கிளிநொச்சியைச் சேர்ந்த குடும்பத்தலைவரைக் காணவில்லை!

Sunday April 15, 2018

பணி நிமித்தம் கொழும்பில் வசித்து வந்த கிளிநொச்சியைச் சேர்ந்த குடும்பத்தலைவரை கடந்த 12ஆம் திகதி முதல் காணவில்லை என உறவினர்களால் அக்கராயன் காவல் துறை  நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சி ஆனைவிழுந்தானைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான வேலாயுதம் விக்கினேஸ்வரன் (வயது – 46) என்பவரே காணாமற்போயுள்ளார் என அவரது மனைவி திருமதி வி.விஜயகுமாரி முறைப்பாடு செய்துள்ளார்.
 
கொழும்பில் தனியார் நிறுவனம் ஒன்றில் குடும்பத்தலைவர் பணியாற்றுகிறார். புத்தாண்டை முன்னிட்டு வீடு திரும்பவுள்ளதாக கடந்த 12ஆம் திகதி வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில் அவர் தனது மனைவியிடம் தொலைபேசியில் கதைத்துள்ளார்.

அதன்பின்னர் அவர் தொலைபேசியில் தொடர்புகொள்ளவில்லை. அவரது அலைபேசியும் செயலிழந்துள்ளது.கணவர் இரண்டு நாள்களாக அலைபேசியில் கதைக்கவுமில்லை – வீடு் திரும்பவுமில்லை என்ற நிலையில் அவரது மனைவி நேற்று (14) சனிக்கிழமை அக்கராயன் காவல் துறை நிலையத்தில்
முறைப்பாடு செய்துள்ளார்.

அத்துடன் குடும்பத்தலைவர் பணியாற்றும் நிறுவனத்துடன் தொடர்புகொண்ட போது, 11ஆம் திகதியுடன் அவர் பணிக்கு வரவில்லை என பதில் வழங்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.
 
முறைப்பாடு தொடர்பில் காவல் துறை தலைமையகம் ஊடாக சகல காவல் துறை நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றிரவுவரை (15) எந்த தகவலும் கிடைக்கவில்லை என அக்கராயன்காவல் துறையினர்  தெரிவிக்கின்றனர். என குடும்பத்தலைவரின் உறவினர்கள் தெரிவித்தனர்.