கியூபெக் தமிழர் முன்னேற்றச் சங்கம் முன்னின்று நடாத்திய கலைவிழாவும் இரவுவிருந்தும்

திங்கள் ஜூன் 25, 2018

கடந்த ஜூன் 9ம் திகதியன்று மாலை கியூபெக் தமிழர் முன்னேற்றச் சங்கமானது தனது இரண்டாவது ஆண்டிறுதிக் கலை நிகழ்வையும் இரவு விருந்தையும் மவுண்ட் றோயல் நகராட்சி அலுவலகத்தின் விழா மண்டபத்தில் கொண்டாடி இருந்தது.

கியூபெக் தமிழர் முன்னேற்றச் சங்க உறுப்பினர்களும், ஏனைய தமிழ்ப்பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும், பல்லின இனக்குழு அமைப்புக்களின் பிரதிநிதிகளூம் மொன்றியல் நகராட்சியினதும்,  நகராட்சிப் பேரூர்களதும் தேர்ந்தெடுக்கப்பட்ட அலுவலர்கள், நகராட்சி முதல்வர்கள், கியூபெக் மாகாண அரசு, கனேடிய மத்திய அரசு ஆதியவற்றின் நாடளுமன்ற உறுப்பினர்கள்,, அமைச்சர்கள், எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், அங்கத்தினர்கள் பொதுமக்கள் எனப் பலரும் திரண்ட இந்த விழா பல கலைநிகழ்ச்சி அம்சங்களையும் அரசியல் சம்பந்தமான உரையாற்றல்கள் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் ஆதியவற்றையும் அடக்கியிருந்தன. கனேடியப்பாராளுமன்றத்தின் ஒரே தமிழ் உறுப்பினரான கரி ஆனந்தசங்கரி அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

கியூபெக் தமிழர் முன்னேற்றச் சங்கமானது மொன்றியல் மாநகரையும் அதன் சுற்றுப்புறங்களையும் உள்ளடக்கி ஆங்கு வாழும் தமிழ்க் குடும்பங்களின் பாரம்பரிய விழுமங்களையும் நம்பிக்கைகளையும் பேணும் அதே வேளையில் அதன் பொருண்மிய, வாழ்நெறி, அரசியல் முயற்சிகளைப் பெரும்பான்மைச் சமுதாய நீரோட்டத்துடன் முரண்பாடின்றி இணைக்கும் குறிக்கோளுடனமைந்த ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும். இளந்தமிழ்ச்சமூகத்தினரதும் ஏனையோரதும் சமுதாய அபிவிருத்திக்கும் அவர் தம் வாழ்க்கைத்தர மேம்பாட்டுக்கும் ஆவன செய்வதென்பதும் அதன் இன்னொரு இலக்காகும்  

அந்த வகையில் தனிப்பட்டோருக்கும் குடும்பங்களுக்குமான மதிவளத் துணை,சமூகசேவை அன்றில் ஏனைய சேவைகளின் முகவகங்களுக்கான பரிந்துரை மற்றும் விதப்புரை,தொழிலிலிணைப்புத் திட்டங்கள்,குற்றத்தடுப்பு வேலைத்திட்டங்கள், சமுதாயச் செயற்பாட்டுத் தாங்குதுணை,இளைஞர்களுக்கான விளையாட்டுத் துறைத் தொழிற்பாடுகள்,அரச (மற்றும் ஏனைய) முகவகங்களுக்குரிய படிவங்களை நிரப்புதலிலுதவி,கனேடியக் குடிமகற் தேர்வுப்பரீட்சைக்குத் தயார் பண்ணுவதிலுதவி, மொழிமாற்றுச் சேவைகள் போன்ற கட்டணமற்ற பல பணிகளையும் மேற்கொண்டு வருகின்றது.

தேசிய, மாகாணத்திய, பிராந்திய மற்றும் உள்ளூர் நிகழ்வுகளில் தமிழ் மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்கும் நிலை காணல், மொன்றியல்வாழ் ஏனைய இனக்குழுக்களுடன் தொடர்ச்சியான தொடர்பாடலை உருவாக்கி மேம்படுத்திச், சமூகார்வம் நிறைந்த வாழ்முறை ஒன்றை ஊக்குவித்தல், ஏனைய இனக்குழுக்களுடன அரசியலில் இசைவழிகாணுதற்கான உசாவுதல்களும் அவற்றுடனிணைந்து வரும் வளங்களின் முன்னெடுப்பும் போன்றவையும் கியூபெக் தமிழர் முன்னேற்றச் சங்கம் தொடர்ந்து அக்கறை காட்டிவரும் விடயங்களாகும்

இந்த வகையிலமைந்த இலாபநோக்கற்ற இந்தச் சேவைகளைப்பாராட்டி மத்திய அரசின் அமைச்சரான மெலானீ ஜொலி அம்மையார் அவர்களும் ஏனைய மத்திய நாடாளுமன்ற அங்கத்தினர்களும் கியூபெக் தமிழர் முன்னேற்றச் சங்கத்துக்குப் பாராட்டுக்கேடயமொன்றை வழங்கினர்.

மொன்றியல் நகரிலும் சுற்றுப்புறங்களிலும் பொதுச்சேவைகளிற் தம்மைச் சிறப்பித்துக்கொண்ட நால்வருக்கு கியூபெக் தமிழர் அபிவிருத்திச் சங்கமும் நாடளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி அவர்களும் இணந்து சான்றிதழ்களையும், கேடயங்களையும் வழங்கினர். இளைஞர் சேவையிற் சிறந்து விளங்கிய வினோத் நவஜீவானந்தா, வன்னி மக்களின் சேவையிற் சிறந்து விளங்கிய தெய்வேந்திரன் கந்தையா, மகளிர் சேவையிற் சிறந்து விளங்கிய சிவமலர் கந்தையா, குழந்தைகளின் விளையாட்டுத் துறையில் ஊக்கமும் ஆக்காமும் காட்டிய  திருமலை விளையாட்டுக்கழகம் ஆகிய நால்வரே இவர்கள்.

அழகான நடனங்களை வழங்கிய தமிழ்க் குழந்தைகள் அனைவருமேபாராட்டப்பட வேண்டியவர்கள். விழாவின் சிறப்புக்காக வெகு ஆர்வத்துடன் உழைத்த  கியூபெக் தமிழர் அபிவிருத்திச் சங்கச் செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் எமது பாராட்டுக்கள்