கூட்டமைப்பின் உதவியுடன் தமிழீழக் கனவை அழிக்கும் சிங்களத்தின் ‘ஏக்கிய ராச்சிய’

புதன் சனவரி 09, 2019

தமிழீழத் தாய்த்திருநாட்டில் தமிழ் மக்கள் நிம்மதியாகவும் சுபீட்சமாகவும் வாழக்கூடிய நிலை ஒன்றைத் தோற்றுவிப்பதற்காக அர்ப்பணிப்புடன் களமாடி வீழ்ந்த மாவீரர்களின் கனவுகளைத் தாங்கி மீண்டும் ஒரு தைத்திங்களில் தமிழர்கள் காலடி பதிக்கின்றனர். புதிய ஆண்டில் புதிய சிந்தனைகள், புதிய நம்பிக்கைகள், புதிய செயற்பாடுகளுடன் தமிழர் வாழ்வு ஆரம்பமாகவிருக்கின்றது.

எனினும், இந்த ஆண்டில் தமிழர்களின் நம்பிக்கையை சிதறடித்து முப்பது வருடப் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் செயற்பாடு நடைபெறவுள்ளது என்ற செய்தியையும் தமிழ் மக்கள் அறிந்துகொள்ளவேண்டும்.

அதுதான் சிறீலங்காவின் புதிய அரசியலமைப்பு. சிறீலங்காவின் எந்த ஆட்சிக்கு எதிராக தமிழர்கள் போராடினார்களோ அதே ஆட்சி முறையை உள்ளடக்கிய அரசமைப்பு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அதுதான் ஒற்றையாட்சியுடன் பெளத்தத்திற்கு முன்னுரிமை அளிக்கும் அரசமைப்பு.

தமிழர்களின் ஜனநாயகப் பிரதிநிதிகள் எனத் தம்மைக் காட்டிக்கொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த அரசமைப்பை நிறைவேற்றுவதற்கு பகீரதப் பிரயத்தனத்தில் ஈடுபட்டு வருகின்றது. அமெரிக்காவின் விசுவாசியாகவும் சிங்கள தேசத்தின் எடுபிடியாக
வும் நடந்துகொள்ளும் எம்.ஏ.சுமந்திரன் இந்த அரசமைப்பைக் கொண்டுவருவதற்கு துடி
யாய்த் துடித்துக்கொண்டிருக்கின்றார்.

ஒற்றையாட்சியை மையப்படுத்தியே அரசமைப்பு உருவாக்கப்படும் எனவும் அதில் பெளத்தத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் சிங்கள தேசம் தொடர்ச்சியாகக் கூறிவந்தது. அதன் அடிப்படையிலேயே புதிய அரசமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதில் ஏக்கிய ராச்சிய என்ற சொற்பதத்திற்கான இழுபறிகளுக்கும் தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாகவே தெரிகின்றது.

ஈழமுரசு ஏற்கனவே சுட்டிக்காட்டியதைப் போன்று, ‘ஏக்கிய ராச்சிய’ என்ற சொற்பதம் தமிழிலும் நேரடியாக ஒற்றையாட்சி என்பதையே குறிக்கின்றது. ஆனால், தமிழர் பிரதிநிதியாக நின்று அரசமைப்பை உருவாக்கும் குழுவில் பங்கெடுத்த கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அந்த சொற்பதத்திற்கு கூட்டாட்சி அல்லது சமஷ்டி என அர்த்தம் கொடுக்கின்றார்.

இதன் மூலம் அவர் ஒட்டுமொத்த தமிழினத்தையும் சிங்கள தேசத்திற்கு தாரை வார்க்கின்றார்.

சுமந்திரன் என்ற துரோகியால் தமிழர் தாயகம் கூறுபோடப்படுவதை ஒட்டுமொத்த தமிழர்களும் ஏன் பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள் என்பதே இன்றைய கேள்வியாக இருக்கின்றது.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் புதிய அரசமைப்பு நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் எனவும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அது நிறைவேற்றப்படும் எனவும் சுமந்திரன் கூறிவருகின்றார்.

அது ஒருவேளை உண்மையாக நடந்துவிட்டால் தமிழ் மக்களின் முப்பது ஆண்டுகாலப் போராட்டத்திற்கான தீர்வாக அது அமைந்துவிடும். அரைகுறையாக அமைந்த இந்த அரசியலமைப்பை சர்வதேசமும் ஏற்றுக்கொண்டு வரவேற்கும். ஏனெனில், அதன் உருவாக்கத்தில், அதை ஏற்றுக்கொள்ள வைப்பதில் தமிழர்களின் பிரதிநிதிகளாகத் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழு மூச்சாக ஈடுபட்டு வருகின்றது.

தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வாகத்தானே புதிய அரசியலமைப்பு தேவைப்படுகின்றது என்பதே சர்வதேசத்தின் கருத்து. எம்.ஏ. சுமந்திரன் என்ற ஒற்றை நபருக்குள்ளேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடங்கிவிட்டது என்பதை சர்வதேசம் சீர்தூக்கிப் பார்க்கப்
போவதில்லை.

கூட்டமைப்பில் உள்ள ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடுத்த தடவை தேர்தலில் தங்களுக்கு ஆசனம் வழங்கப்பட வேண்டும் என்பதற்காக சுமந்திரனின் சூழ்ச்சிகளைக் கண்டும் காணாதவர்கள் போலச் செயற்படுகின்றனர் என்பதையும் சர்வதேசம் நம்பப்போவதில்லை.

சர்வதேசத்தின் கருத்து, அவர்களின் நம்பிக்கை, அவர்களின் எதிர்பார்ப்பு என்னவெனில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஆணை பெற்ற தனிப்பெரும் அரசியல் கட்சி. அவர்கள் தமிழ் மக்களின் நலன்களுக்காகவே உழைக்கின்றனர். அவர்கள் கூறினால் எல்லாம் சரி என்பதாகும்.

சுமந்திரனின் செயற்பாடுகளை உலகில் உள்ள எந்தத் தமிழர்களும் அறியாதவர்கள் அல்லர். அவரது பொது மேடை உரைகளை தமிழர்கள் கேட்காதவர்களாக இருக்கின்றார்களா? அப்படிக் கேட்டும் ஏன் அதற்கு எதிராகக் குரல் கொடுக்காமல் இருக்கின்றார்கள்?

கண்ணுக்கு முன்னே வன்னியில் இலட்சக்கணக்கான உயிர்கள் கொத்துக்கொத்தாகப் பலியயடுக்கப்பட்டபோது தமிழர்கள் உலகெங்கும் போராட்டம் நடத்தினர். வீதிக்கு இறங்கி கோசங்கள் எழுப்பினர்.

தற்போது, முப்பது ஆண்டுகாலப் போராட்டத்தின் தியாகங்களும் அர்ப்பணிப்புக்களும் சிங்கள தேசத்திடமும் சர்வதேசத்திடமும் அடகுவைக்கப்படுவதை தமிழர்கள் ஏன் பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள்?

வடக்கு -  கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படுவது சாத்தியமற்றது என தொடர்ந்தும் சுமந்திரன் கூறிவருகின்றார். அவரது கூற்றைப்போலவே சிறீலங்காவில் 9 மாகாணங்கள் என புதிய அரசமைப்பில் எழுதப்பட்டுள்ளது. வடக்கு - கிழக்கு இணைப்பு என்ற எந்தவிதச் சொற்பதமும் அதில் இல்லை.

அதுபோல், சிங்கள பெளத்தத்திற்கு முதலிடம் எனக் கூறப்பட்டுள்ளது. அவ்வாறு எனில், இந்து, கிறிஸ்தவ, இஸ்லாம் மதங்கள் பெளத்தத்திற்கு அடிமையாக இரண்டாம் தரப்பாகும். இவர்கள் அனைவரும் சிங்கள பெளத்தத்திற்கு அடிமைகள் என்பதுதான் கருத்து.

இது சிங்கள இனத்தை தமிழரை விட உயர்ந்த இனமாக்கும்.

‘ஏக்கிய ராச்சிய’ என்றால் ற்ஐஷ்மிழிrதீ விமிழிமிe தமிழில் ஒற்றையாட்சி. இதன் கருத்து சமஷ்டி (கூட்டாட்சி) என்பதில்லை. ஒற்றையாட்சி என்பது சிங்களவர் எந்த சட்டத்தையும் உருவாக்கலாம், அழிக்கலாம். தமிழருக்கு ஒர் உரிமையும் இல்லை என்பது தான் அர்த்தம்.

சிறீலங்காவில் சிங்களவர் தயவில் தான் தமிழர்கள் வாழலாம் என்பதே இதன் வெளிப்படை உண்மை. 1972 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அரசமைப்பில் உள்ளடக்கப்பட்ட ‘ஏக்கிய ராச்சிய (ஒற்றையாட்சி)’ என்ற பதமே புதிய அரசமைப்பிலும் புகுத்தப்பட்டுள்ளது. இது கூட்
டாட்சி (சமஷ்டி) இல்லை என்பதை கூட்டமைப்பில் உள்ள அத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்களும் உணர்ந்துகொள்ள மறுப்பது ஏன்?

புதிய அரசியல் அமைப்பில் வடக்கு கிழக்கு பிரிப்பு, ஒற்றையாட்சி, சிங்கள பெளத்த மதத்திற்கு முதலிடம் என்று எல்லாவற்றினையும் விட்டுக்கொடுத்துவிட்டு கூட்டமைப்பு தமிழர்களுக்கு எதனைப் பெற்றுக்கொடுக்கப்போகின்றது?

சிங்களவர்களுக்கு தாம் நெழிந்து வழைந்து போகவும் தயார் என்றால், சுமந்திரனுக்கு மூளை இல்லை என்பதுதான் பொருள். சுமந்திரன் எல்லாவற்றினையும் விட்டுகொடுத்துவிட்டார் என்று ரணில் விக்கிரமசிங்கவே கடந்த 2017 செப்டெம்பர் மாதம் கூறியிருந்தார்.

அதேபோல, சம்பந்தரைப் போன்ற சிறந்த தலைவர் எவரும் இல்லை, சம்பந்தர் காலத்திலேயே புதிய அரசமைப்பை உருவாக்கிவிட வேண்டும் என சில சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிப்படையாகவே பொது மேடைகளில் உரையாற்றியிருக்கின்றனர். இவ்வாறான செயற்பாடுகள் எதை வெளிப்படுத்துகின்றது?

தமிழர்கள் ஏன் இதை உணராமல் இருக்கின்றனர்?

தாயகத்தில் இவ்வாறான இழிநிலை நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது புலம்பெயர் தேசத்தில் உள்ள தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் வாழாவிருப்பது தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்குச் செய்யும் துரோகமாகவே பார்க்கப்படும்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரால், தமிழ்த் தேசியத்தின் பெயரால், கொல்லப்பட்ட தமிழ் மக்களின் பெயரால் புலம்பெயர் தேசத்தில் அமைப்புக்களை நடத்தி, வீர வசனம் பேசிக்கொண்டிருக்கும் எவராக இருந்தாலும் முதலில் தாயகத்தில் நடைபெறவிருக்கின்ற இந்தப் பாரிய இன அடிமைத்தனச் செயற்பாட்டை வலுவாக எதிர்க்கவேண்டும்.

இலட்சக்கணக்கான மக்களின் தியாகத்தை, பல்லாயிரக்கணக்கான மாவீரர்களின் அர்ப்பணிப்பை சிங்களத்திற்கு தாரைவார்ப்பதற்கான அனுமதியை சுமந்திரன் என்ற ஒற்றை நபருக்கு கொடுத்துவிட்டு நீங்கள் உங்களுக்குள் வீரம் பேசிக்கொண்டிருக்கின்றீர்கள்.

இது முக்கியமான காலகட்டம், புதிய அரசியலமைப்பை நிறைவேற்ற அனுமதிக்க மாட்டோம் என்று மகிந்த அணி நாடாளுமன்றின் உள்ளேயும் வெளியேயும் கத்திக்கொண்டிருப்பது எல்லாம் வெறும் போலிச் செயற்பாடு. எதிர்ப்பது போல நடந்துகொண்டு தமிழர்களை ஏமாளிகளாக்கி அந்த அரசியலமைப்பை நிறைவேற்றிவிடுவதே சிங்கள தேசத்தின் குறிக்கோள்.

தமிழர்களை அடிமைப்படுத்துவதற்கு சிங்கள தேசம் ஒன்றுபட்டு நிற்கின்றது. ஆனால், அந்த அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை பெறுவதற்குத் துடிக்கின்ற தமிழர் தரப்பு தமக்குள் பிரிவினைகளுடன், பதவிகளுக்காக மோதிக்கொண்டிருப்பது நியாயமானது அல்ல.

ஒற்றையாட்சி அரசமைப்புக்கு எதிராக தமிழர் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் பலத்த குரல் எழுப்பப்படவேண்டும்.தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தேசியத் தலைவரோ, தளபதிகளோ, போராளிகளோ கிடைத்த சந்தர்ப்பங்களைத் தவற விட்டதில்லை. திட்டமிட்டுக் காய்களை நகர்த்துவதில் சளைத்தவர்கள் அல்லர்.

எந்தச் சக்திகளுக்கும் சோரம் போனவர்கள் அல்லர். அவர்களைப் பின்பற்றி வந்தவர்கள், அவர்களின் பெயரால் இன்றும் செயற்பட்டுக்கொண்டிருப்பவர்கள் ஈழத்தில் ஒற்றையாட்சி அரசமைப்பு உருவாக இடமளிக்கப்போகின்றார்களா?

புலம்பெயர் தேசங்களிலோ தாயகத்திலோ தேசிய செயற்பாட்டாளர்கள் எனத் தம்மைக் கூறிக்கொள்பவர்கள் சிறீலங்காவில் ஒற்றையாட்சியும் பெளத்தத்திற்கும் முன்னுரிமை கொடுக்கப்படும் அரசமைப்பு உருவாகுவதை பார்த்துக்கொண்டிருந்தால் எதிர்காலத்தில் தமது அமைப்புக்களை கலைத்துவிட்டு இருக்கவேண்டிய நிலையே ஏற்படும்.

ஏனெனில், புதிய அரசியலமைப்பு உருவாகினால் அதுவே சிறீலங்காவில் உள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமையும். அதற்குப் பின்னர் தமிழீழம் என்றோ தமிழர் தாயகம் என்றோ எந்தக் கதைக்கும் இடமிருக்காது. இது குறித்து அனைத்துத் தமிழர் அமைப்புக்களும் ஆழ்ந்து சிந்திக்கவேண்டும்.

‘தாயகத்தில் இருந்து’ காந்தரூபன்

நன்றி: ஈழமுரசு