கேட்டலோனிய தேர்தலில் பிரிவினைவாத கட்சிகள் அனைத்தும் ஒன்றுசேர வேண்டும்!

Sunday November 05, 2017

டிசம்பரில் நடைபெறவுள்ள கேட்டலோனிய தேர்தலில் பிரிவினைவாத கட்சிகள் அனைத்தும் ஒன்றுசேர வேண்டும் என முன்னாள் அதிபர் கார்லஸ் பூட்ஜியமோண்ட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஸ்பெயின் நாட்டு பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் மாகாணம் கேட்டலோனியா. இங்கு தனிநாடாக பிரிவது தொடர்பான வாக்கெடுப்பு கடந்த மாதம் 1-ம் தேதி நடந்தது. இதில் பங்கேற்ற 2.3 மில்லியன் மக்களில் 90% பேர் தனிநாடாக கேட்டலோனியா பிரிந்து செல்வதற்கு ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து, கடந்த மாதம் 27-ம் தேதி ஸ்பெயினிடம் இருந்து விடுதலை பெற்றதாக கேட்டலோனியா பாராளுமன்றம் அறிவித்தது.

கேட்டலோனியா சுதந்திர பிரகடனம் செய்த சில மணி நேரங்களில் பாராளுமன்றத்தை கலைத்து, நேரடி நிர்வாகம் அமல்படுத்தப்படுவதாக ஸ்பெயின் அரசு அறிவித்தது. கலைக்கப்பட்ட கேட்டலோனியா பாராளுமன்றத்திற்கு டிசம்பர் மாதம் மறு தேர்தல் நடத்தப்படும் என தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, பிரிவினைவாத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி கேட்டலோனியா தலைவர் கார்லஸ் பூட்ஜியமோண்ட் உள்ளிட்ட 5 பேர் மீது ஸ்பெயின் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணைக்கு ஆஜராகாத பூட்ஜியமோண்ட் உள்பட 5 பேருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்நிலையில், டிசம்பரில் நடைபெறவுள்ள தேர்தலில் பிரிவினைவாத கட்சிகள் அனைத்தும் ஒன்றுசேர வேண்டும் என முன்னாள் அதிபர் கார்லஸ் பூட்ஜியமோன்ட் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், நியாயமான விசாரணைக்கு உத்தரவாதம் அளிக்கும்வரை என்னால் ஸ்பெயினுக்கு திரும்பி வரமுடியாது. நீதிமன்றத்தால் தேடப்பட்டு வரும் நிலையிலும் தேர்தலில் போட்டியிட நான் தயாராக உள்ளேன். எனவே, டிசம்பரில் நடைபெறவுள்ள தேர்தலில் பிரிவினைவாத கட்சிகள் அனைத்தும் ஒன்றுசேர வேண்டும் என பதிவிட்டிருந்தார்.