குமரி கடலில் மாயமான 101 மீனவர்களின் கதி என்ன?

Saturday December 02, 2017

குமரி மாவட்டத்தில் மீன்பிடிக்க சென்ற 101 மீனவர்களை கடற்படைக்கு சொந்தமான 2 கப்பல்கள் மூலமாகவும், உலங்கு வானூர்தி (ஹெலிகாப்டர்கள்) மூலமாகவும் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

குமரி மாவட்டத்தில் புயல் காரணமாக கடலிலும் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் கடலில் ராட்சத அலைகளும் எழும்பி மிரட்டுகிறது. குமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை ஏராளமான மீனவர் கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் விசைப்படகுகள், வள்ளங்கள் மூலம் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகிறார்கள்.

புயலை தொடர்ந்து குமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. புயல் எச்சரிக்கைக்கு முன்பே விசைப்படகு மூலம் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்ற மீனவர்களும் கரை திரும்ப தொடங்கினார்கள்.

ஆனால் கடலிலும், கடற்கரை பகுதியிலும் கடல் கடும் சீற்றத்துடன் காணப்பட்டதால் மீனவர்கள் கரை திரும்ப முடியாமல் சிரமப்பட்டனர். இந்த தகவல் கிடைத்ததும் மீனவர்களை பாதுகாப்பாக மீட்கும் பணி முடுக்கிவிடப்பட்டது.

மொத்தம் 312 மீனவர்கள் மாயமாகி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அந்த மீனவர்கள் படிப்படியாக மீட்கப்பட்டனர். ஆனால் 101 மீனவர்களை மட்டும் இன்னும் மீட்க முடியவில்லை. தொடர்ந்து அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கடற்படைக்கு சொந்தமான 2 கப்பல்கள் மூலமாகவும், ஹெலிகாப்டர்கள் மூலமாகவும் மீனவர்கள் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. புயல் காரணமாக குமரி மாவட்டத்தில் 55 மீன்பிடி படகுகள் கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்டு விட்டது. 9 படகுகள் கடலில் மூழ்கிவிட்டன. சின்ன முட்டம், குளச்சல் போன்ற பகுதிகளில் மீனவர்கள் தங்கள் படகுகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டுசென்றுள்ளனர்.

இன்றும் தொடர்ந்து கடல் சீற்றமாக காணப்படுகிறது. 10 அடி முதல் 15 அடி வரை ராட்சத அலைகள் எழும்பி கரையை நோக்கி சீறிப்பாய்கிறது. இதனால் கடற்கரை கிராமங்களில் சாலைகளும் கடல் நீரால் அரிக்கப்பட்டு உள்ளது. இதனால் அங்கு போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

குளச்சல், முட்டம், பிள்ளைத்தோப்பு போன்ற மீனவர் பகுதியை சேர்ந்த மக்கள் தங்கள் வீடுகளை காலி செய்துவிட்டு பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.