காஸ் சிலிண்டர் விபத்துகளை தவிர்க்கும் முறைகள்!

Saturday January 13, 2018

காஸ் அடுப்பு பயன்படுத்தும் போது அஜாக்கிரதையாக இருந்தால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புண்டு என்று தெரிந்தும்கூட எல்லோருமே அலட்சியமாகத் தான் இருக்கிறார்கள்.

நம்முடைய முன்னோர்கள் விறகு அடுப்பில் சமையல் செய்து வந்தார்கள். அதன்பின் மண்எண்ணெய் ஸ்டவ் வந்தது. தற்போது கியாஸ் அடுப்பு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இன்று கிராமங்களில் கூட விறகு அடுப்பில் சமைப்பது என்பது மலையேறி போய்விட்டது. நகர்ப்புறங்களில் சொல்லவே தேவையில்லை. 

எல்லா வீடுகளிலும் இன்டக்சன் ஸ்டவ், கியாஸ் அடுப்பு தான் பயன்படுத்துகிறார்கள். காஸ் அடுப்பு பயன்படுத்தும் போது நிறைய அஜாக்கிரதையாக இருந்தால் நிறைய விபத்துகள் ஏற்பட வாய்ப்புண்டு என்று தெரிந்தும்கூட, நமக்குதான் பழகிவிட்டதே என்று எல்லோருமே அலட்சியமாகத் தான் இருக்கிறார்கள். ஆனால் கியாஸ் சிலிண்டர்களை பொறுத்தவரை சில விஷயங்களில் கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் இருந்தால் எதிர்பாராத விதமாக உண்டாகும் விபத்துக்களை தவிர்க்க முடியும். 

எனவே வீட்டில் நாம் சிலிண்டர்களை பயன்படுத்தும் போது, அதை எப்படி பயன்படுத்த வேண்டும், விபத்துக்கள் ஏற்படாமல் எப்படி பாதுகாப்பது என்பது பற்றி அனைவரும் கட்டாயமாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியம். 

சிலிண்டர் முதலில் வாங்கியதும், ரப்பர் டியூப் சிலிண்டர் வால்வின் உட்புறத்தில் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். சிலிண்டரை காற்றோட்டமான பகுதியில், உயரம் சமமாக உள்ள பகுதியில் தரையில் செங்குத்தாக வைக்க வேண்டும். வெப்பம் மிகுந்த பொருட்கள், விரைவில் தீப்பற்றும் பொருட்களான எண்ணெய் போன்றவற்றை சிலிண்டரின் அருகில் வைக்கக்கூடாது.

சிலிண்டரில் கசிவுகள் ஏற்படுவது போல தென்பட்டால், உடனே சோப்பு நீரினை கொண்டு பரிசோதிக்க வேண்டும். சமையல் முடிந்தவுடன், எப்போதும் சிலிண்டரின் ரெகுலேட்டர் மற்றும் நைலான் கயிற்றுடன் கூடிய பாதுகாப்பான மூடியை கவனமாக மூடி வைக்க வேண்டும். பிரிட்ஜ் போன்ற மின்சாதன பொருட்களை சமையல் அறைக்குள் வைக்கக்கூடாது. ஏனெனில் மின்சாதன பொருட்களால் ஏற்படும் மின் அழுத்தத்தின் ஏற்றத்தாழ்வுகள் சிலிண்டரில் கசிவை ஏற்படுத்தும்.

சிலிண்டர் டியூபில் விரிசல் ஏற்படுகிறதா என்பதை பரிசோதித்து, 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ரப்பர் டியூப்பை மாற்றி விட வேண்டும். திடீரென கியாஸ் கசிவு ஏற்பட்டால், சிலிண்டரின் ரெகுலேட்டர் மற்றும் பர்னர் நாப்களை மூடிவிட்டு, அந்த அறையில் உள்ள எலக்ட்ரிக் சுவிட்சுகள் மற்றும் பிற மின் சாதனங்களை ஆன் செய்வதையோ, ஏற்கனவே இயங்கிக்கொண்டு இருந்தால் அணைத்து விடுவதையோ தவிர்த்து விட வேண்டும். உடனே ஜன்னல்களைத்திறந்து வைத்து கசியும் கியாஸ் வெளியேற வழி ஏற்படுத்த வேண்டும். அத்துடன் கியாஸ் ஏஜென்சிக்கு போன் செய்து உதவி தேவையெனில் தகவல் சொல்லவேண்டும். மொத்தத்தில் விழிப்புடன் செயல்படுவது அவசியம்.