காவிரி பாசனப் பகுதிகளில் திறக்கப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் அலைக்கழிப்பு

சனி செப்டம்பர் 05, 2015

காவிரி பாசனப் பகுதிகளில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள நெல்லை கொள்முதல் செய்து பாதுகாக்க போதிய சேமிப்புக் கிடங்குகள் இல்லாததால் திறந்தவெளியில் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், விவசாயிகளிடமிருந்து நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல்லை கொள்முதல் செய்கிறது.

 

நடப்புப் பருவத்தில் பயிர் அறுவடை முடித்த விவசாயிகள் நெல்லை, அரசின் நேரடிக் கொள்முதல் நிலையங்களில் விற்பனைக்குக் கொண்டுசெல்லும்போது அலைக்கழிக்கப் படுகின்றனர். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு தமிழக அரசு போதிய அளவு நிதி ஒதுக்கீடு செய்யாததால், விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை அவர்கள் கொள்முதல் செய்ய மறுக்கின்றனர். இதனால் ஒவ்வொரு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலும் சுமார் ஐந்தாயிரம் நெல் மூட்டைகள் திறந்த வெளியிலேயே தேங்கிக் கிடக்கின்றன. விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டுவந்த நெல் மூட்டைகள் தற்போது பெய்து வரும் மழையால் நனைந்து முளைத்துவிடும் நிலையில் இருக்கின்றன. இதற்கு அரசின் அலட்சியமே காரணமாகும்.

 

பல்வேறு இன்னல்களைச் சுமந்துகொண்டு கடனாளியாகி, இரத்தக் கண்ணீர் சிந்தி விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல்லை, உரிய முறையில் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்காமல், விவசாயிகளை மேலும் துயரத்தில் அழ்த்தும் தமிழக அரசின் செயல் வன்மையான கண்டனத்துக்கு உரியதாகும்.

 

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் கைவிட்டதால், தனியார் நெல் வர்த்தகர்களிடம் நெல்லை விற்கவேண்டிய நிலைமைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால், மூட்டை ஒன்றுக்கு 100 ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதால், விவசாயிகள் மேலும் நொறுக்கப்படுகின்றனர்.

 

அரசின் பாராமுகத்தைக் கண்டித்துக் காவிரி பாசனப் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் இறங்கி உள்ளனர். விவசாயிகளின் குமுறலை உணர்ந்துகொண்டு, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு தமிழக அரசு உச்ச வரம்பின்றி போதிய நிதி ஒதுக்கீடு செய்து, நெல் கொள்முதல் நடவடிக்கைகளை சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

 

‘தாயகம்’    வைகோ
சென்னை - 8    பொதுச்செயலாளர்
05.09.2015    மறுமலர்ச்சி தி.மு.க.,