரசேகர் சட்டப்பேரவையில் கேள்வியெழுப்பினார். அதற்குப் பதிலளித்த அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, விரைவில் குழு அமைக்கப்பட்டு, விருதுகள் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
அதன் பிறகு, ஓய்வு பெற்ற நீதிபதி எ. ராமன் தலைமையில் திரைப்பட விருதுகளுக்காக ஒரு குழுவும், தொலைக்காட்சி தொடர்களுக்கான விருதுகளைத் தேர்வு செய்ய எம். தணிகாச்சலம் தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டன. முதல்வர் ஜெயலலிதா மறைந்துவிட்ட நிலையில், தற்போது இந்தக் குழுவின் பரிந்துரைகள் ஏற்கப்பட்டு, விருதுகளை அறிவித்துள்ளது தமிழக அரசு.

செய்திகள்