குமரி மீனவர்கள் போராட்டத்தில் பங்கேற்ற ஜி.வி.பிரகாஷ்

December 10, 2017

மாயமான மீனவர்களை மீட்க கோரி குமரி சின்னத்துறையில் நடைபெற்று வரும் போராட்டத்தில் இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் பங்கேற்றுள்ளார்.

கடந்த நவம்பர் 30-ந் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தை ஒக்கி புயல் தாக்கி கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது. புயலின்போது மீன் பிடிக்க சென்ற ஆயிரக்கணக்கான மீனவர்கள் மாயமானார்கள். அவர்களில் பலர் லட்சத்தீவு, கேரளா, கோவா, மராட்டியம், குஜராத் மாநில கடற்கரையில் தத்தளித்தனர்.

அவர்களை கடலோர காவல் படையினரும், கடற்படை வீரர்களும் மீட்டு வருகிறார்கள். இன்னும் ஏராளமான மீனவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியாததால் அவர்களை தேடும்பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

10 நாட்கள் ஆகியும் மீனவர்கள் மீட்கப்படாததால் அவர்களது குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்து தவிக்கிறார்கள். மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுக்க கோரி அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கன்னியாகுமரியின் சின்னத்துறை கிராமத்தில் இருந்து மீன்பிடிக்க 38 படகுகளில் சென்ற மீனவர்கள் நிலைமை இதுவரை என்னவென்று தெரியவில்லை. இந்த மீனவர்களை மீட்கக் கோரி சின்னதுறையில் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இன்று 2-வது நாளாக சின்னத்துறையில் நடைபெற்று வரும் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றுள்ளனர். இவர்களுடன் மீனவர்களை காப்பாற்றுக எனும் பதாகைகளுடன் இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷூம் பங்கேற்றார். இதுபோல், ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஜி.வி.பிரகாஷ் கலந்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இணைப்பு: 
செய்திகள்