காவிரி பிரச்சினைக்காக அனைத்து கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும்!

Thursday February 22, 2018

காவிரி பிரச்சினைக்காக அனைத்து கட்சிகளும் கருத்துவேறுபாடுகளை மறந்து ஓரணியில் திரள வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

காவிரி வழக்கின் தீர்ப்பு குறித்து விவாதிப்பதற்காக இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள், காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தினர்.

இக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது:-

காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சிகளின் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

காவிரி பிரச்சினை ஒட்டுமொத்த தமிழகத்தின் உணர்வுகளுடன் பின்னிப் பிணைந்துள்ளது. கட்சிகளுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தமிழக உரிமைகளை நிலைநாட்ட அனைவரும் ஓரணியில் திரண்டு பாடுபடவேண்டும். முக்கிய பிரச்சினைகளில் அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த கருத்துடன் பாடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளையும் அவர் பட்டியலிட்டார்.