குட்டி பகை, ஆடு உறவா?

Wednesday November 29, 2017

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் இருப்பை மறுதலித்து, சிங்களக் கைப்பாவையான கே.பியைத் தலைவராகக் கொண்டு உருவாக்கப்பட்டதே தலைமைச் செயலகம் என்ற கும்பலாகும்.

புலம்பெயர் தேசங்களில் கடந்த எட்டரை ஆண்டுகளில் நிகழ்ந்தேறிய வன்முறைகள், போட்டி மாவீரர் நாள் நிகழ்வுகள் எனப் பல குழப்பங்களுக்குக் காரணமாக இருப்பது இந்தக் கும்பல்.

இறுதி யுத்தத்தில் எதிரியிடம் சரணடைந்து சக போராளிகளைக் காட்டிக் கொடுத்த தேசத் துரோகிகளை உள்ளடக்கியது இக் கும்பல்.

ஆண்டுதோறும் மாவீரர் நாளில் தமிழீழ தேசியத் தலைவரின் உரை மட்டும் வெளிவரும் நடைமுறை 1989ஆம் ஆண்டிலிருந்து அமுலில் இருக்கும் நிலையில், 2009ஆம் ஆண்டிலிருந்து அதே நாளில் அறிக்கை வெளியிட்டு மக்களிடம் இருந்து அந்நியப்பட்டுப் போன ஒரு கும்பல் இது.

இவ்வாறு தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட, தேசத்துரோகக் கும்பலாக மக்களால் இனம்காணப்பட்ட ஒரு கும்பலின் அறிக்கையின் ஒலிவடிவம் கடந்த திங்கட்கிழமை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மாவீரர் நாள் மண்டபங்களில் ஒலிபரப்பாகியமை பொதுமக்களை மட்டுமன்றி தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கின்றது.

இது பற்றிப் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர்களில் ஒருவரான கோபி சிவந்தன் அவர்கள் எம்மிடம் கருத்துக் கூறுகையில், இலண்டன் எக்செல் மாவீரர் நாள் நிகழ்வில் தலைமைச் செயலகம் என்ற கும்பலின் அறிக்கை ஒலிபரப்பாகியமை தமக்கு அதிர்ச்சியை அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாட்டாளர்கள் மீது அவதூறு பரப்பி, ஒக்ஸ்போட் காட்டுப்புறத்தில் உள்ள மாட்டுப் பண்ணை ஒன்றில் போட்டி மாவீரர் நாள் நிகழ்வை நடாத்தும் தலைமைச் செயலகம் என்ற சிங்கள ஒட்டுக்குழுவின் அறிக்கை எவ்வாறு பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் எக்செல் மண்டபத்தில் ஒலிபரப்பாகியது என்று தனக்குத் தெரியவில்லை என்றும், அறிக்கையின் நிறைவில் தலைமைச் செயலகம் என்று கூறப்பட்ட பொழுது தான் திகைத்து நின்றதாகவும் பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் கலை பண்பாட்டுப் பிரிவின் மூத்த செயற்பட்டாளர் கார்த்திக் அதிர்ச்சி வெளியிட்டுள்ளார்.

ஆடு பகை, குட்டி உறவு என்ற கதை மாறி, குட்டி பகை, ஆடு உறவு என்ற நிலையாகத் தலைமைச் செயலகம் என்ற கும்பலுடன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாட்டாளர்கள் அனைவரும் முரண்பட்டு நிற்க, இவர்களுக்குத் தலைமை தாங்குவதாகக் கூறிக் கொள்ளும் அனைத்துலகத் தொடர்பகத்தினர் எனக் கூறும் குழுவினர் தலைமைச் செயலகம் என்ற கும்பலுடன் இரகசிய உறவையும், உடன்படிக்கையையும் பேணித் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவை அழிப்பதற்கான சதி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்களோ என்ற அச்சமே தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இது இவ்விதமிருக்க இக் குழப்பங்களுக்குக் காரணமானவர்கள் யார் என்பது சங்கதி-24, ஈழமுரசு ஆகியவற்றிற்கு நன்கு தெரியும் என்றும், அப்படியிருந்தும் இப்படியானவர்களை மக்கள் மத்தியில் ஏன் சங்கதி-24, ஈழமுரசு ஆகியவை வெளிக்கொணரத் தயங்குகின்றன என்றும் கேள்வியெழுப்பி அதிர்வு என்ற இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.

குட்டி பகை, ஆடு உறவு என்ற கதையாக தலைமைச் செயலகம் என்ற கும்பலின் நிகழ்ச்சித் திட்டத்திற்குள் நிற்கும் இரண்டகர்கள் யார் என்பது அதிர்வு இணையம் குறிப்பிட்டிருப்பது போல் நாம் நன்கு அறிந்த ஒன்றே.

ஆயினும் அதிர்வு இணையம் கூறுவது போன்று இவர்களின் விபரங்களை வெளிக்கொணர்வதற்கு நாம் தயங்கவில்லை. அன்றி இது விடயத்தில் தலைமைச் செயலகம் என்ற கும்பலுக்கும், அவர்களுடன் இரகசிய உறவாடுவோரின் துரோகத்தனத்திற்கும் நாம் துணை போகவில்லை.

இவர்கள் யார்? இவர்கள் இது நாள் வரை என்ன செய்தார்கள்? என்பது பற்றிய ஆதாரங்கள் எம்மிடம் உள்ளன. இவற்றை விட இவர்கள் பற்றிய சில திடுக்கிடும் ஒலிப்பதிவுகள் மற்றும் மின்னஞ்சல்களைத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாட்டாளர்கள் சிலர் எமக்குத் தந்துதவ இணங்கியிருக்கின்றார்கள். இவை எமது கைகளுக்குக் கிடைக்கப் பெற்றதும் இவற்றை நாம் வெளியிடுவோம் என்பதை அறியத் தருகிறோம்.

அதிர்வு இணையம் வெளியிட்டிருக்கும் செய்தி:

'இதை விட கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் ஏதாவது இருக்க முடியுமா? தலைவர் பெயரில் உரை ..

முன்னர் எல்லாம் மாவீரர் நாள் நெருங்கி விட்டால் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் மாவீரர் நாள் அறிக்கையை எதிர்பார்த்து தமிழ் மக்களும், முழு உலகமும் காத்திருக்கும்.தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கை நிலைப்பாட்டை விளக்கும் அறிக்கையை தலைவர் பிரபாகரன் அவர்கள் அன்றுதான் வெளியிடுவார். ஆனால் கடந்த 2009ஆம் ஆண்டுக்குப் பிறகு மாவீரர் நாளில் தலைவர் பிரபாகரனின் அறிக்கையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மக்களுக்கு ஏமாற்றம் தான் கிட்டும்.

இம்முறையும் அப்படித்தான் நடக்கும் என்று மக்கள் எல்லோரும் கருதி அமைதியாக மாவீரர் நாள் மண்டபங்களுக்கு சென்றார்கள். கடந்த எட்டு வருடங்களாக நடைபெறுவது போன்று இம்முறையும் தேசியத் தலைவரின் உரை வெளிவரும் நேரத்தில் எந்த உரையும் வெளிவரவில்லை. எனவே மக்களும் வழமைபோல் விளக்குகளை ஏற்றி விட்டு, மாவீரர்களின் படங்களுக்கு மலர் தூவி விட்டு வெளியில் செல்லத் தயாராகிய போது திடீரென ஒரு குரல் மண்டபங்களில் ஒலித்தது.

‘எனது அன்பிற்கும், மதிப்பிற்கும் உரிய தமிழீழ மக்களே,’ என்று அந்தக் குரல் ஒலித்த போது எல்லோருமே திகைத்துப் போய் நின்றார்கள். தேசியத் தலைவரின் உரை வெளிவந்து விட்டது என்று எல்லோரும் தமது செவிகளை கூர்மையாக்கிய போது, யாரோ ஒருவர் தேசியத் தலைவரின் பாணியில் ஆற்றிய உரை மண்டபத்தில் ஒலிபரப்பப்படுவது புரிந்தது.

இது பற்றி அதிர்வு புலன் விசாரணை செய்த போது ஒரு திடுக்கிடும் தகவல் கிடைத்தது. சுவிற்சர்லாந்தில் கடந்த வருடம் இரகசியமாக கூட்டம் ஒன்று நடைபெற்றதாம். இந்தக் கூட்டத்தில் கூடிய ஐந்து பேர் தீர்மானம் ஒன்றை எடுத்தார்களாம். பூனையில்லா ஊரில் எலிகளுக்குக் கொண்டாட்டம் என்ற கதையாகப் புலிகள் மறைந்திருக்கும் இன்றைய காலத்தில் இந்த எலிகள் தாங்கள் தான் புலிகளின் தலைமைச் செயலகம் என்று அறிவித்தார்களாம்.

பின்னர் ஒவ்வொரு மாவீரர் நாளன்றும் தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற பெயரில் அறிக்கை விடுவதென்றும், அந்த அறிக்கை தங்களால் தெரிவு செய்யப்படும் ஒருவரால் ஒலிப்பதிவு செய்யப்பட்டு ஒவ்வொரு மாவீரர் நாள் மண்படங்களிலும் ஒலிபரப்பப்பட வேண்டும் என்றும் வெளிநாடுகளில் இயங்கும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் புலிகளின் ஏனைய கட்டமைப்புக்களுக்கு இவர்கள் உத்தரவு பிறப்பித்தார்களாம். இதனை அவர்களும் ஏற்றுக் கொண்டார்களாம்.

அப்படி இந்த ஐந்து பேரின் திரைக்கதை, வசனத்தில் உருவாகி, இவர்களால் தெரிவு செய்யப்பட்ட ஒருவரால் ஒலிப்பதிவு செய்யப்பட்ட அறிக்கை தான் இம்முறை மாவீரர் நாள் மண்டபங்களில் ஒலிபரப்பப்பட்டுள்ளது.

இதை விட கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் ஏதாவது இருக்க முடியுமா?

தலைவர் பிரபாகரனால் கட்டுக் கோப்புடன் வளர்க்கப்பட்ட இயக்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு. அந்த இயக்கத்தின் கடிதத் தலைப்பைக் களவெடுத்துத் தலைவர் அறிக்கை விடும் நாளில் தாங்கள் நினைத்தபடி ஐந்து காகிதப்புலிகள் அறிக்கை விட, அதை மாவீரர் நாள் மண்டபங்களில் ஒலிபரப்புச் செய்வதை விட தலைவருக்கு இவர்கள் வேறு என்ன துரோகத்தனம் செய்ய முடியும்? இவர்கள் யார் என்பது பற்றிய விபரங்களை நன்கு அறிந்திருந்தும் அது பற்றி எதுவும் எழுதாது சங்கதி௨4, ஈழமுரசு ஆகியவை மௌனம் காக்கின்றன. உருத்திரகுமாரனின் கடிதங்களை எல்லாம் வெளியிட்டு புட்டு வைத்த ஆதித்தன், சேரமான் போன்றவர்கள் ஏன் அமைதியாக இருக்கின்றார்கள்? இவர்களும் இந்தத் துரோகத்தனத்திற்குத் துணைபோகின்றார்களா?'