காவிரி நீர்ச் சிக்கல் - இந்திய அரசு மற்றும் கர்நாடக அரசைக் கண்டித்து போராட்டம்

திங்கள் செப்டம்பர் 28, 2015

காவிரி நீர்ச் சிக்கல் - இந்திய அரசு மற்றும் கர்நாடக அரசைக் கண்டித்து டெல்டா மாவட்டத்தில் இடதுசாரிகளின் விவசாயிகள் சங்கம் போராட்டம் விடுதலைச் சிறுத்தைகள் பங்கேற்கும் தொல்.திருமாவளவன் அறிக்கை


 உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை வழங்காமல் கர்நாடக அரசு வழக்கம்போல வஞ்சித்து வருகிறது.  இதனால் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.  சம்பா பயிர்கள் கருகும் நிலையில் உள்ளன.  தமிழகத்துக்குத் தற்போது தண்ணீர் வழங்க இயலாது என கர்நாடக அரசு வெளிப்படையாக அறிவித்துள்ளது.  

 


இந்நிலையில் இன்று காவிரி கண்காணிப்புக் குழு கூடுகிறது.  இந்திய அரசு வழங்கம்போல தமிழகத்திற்கு எதிரான வகையில் மிகவும் மெத்தனமான அணுகுமுறையைக் கையாண்டு வருகிறது. உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி அமைக்கப்பட வேண்டிய காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை இன்னும் நிறுவிடவில்லை.  தமிழகத்தில் விவசாயம் முற்றிலும் அழிந்துவருவதைப் பற்றி இந்திய அரசு கவலைப்படவில்லை.  மாறாக, திட்டமிட்டே விவசாயத்தை அழிக்கும் வகையில் டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எரிவாயுத் திட்டம் மற்றும் சேல் எரிவாயுத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் தீவிரம் காட்டுகிறது.  

 

 

இந்தத் திட்டங்களின் மூலம் தஞ்சைப் பகுதிகளில் விவசாயத்தை அழிப்பதன் மூலம் காவிரி நீர் கோரிக்கைக்கான போராட்டங்களையும் ஒடுக்கிவிட முடியும் என்று இந்திய அரசு கணக்குப் போடுவதாகத் தெரிகிறது. விவசாயத்தைப் பெரிதும் நம்பி வாழும் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தைச் சீரழிப்பதில் குறியாக இருக்கும் இந்திய அரசு கர்நாடக அரசை எச்சரிக்கவோ சட்டப்படியான தனது கடமையை ஆற்றவோ தயாராக இல்லை என்பது வேதனையளிக்கிறது.

 


இந்நிலையில், டெல்டா விவசாயிகளைக் காப்பாற்றும் வகையிலும் இந்திய அரசு மற்றும் கர்நாடக அரசு ஆகியவற்றின் தமிழக விரோதப் போக்கைக் கண்டிக்கிற வகையிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை ஒருங்கிணைந்து நாளை 29&9&2015 அன்று சாலை மறியல் மற்றும் முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.  இப்போராட்டத்தை விடுதலைச் சிறுத்தைகள் வரவேற்று ஆதரிக்கிறது.  இடதுசாரிகளின் விவசாயச் சங்களோடு இணைந்து விடுதலைச் சிறுத்தைகளின் தமிழக உழவர் இயக்கமும் இப்போராட்டத்தில் பங்கேற்கும் என அறிவிக்கப்படுகிறது.  டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த ஒட்டுமொத்த உழைக்கும் மக்கள் யாவரும் கட்சி எல்லைகளைக் கடந்து இப்போராட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டுமெனவும் விடுதலைச் சிறுத்தைகள் வேண்டுகோள் விடுக்கிறது.