கெத்து என்பது தமிழ்சொல்லே! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

ஞாயிறு பெப்ரவரி 07, 2016

கடந்த சில வாரங்களாக கெத்து படத்திற்கு தமிழக அரசு கெத்து என்பது தமிழ்ச் சொல் அல்ல என வரிச்சலுகை வழங்காது இருந்துவந்த நிலையில் இது தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

‘கெத்து திரைப்படம்’ தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பானது; ‘கெத்து என்பது தமிழ்ச்சொல் தான் எனவும் இத்திரைப்படத்திற்கு தமிழக அரசால் வழங்கப்படாத ஆணையை ரத்துச் செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளது.

திருப்புகழ்

இந்த வழக்கை முதலில் விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், ‘கெத்து என்பது தமிழ் சொல்தான். திருப்புகழில் கூட இந்த வார்த்தை வருகிறது’ என்று கருத்து தெரிவித்தார். பின்னர், இந்த வழக்கு நீதிபதி எம்.துரைசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமயாஜி, மனுதாரர் சார்பில் வக்கீல் பி.வில்சன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டார்கள்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

எந்திரத்தனம்

கெத்து என்ற வார்த்தை தமிழ் இல்லை என்று படத்தை பார்த்த 6 பேர் கொண்ட குழு எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் அறிக்கையை கொடுத்துள்ளது. அதேபோல, தமிழ்நாடு வணிக வரித்துறைக்கு, கடந்த ஜனவரி 25-ந்தேதி தமிழ் வளர்ச்சித்துறை அனுப்பியுள்ள கடிதத்தில், ‘கெத்து’ தமிழ் சொல் அல்ல என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் தமிழக அரசு வெளியிட்டுள்ள அகராதியில் கெத்து என்ற வார்த்தை இருப்பதை கூட பார்க்காமல், இப்படி ஒரு முடிவுக்கு தமிழ் வளர்ச்சித்துறை அதிகாரிகள் வந்துள்ளனர். எனவே, இந்த கருத்தை ஏற்க முடியாது.

அகராதியில் இந்த வார்த்தை இடம்பெற்று, அதற்கு அர்த்தமும் கூறப்பட்டுள்ளதால், ‘கெத்து’ என்பது தமிழ் சொல்தான். அதேநேரம், இந்த திரைப்படத்துக்கு தணிக்கை வாரியம் வழங்கியுள்ள சான்றிதழை கருத்தில் கொள்ளத்தேவையில்லை. தமிழக வணிக வரித்துறை செயலர், எந்திரத்தனமாக செயல்பட்டு, இப்படத்துக்கு வரிச்சலுகை வழங்க மறுத்துள்ளார்.

அரசாணை ரத்து

எனவே, கெத்து என்ற திரைப்படம் வரிச்சலுகை பெற தகுதி வாய்ந்ததுதான். இந்த படத்துக்கு வரிச்சலுகை வழங்க மறுத்து கடந்த ஜனவரி 14-ந்தேதி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்கிறேன். இந்த படம் வெளியான நாள் முதல் (ஜனவரி 14-ந்தேதி) முதல் படம் பார்க்க வந்தவர்களிடம் வசூலிக்கப்பட்ட கேளிக்கை வரி தொகையை மனுதாரரிடம் ஒப்படைக்கவேண்டும் எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.