கால்சிய குறைபாடு உயர் ரத்த அழுத்த பாதிப்பை அதிகரிக்கும்!

வெள்ளி பெப்ரவரி 01, 2019

இதயம் சார்ந்த நோய் பாதிப்புகள் மற்றும் சிறுநீரக பிரச்சினைகள் ஏற்படுவதற்கு உயர் ரத்த அழுத்தம் முக்கிய காரணமாக இருக்கிறது.

மற்ற நோய்களை போல இதன் பாதிப்புக்கான அறிகுறிகளை எளிதில் கண்டறிய முடியாது. உடற்பயிற்சியும், ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கமுமே உயர் ரத்த அழுத்த பிரச்சினைக்கு தீர்வாக அமையும்.

உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதில் கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் ஆகிய மூன்று ஊட்டச்சத்துக்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. பொட்டாசியம் தசைகளின் முறையான செயல்பாட்டுக்கு வழிவகை செய்கிறது.

ஒழுங்கற்ற இதய துடிப்பை சமநிலைப்படுத்தி இதயத்திற்கு சமிக்ஞைகளை கடத்தவும் உதவுகிறது. ரத்த அழுத்த பாதிப்புக்கு ஆளாகி இருப்பவர்கள் பொட்டாசியம் அதிகம் நிறைந்த ஆரஞ்சு, காளான்கள், கீரை வகைகள், பிராக்கோலி, சர்க்கரை வள்ளி கிழங்கு, முந்திரி, வாழைப்பழங்கள் போன்றவற்றை சாப்பிட்டு வர வேண்டும்.

ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதிலும், தசைகள் மற்றும் நரம்புகளின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதிலும் மக்னீசியத்திற்கு முக்கிய பங்கு இருக்கிறது.

எலும்புகளின் வளர்ச்சிக்கும் மெக்னீசியம் தேவையானதாக இருக்கிறது. வாழைப்பழங்கள், வெண்ணெய், கொட்டை வகைகள், விதைகள், கருப்பு பீன்ஸ், கீரை வகைகள் போன்றவற்றில் மெக்னீசியம் அதிகம் கலந்திருக்கிறது.

கால்சிய குறைபாடும் உயர் ரத்த அழுத்த பாதிப்பை அதிகரிக்கும். உடலில் ஹார்மோன்களின் சீரான செயல்பாட்டுக்கு கால்சியத்தின் பங்களிப்பு இன்றியமையாதது. ரத்த குழாய்களின் சீரான இயக்கத்திற்கும் கால்சியம் அவசியம்.

பால், தயிர், பாலாடை கட்டிகள், பயறு வகைகள், மீன் வகைகள், பச்சை இலை காய்கறிகள் போன்றவற்றில் கால்சியம் உள்ளது.