காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும்!

Thursday April 12, 2018

சென்னை வந்த பிரதமர் மோடியிடம் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை தாமதப்படுத்தும் மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் ஏற்கனவே போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், ராணுவ தளவாட கண்காட்சியை பார்வையிட மற்றும் அடையார் கேன்சர் மருத்துவமனையில் புதிய கட்டிட திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று சென்னை வந்தார்.

சென்னை விமானநிலையம் வந்த மோடி ஹெலிகாப்டர் மூலம், ராணுவ தளவாட கண்காட்சி நடக்கும் இடத்திற்கு சென்றார். அங்கு நிகழ்ச்சியை முடித்து விட்டு அடையாறு கேன்சர் மருத்துமனைக்கு அவர் வந்தார். இதற்கிடையே, கருப்பு நிற பலூன்களை பல இயக்கத்தினர் பறக்க விட்டனர்.

அடையாறு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு ஹெலிகாப்டர் மூலம் விமான நிலையம் வந்த மோடி, டெல்லிக்கு புறப்பட்டார். டெல்லிக்கு புறப்பட்ட மோடியிடம் தமிழக முதல்வர் ஒரு கோரிக்கை மனுவை அளித்தார். அதில் டெல்டா மாவட்ட விவசாயிகள் காவிரி நீரை மட்டுமே நம்பியுள்ளனர். அடுத்த பருவகாலம் ஜூன் 1-ம் தேதி தொடங்க உள்ளதால் வாரியத்தை உடனே அமைக்க வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும். காவிரி ஒழுங்காற்று குழுவையும் உடனடியாக அமைக்க வேண்டும் என பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்தார்.