கிரேக்கத்தின் பிரதான நிலப் பகுதியை நோக்கி ஆயிரக்கணக்கான குடியேற்றவாசிகள் படையெடுப்பு

வியாழன் செப்டம்பர் 03, 2015

கிரேக்கத்தின் பிரதான நிலப் பகுதியை ஆயிரக்கணக்கான குடியேற்றவாசிகள் வந்தடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பெருந்தொகையாக படையெடுத்து வரும் குடியேற்றவாசிகளைக் கட்டுப்படுத்தும் முகமாக அந்நாட்டு அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை நடத்தத் தயாராகி வருகின்ற நிலையிலேயே மேற்படி குடியேற்றவாசிகளின் பிரவேசம் இடம்பெற்றுள்ளது.

 


லெபொஸ் தீவிலிருந்து 4,200 பேருக்கும் அதிகமானோரை ஏற்றி வந்த இரு கப்பல்கள் கிரேக்கத்தின் பிரேயஸ் துறைமுகத்தை செவ்வாய்க்கிழமை இரவு வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குடியேற்றவாசிகளின் அளவுக்கு மீறிய வருகையால் முழு ஐரோப்பிய ஒன்றியமுமே திண்டாட்டத்தை எதிர் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


தனது நாட்டினூடாக ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பயணத்தை மேற்கொள்ள முயற்சித்த சட்டவிரோத குடியேற்றவாசிகளை ஹங்கேரி தடுத்ததையடுத்து, பெருந்தொகையான குடியேற்றவாசிகள் அந்நாட்டிலுள்ள புகையிரத நிலையமொன்றுக்கு வெளியில் ஸ்தம்பிதமடைந்த நிலையில் உள்ளனர்.

 


அந்தக் குடியேற்றவாசிகளில் அநேகர் மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்தவர்களாவர். கடந்த வாரத்தில் மட்டும் கிரேக்கத்தை 23,000 குடியேற்றவாசிகள் வந்தடைந்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லைக் கட்டப்பாட்டு நிலையமான புரொன்ரெக்ஸ் தெரிவித்துள்ளது. இது அதற்கு முந்திய வாரத்திலான குடியேற்றவாசிகளின் பிரவேசத்துடன் ஒப்பிடுகையில் 50 சதவீதம் அதிகமாகும்.

 


இந்த வருடத்தில் கிரேக்கத்தை 160,000 க்கு மேற்பட்ட குடியேற்றவாசிகள் வந்தடைந்துள்ளனர். இந்நிலையில் கிரேக்கத் தீவான கொஸ்ஸை சென்றடையும் முகமாக துருக்கியிலிருந்து புறப்பட்ட இரு படகுகள் நேற்று புதன்கிழமை மூழ்கியதையடுத்து, அதில் பயணித்த குறைந்தது 11 குடியேற்றவாசிகள் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 


டுப்ளின் ஒழுங்கு விதிகள் என அறியப்படும் ஐரோப்பிய ஒன்றிய சட்டமானது அகதிகள் தாம் முதலாவதாக பிரவேசிக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாட்டில் புகலிடம் கோர வேண்டியுள்ளது. மத்திய கிழக்கிலிருந்து புறப்படும் மேற்படி அகதிகளின் முதலாவது பிரவேச நாடுகளாக இத்தாலியும் கிரேக்கமும் உள்ள போதும், அந்நாடுகள் பெருந்தொகையாக படையெடுத்து வரும் அகதிகளை கையாள முடியாது திண்டாடி வருகின்றன. இதன் காரணமாக அகதிகள் அந்நாடுகளின் வடக்கேயுள்ள நாடுகளை நோக்கி தமது படையெடுத்து வருகின்றனர்.