கிளிநொச்சியில் போராடும் காணாமற்போனோரின் உறவுகளை சுவிஸ் தூதுவர் சந்தித்தார்

புதன் மார்ச் 14, 2018

கிளிநொச்சியில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாகப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமற்போனோரின் உறவினர்களை சிறிலங்காவுக்கான சுவிஸ் தூதுவர் ஹெய்ன்ஸ் வால்க்கர்  நேற்று (13) சந்தித்துக் கலந்துரையாடினார். 

இதன்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக சுவிஸ் தூதுவர் கேட்டறிந்து கொண்டார். 

தமது பிள்ளைகளை, உறவினர்களை சிறிலங்கா படைகளே கைது செய்தனர் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். படைகளின் அறிவிப்பை ஏற்று தாங்களாகவே தமது பிள்ளைகளைக் கையளித்தனர் என சில பெற்றோர் தெரிவித்தனர். 

அவர்கள் தடுத்துவைத்திருப்பதை நாம் அறிந்துள்ள போதிலும் இதுவரை விடுவிக்கப்படவில்லை என சிலர் கூறினர். அவர்களின் கதைகளை சுவிஸ் தூதுவர் கேட்டறிந்துகொண்டார். 

இதேவேளை, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் 388 ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றது.