காவல் துறை மீதான நம்பிக்கையை மக்கள் இழந்து விட்டார்கள்!

Thursday March 08, 2018

மக்கள் காவல் துறை மீதான நம்பிக்கையை இழந்து விட்டார்கள் எனவும் மக்கள் விரோத அரசு அகற்றப்படும் எனவும் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.ராஜபாளையத்தில் இன்று காலை கட்சி பிரமுகரின் இல்லத் திருமண விழாவில் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

திருச்சியில் கர்ப்பிணி பெண்ணின் சாவுக்கு காரணமாக காவல் துறை மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மக்கள் காவல் துறை மீதான நம்பிக்கையை இழந்து விட்டனர். காவல் துறை, பொதுமக்களிடம் தவறாக நடந்து வருகிறார்கள்.

ஜெயலலிதா ஆட்சியின் போது அவரது நேரடி கட்டுப்பாட்டில் காவல் துறை சிறப்பாக செயல்பட்டது. ஆனால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான மக்கள் விரோத ஆட்சியில் காவல் துறையை கூட ஒழுங்காக வைத்திருக்க முடியவில்லை.

எங்கு பார்த்தாலும் ஊழல், எதற்கெடுத்தாலும் லஞ்சம். மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து வருகிறார்கள். இந்த மக்கள் விரோத ஆட்சி விரைவில் அகற்றப்படும். தமிழகத்தில் அதற்கான மாற்றம் ஏற்படும். இவ்வாறு அவர் பேசினார்.