கூட்டமைப்பும் சேர்ந்து தமிழ்மக்கள் தலையில் பூச்சுற்றப்போகின்றதா?

புதன் நவம்பர் 23, 2016

ஊடகச் செய்திகளின் படி புதிய யாப்பு முயற்சிகள் இறுதிக்கட்ட நிலைக்கு வந்துள்ளன. 19 ஆம் திகதி அரசியல் யாப்புத் திருத்தத்திற்கான உப குழுக்கள் தமது அறிக்கையினைஅரசியல் அமைப்பு பேரவையிடம் சமர்ப்பித்துள்ளன. டிசம்பர் நடுப்பகுதியில் இடைக்கால அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.பின்னர் இது தொடர்பான விவாதம் நடைபெறும். தொடர்ந்து வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு யாப்பு நிறைவேற்றப்படும். பாராளுமன்றத்திற்கு சமூகமளிக்காதோர் உட்பட 2/3 பெரும்பான்மையுடன் அது நிறைவேற்றப்படல் வேண்டும்.

யாப்பு சீர்திருத்தக் குழுவில் உள்ள சிறீலங்கா சுதந்திரக் கட்சி, ஜே.வி.பி உறுப்பினர்களதும் சம்மதத்துடன் யோசனைகள் உருவாக்கப்பட்டுள்ளதால் அரசாங்கத்துடன் உள்ள சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பதற்கு வாய்ப்புக்கள் குறைவு. வெளியில் உள்ள மகிந்தர் அணி எதிர்ப்பதற்கு முற்படலாம். இந்த எதிர்ப்பு அணியின் பிரச்சாரம் வலிமையாக இருந்து சிங்கள மக்களும் அதனை ஏற்றுக் கொள்ளும் நிலை இருந்தால் அரசாங்கத்துடன் இருக்கின்ற சுதந்திரக்க கட்சியினரின் மனங்களும் மாறலாம். எனினும் அமைச்சர் பதவி, ஊழல் வழக்குகள் தொடரப்படலாம் என்ற அச்சம், அரசாங்கத்திற்கு பின்னால் நிற்கும் இந்திய அமெரிக்க சக்திகளின் அழுத்தங்கள் அவர்களை ஒரு கட்டுக்குள் வைத்திருக்க முயற்சிக்கும்.

வெளியில் இருக்கும் சிங்கள பெருந்தேசிய வாதிகள், பௌத்த மத சக்திகள் எதிர்க்க முற்படலாம். ஆனாலும் பெரிய அரசியல் கட்சிகளின் ஆதரவில்லாமல் அவர்களினால் வலிமையான எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது.இது விடயத்தில் எல்லாமே மகிந்தர் தரப்பில் தங்கியிருக்கின்றது என்றே கூற வேண்டும்.

புதிய அரசியல் யாப்பு ஜனாதிபதி முறை மாற்றம்,தேர்தல் முறை மாற்றம்,இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு என்பவற்றையே கொண்டிருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. முதல் இரண்டிற்கும் சிங்கள தரப்பிடமிருந்து பெரிய எதிர்ப்புக்கள் வரப்போவதில்லை. ஆனால் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக சிறிய தோற்றம் இருந்தாலும் அது பூதாகாரப்படுத்தப்பட்டு வலிமையான எதிர்ப்பு உருவாக்கப்படும். மகிந்தர் தரப்பு தமது புதிய கட்சியை வளப்பதற்கும் இவற்றை ஒரு கருவியாகப் பயன்படுத்தலாம். ஏற்கனவே சிங்கள மக்கள் மத்தியில் உணர்வு பூர்வ விடயங்களாக இருக்கின்ற இந்தியாவுடனான எட்கா உடன்படிக்கை,அங்கவீனர் இராணுவத்தினர் மீதான தாக்குதல், புதிய அரசியல் யாப்பு முயற்சிகள் போன்றவை பற்றி போராட்டங்கள் நடாத்த இருப்பதாக மகிந்தர் அணி அறிவித்துள்ளது. 

மைத்திரி– ரணில் அரசாங்கம், அரசாங்கத்தைக் கைப்பற்றி ஒரு சில மாதங்களுக்கிடையில் புதிய யாப்பினைக் கொண்டு வந்திருந்தால் பெரிய எதிர்ப்பு வந்திருக்காது. தற்போது அரசாங்கம் உள்ளும் புறமும் நெருக்கடிகளைச் சந்தித்துக் கொண்டிருக்கின்ற நிலையில் இது விடயத்தில் பாரிய சவால்களை சந்திக்கும் நிலையே உண்டு. மகிந்தர் அணியைப்பலவீனப்படுத்தும் முயற்சி அரசாங்கத்திற்குப் பெரிய வெற்றியைக் கொடுக்கவில்லை. மைத்திரி தற்போது தற்காப்பு நிலைக்குச் சென்றிருக்கின்றார்.


தற்போது நடைமுறையில் உள்ள அரசியல் யாப்பில் திருத்தங்களை கொண்டுவரவேண்டுமாயின் ஒற்றையாட்சிக் கட்டமைப்பினை மாற்றுதல், தேசியக் கொடியை மாற்றுதல், தேசிய தினத்தை மாற்றுதல், பௌத்தமதம் முதன்மை மதம் என்பதை மாற்றுதல், அடிப்படை உரிமைகள் பகுதியில் சில உறுப்புரைகளை மாற்றுதல், மக்கள் இறைமை பகுதியை மாற்றுதல் போன்றவற்றிற்கு பாராளுமன்றத்தில் 2ஃ3பெரும்பான்மையுடன் மக்கள் தீர்ப்பு ஒன்றின் மூலம் மக்களின் சம்மதமும் அவசியமாகும். இங்கு இனப்பிரச்சினைக்கு தீர்வு என்ற விடயத்தில் தான் மக்கள்தீர்ப்பு தேவைப்படலாம். அதாவது ஒற்றையாட்சிக்கட்டமைப்பை மாற்றுதல் என்கின்ற நிலை ஏற்பட்டால் தான் மக்கள் தீர்ப்பு தேவைப்படும்.

தற்போது வந்திருக்கின்ற தகவல்களின்படி இலங்கை ஒற்றையாட்சி அரசு என்பது மாற்றப்படப்போவதில்லை. மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் வழங்கப்படுவது போல ஒரு தோற்றம் கொடுக்கப்படலாம். நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஒற்றையாட்சி என்ற பதத்தில் மாத்திரமல்ல கட்டமைப்பில் சிறிய மாற்றங்கள் வந்தாலும் சிங்களத் தரப்பிலிருந்து பலமான எதிர்ப்பு கிழம்பும். 

இலங்கை சிங்கள பௌத்த அரசாக இருக்க வேண்டுமாயின் ஒற்றையாட்சி கட்டமைப்பு பாதுகாக்கப்படல் வேண்டும். அதில் சிறிய தூசு வருவதைக்கூட சிங்கள மக்கள் அனுமதிக்கப்போவதில்லை. இந்த ஒற்றையாட்சிக் கட்டமைப்பு இருக்கும் வரைஇலங்கை ஒரு சிங்கள பௌத்த அரசாகவே இருக்கும். மத்திய அரசினை சிங்கள பௌத்த அரசாக வைத்துக்கொண்டு என்ன அதிகாரப்பகிர்வு வழங்கினாலும் அது ஒருபோதும் நடைமுறைக்கு வரப்போவதில்லை.

ஒற்றையாட்சி என்ற பதத்தை மாற்றாமல் மாகாணசபைகளுக்கு அதிகாரம் வழங்கப்படுவது போல ஒரு தோற்றம் கொடுக்கப்பட்டால் கூட சிங்களத் தரப்பு போராட்டங்களுக்கப்பால் உயர்நீதிமன்றத்தையும்  நாடலாம்.

தற்போதுள்ள அரசியல் யாப்பின்படி இலங்கை அரசு ஒரு ஒற்றையாட்சி அரசு  என்பதையும், உறுப்புரை – 76 இன்படி பாராளுமன்றம் தனது சட்டவாக்க அதிகாரத்தை துறத்தலோ பாராதீனப்படுத்தலோ ஆகாது என்பதையும் புதிய அரசியல் யாப்பு நிராகரிக்கின்றது என உயர் நீதிமன்றத்தில் வாதிடப்படலாம். ஏற்கனவே 13 ஆவது திருத்தத்தின் போதும் இந்நிலை ஏற்பட்டது. மேற்படி உறுப்புரைகளை 13 ஆவது திருத்தம் மீறுகின்றது என வாதிடப்பட்டது. 

உறுப்புரை – 76 அதாவது பாராளுமன்றம் தனது சட்டவாக்க அதிகாரத்தை துறத்தலோ பாராதீனப்படுத்தலோ ஆகாது என்ற ஏற்பாட்டிற்கு உட்பட்டு மாகாணசபைகள் இயங்குவதால் மேற்படி உறுப்புரைகளை 13 ஆவது திருத்தம் மீறவில்லை எனத் தீர்ப்பாளிக்கப்பட்டது. விசாரணையை மேற்கொண்ட 7 நீதிபதிகளில் 4 நீதிபதிகள் மட்டும் சாதகமாக தீர்ப்பளித்தனர்.  ஒரு பெரும்பான்மையால் தான் சாதகமான தீர்ப்பு ஏற்பட்டது. புதிய அரசியல் யாப்பிற்கும் இவ்வாறன ஒரு விசாரணை வரலாம். அரசாங்கம் ஏதோவொரு வகையில் இதனை வெற்றி கொள்ள முயற்சிக்கலாம்.

வரலாற்றில் இனப்பிரச்சினைக்கு தீர்வு வரக்கூடாது எனக் கருதித்தான் து சு ஜெயவர்த்தனா அரசியல்யாப்பில் இத்தகைய மிகப் பெரிய பூட்டினை உருவாக்கினார். அந்த பூட்டினைசிங்கள மக்களினால் மட்டும் தான் உடைக்க முடியும். தற்போதைக்கு சிங்கள மக்களிடமிருந்து இதனை எதிர்பார்க்க முடியாது. அதற்கான எந்த முயற்சிகளிலும் அரசாங்கம் இறங்கவில்லை. சந்திரிகா‘வெண்தாமரை இயக்கம்’ என ஒன்றைத் தொடங்கி சில முயற்சிகளைச் செய்தார்.மைத்திரி – ரணில் கூட்டிடம் அதுவும் இல்லை. வெண்தாமரை இயக்கம் சந்திரிக்காவிற்கு தோல்வியே. வரலாறு, ஜதீகம், மதம் என்பவற்றினால் கட்டமைக்கப்பட்ட சிங்கள பௌத்த கருத்து நிலைத்திரட்சியை இலகுவில் உடைத்து விட முடியாது. இதனால் மக்கள் தீர்ப்பு தோல்வியையே ஏற்படுத்தும்.

இங்கு இன்னொர் கேள்வி எழுகின்றது. புதிய அரசியல் யாப்பில் தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யக்கூடிய என்ன யோசனைகள் அடங்கும் என்பதே அக் கேள்வி. இனப்பிரச்சினை என்பது தமிழ் மக்கள் ஒருதேசமாக, தேசிய இனமாக இருப்பது அழிக்கப்படுவதனால் ஏற்படுகின்ற பிரச்சினையே. அதாவது தேசத்தை அல்லது தேகிய இனத்தை தாங்கும் தூண்களாக இருக்கின்ற நிலம்,மொழி, பொருளாதாரம், கலாச்சாரம், மக்கள் கூட்டம் என்பன அழிக்கப்படுவதனால் ஏற்படுகின்ற பிரச்சினையே.

எனவே இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது இந்த அழிவுகளிலிருந்து தமிழ் மக்களை பாதுகாப்பதாக இருத்தல்வேண்டும். இதற்கு தேசம், அதன் அடிப்படையிலான இறைமை,அந்த தேசதத்திற்கு;குரிய சுயநிர்ணய உரிமை, அதனை நடைமுறைப்படுத்தக் கூடிய சமஸ்டிப் பொறிமுறை என்பன அங்கீகரிக்கப்படுதல் வேண்டும். இதன் சட்டவடிவமாக வடக்கு – கிழக்கு இணைந்த அதிகார அலகு,தமிழ்த் தேசத்திற்குரிய சுயாட்சி அதிகாரங்கள், மத்திய அரசில் ஒரு தேசமாக அல்லது தேசிய  இனமாக பங்குபற்றுவதற்கான வாய்ப்பு, அதிகாரங்களுக்கான பாதுகாப்பு என்பன உறுதிப்படுத்தப்படல் வேண்டும். 

இவை இடம்பெற வேண்டுமானால் இரண்டு நிபந்தனைகள் பூர்த்தியாக்கப்படல் வேண்டும்.

1.    சிங்கள மக்கள் சிங்கள் பௌத்த கருத்துநிலையிலிருந்து விடுவிக்கப்பட்டு பன்மைத்துவ இலங்கை என்ற அரசியல் கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்ளல் வேண்டும்.
2.    ஒற்றையாட்சி கட்டமைப்பு மாற்றப்பட்டு பன்மைத்துவக் கட்டமைப்பு உருவாக்கப்படல் வேண்டும்

ஆனால் இவை எதுவும் புதிய யாப்பில் இல்லை. 

வெறுமனவே மாகாணசபைகளுக்கு ஒரு சில அதிகாரங்கள் வழங்கப்படுவது போன்ற தோற்றமே கொடுக்கப்படப்போகின்றது. இதைத்தான் சம்பந்தன் ‘2016 இல் தீர்வு’ எனக் கூறினாரோ தெரியாது. ஊடகத் தகவல்களின்படி இந்தத் தோற்றத்திற்கு கூட்டமைப்பும் சம்மதம் தெரிவித்துவிட்டது. 


    13 ஆவது திருத்ததின்படி மாகாணசபைகளுக்கு எந்தவித சுயாதீனமும் கிடையாது. மத்திய அரசில்  தங்கி நிற்கும் நிலையே உண்டு. ஒரு நியதிச் சட்டத்தை உருவாக்குவதற்கு கூட பாராளுமன்றம் அதற்கான சட்டத்தை உருவாக்கிக் கொடுக்கவேண்டும்.

மொத்தத்தில் அரசாங்கம் தமிழ் மக்களின் தலையில் பூச்சுற்றப்போகின்றது.இந்தத் தடவை ஒருவித்தியாசம். கூட்டமைப்பும் சேர்ந்து சுற்றப்போகின்றது என்பதுதான் அது. தமிழ்மக்களுக்கு ஏதாவது வழங்குவது என தோற்றம் தெரிந்தால் கூட தென் இலங்கையில் எதிர்ப்பு வரும். மகிந்தர் தரப்பு அதனை முன்னெடுக்கும்.இந்த எதிர்ப்பை வைத்துக்கொண்டே தமிழ்மக்கள் இதனை ஆதரிக்கவேண்டும் என போதனை செய்யப்படலாம். 

தமிழ் மக்களும் மகிந்தரை எதிர்க்க வேண்டும் என்பதற்காக தங்களது  அபிலாசைகளை புறக்கணித்த புதிய அரசியல் யாப்பை ஆதரிக்க முற்படுவர். பிறகென்ன? தமிழ்மக்களுக்கான தீர்வு வழங்கப்பட்டு விட்டது அவர்களும் அதனை ஏற்றுக்கொண்டு விட்டார்கள் என சர்வதேச ரீதியில் பிரச்சாரம் செய்யப்படலாம்.

மைத்திரி, ரணில் மட்டுமல்ல சம்பந்தனும் கூட நோபல் பரிசிற்கு சிபார்சு செய்யப்படலாம். எதிர்ப்பவர்கள் எல்லாம் மகிந்தாரின் ஆட்கள், துரோகிகள் என முத்திரை குத்தப்படலாம்.

தமிழ்மக்கள் தங்கள் கைகளினாலேயே தங்கள் தலையில் மண் அள்ளிப் போடப்போகின்றார்களா?

இப்போது இன்னொர் கேள்வி எழுகின்றது. இதுதான் கள யாதார்த்தம் என்றால் தமிழ்த் தேசிய சக்திகள் இது விடயத்தில் என்ன செய்யலாம் என்பதே அக் கேள்வி. 

    தமிழ்மக்களுக்கான அரசியல் தீர்வு எவ்வாறு அமைய வேண்டும் என்பதை தாயக, பிராந்திய சர்வதேச மட்டத்தில் பேசு பொருளாக்குவதே தமிழ்த் தேசிய சக்திகளது உடனடிக் கடமையாக இருத்தல் வேண்டும். தமிழ்த் தரப்பிலிருந்து முக்கியமாக இரண்டு தரப்புக்கள் தீர்வு யோசனைகiளை முன்வைத்துள்ளன. 

1.    தமிழ்மக்கள் பேரவை
2.    வடமாகாண சபை
    
    வடமாகாணசபையின் தீர்வு போதியதல்ல. தேசம், இறைமை பற்றிய கருத்துக்கள் அங்கு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அது தமிழ் மக்கள் பேரவையின் யோசனைகளை பலவீனப்படுத்தவேண்டும் என்பதற்காக அவசரம் அவசரமாக முன்வைக்கப்பட்ட யோசனைகளே. சில குறைபாடுகள் இருந்தாலும் தமிழ் மக்கள் பேரவையின் யோசனைகள் ஏற்றுக்கொள்ளத் தக்கவை. 

    அதிலுள்ள பிரதான குறைபாடு மத்திய அரசில் தமிழ் மக்கள் தேசமாக பங்குபற்றுவதற்கான பொறிமுறைகள் இல்லாமையே. இதைவிட அதிகாரங்களுக்கான பாதுகாப்பு சட்டத்துறையிலும் நீதித்துறையிலும் போதுமான ஏற்பாடுகளைக் கொண்டுள்ளது. ஆனால் மத்திய நிறைவேற்றுத்துறையைப் பொறுத்தவரை ஏற்பாடுகள் எதுவுமில்லை.

    இலங்கை மட்டுமல்ல உலகளாவிய வகையிலும்கூட இன்று நிறைவேற்றுத் துறையே முக்கிய இடத்தை வகிக்கின்றது. எனவே நிறைவேற்றுத்துறையின் நடவடிக்கைகளிலிருந்தும் தமிழ் மக்களுக்கு பாதுகாப்புப் பொறிமுறை தேவை.

    மேலும் மத்திய அரசிலிருந்து வரும் தமிழ் மக்களுக்கு எதிரான விடயங்களை தடுப்பதற்குத்தான் பேரவையின் யோசனைகளில் பொறிமுறை உண்டு. தமிழ் மக்களுக்கு தேவையான விடயங்களை மத்திய அரசில் நிறைவேற்றுவதற்கு பொறிமுறைகள் இல்லை. இந்தத் திருத்தங்களையும் சேர்த்துக்கொண்டு தமிழ் மக்கள் பேரவையின் யோசனைகளை மக்கள் அரங்குகளுக்கு கொண்டு செல்லாம். 

    முன்னரே கூறியது போல தாயகமட்டத்திலும், பிராந்தியமட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் இவற்றைப் பேசுபொருளாக்கவேண்டும். தாயகமக்களுக்கு கூட எமக்கான அரசியல் தீர்வு பற்றி போதிய விளக்கமில்லை.இனப்பிரச்சினைகள் என்றால் என்ன? என்பது பற்றிய தெளிவுகளும் இல்லை. அரசியல் வாதிகளிடமே இது பற்றிய தெளிவு இல்லாத போது மக்களிடம் அதனை எதிர்பார்க்க முடியாததுதான்.  தமிழ் மக்களை ஒரு சிறுபான்மையினம் என விளக்கம் கொடுக்கும் போக்கு சம்பந்தனிடம் கூட உண்டு.மொத்தத்தில் தமிழ்த்தேசிய அரசியல் அதற்கேயுரிய பண்புகளோடு மக்கள் அரங்குகளிலும் அரசியல் அரங்குகளிலும் பேசப்படவில்லை. 

    பிராந்திய மட்டத்தில் இதனை பேசு பொருளாக்குதவற்கு தமிழக தேசிய சக்திகள் தயாராக இருக்கின்றன. இளந்தமிழகம் இயக்கம் தமிழ் மக்களினால் முன்வைக்கப்படுகின்ற தீர்வு யோசனைகளை இந்தியா எங்கும் கொண்டு செல்வதற்கு தாங்கள் தயாராக இருப்பதாக பகிரங்கமாக கூறியிருக்கின்றது.

    இந்தியா தன்னுடைய நலன்களுக்காக எந்தவித பெறுமதியுமில்லாத 13 ஆவது திருத்தத்தினை எம்மீது திணிக்க முயற்சிக்கின்றது. இதனை தடுத்து நிறுத்த தமிழக மக்களினால் தான் முடியும்.    

    சர்வதேச மட்டத்தில் தமிழ்த்தேசிய அரசியல் ஒழுங்காகப் பேசப்படவில்லை. தமிழ் மக்களின் போராட்டத்தை பயங்கரவாதப் போராட்டமாக பார்க்கும் நிலையே அங்கு உண்டு.இதைவிட சர்வதேச இராஜதந்திரிகள் தமிழ்மக்களுக்கு என்ன தேவை என்பதை உறுதியாக முன் வையுங்கள் எனக் கேட்கின்றனர். நமது தீர்வு யோசனைகள் சார்வதேச விழுமியங்களுக்கு உட்பட்டது தான்.அங்கு பல நாடுகளில் அவை நடைமுறையில் உள்ளவையே.  இதனால் எங்களது யோசனைகளை அவைகளினால் புறக்கணித்துவிட முடியாது.

    சர்வதேச நாடுகள் கேந்திர நலனின் அடிப்படையில் செயற்படலாம். ஆனால் சர்வதேச சிவில்சமூகம் சர்வதேச விழுமியங்களின் அடிப்படையிலையே செயற்படும். அவற்றினால் எமது யோசனைகளை நிராகரிக்க முடியாது.

    சர்வதேச சிவில்சமூகத்தைக் கொண்டே சர்வதேச நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்கலாம். இவற்றையெல்லாம் மேற்கொள்வதற்கு நிலம் - புலம் - தமிழகம் என்பவற்றிற்கிடையே ஒருங்கிணைந்த வேலைத்திட்டம் அவசியமானது.

    எல்லாவற்றிற்கும் முக்கியமான நிபந்தனை தாயகத்தில் தமிழ் மக்களின் அனைத்து விவகாரங்களை உலகளாவிய ரீதியில் கையாளக்கூடிய ஒரு ‘தேசிய அரசியல் இயக்கத்தை’ கட்டி எழுப்புவதே!

தமிழ்த்தேசிய சக்திகள் இதனைக் கவனத்தில் கொள்வார்களா?

 

சி.அ.ஜோதிலிங்கம்