கேணல் பரிதி அவர்களின் 5ம் ஆண்டு வணக்க நாள் இன்றாகும்

புதன் நவம்பர் 08, 2017

கேணல் பரிதி அவர்களின் வரலாற்றுச் சுருக்கம்.

சொந்தப்பெயர் : மதீந்திரன்
பிறப்பு : 26-10-1963 யாழ் மாவட்டத்தின் தீவகப் பகுதியில் அமைந்துள்ள கரம்பன் எனும் கிராமத்தில்.
ஆரம்பக்கல்வி : சிவகுருநாதன் வித்தியாசாலை ( கரம்பன் கிழக்கு ஊர்காவற்றுறை)
உயர்கல்வி : யாழ். மத்திய கல்லூரி.
கல்வித் தகைமை : க. பொ. த உயர்தரம் (வர்த்தகத் துறை)

1983 யூலை இனக்கலவரத்தில் சிங்கள அரசால் தமிழர்கள் மேற்கொள்ளப்பட்ட ஒடுக்குமுறை, இனவழிப்பு போன்றவற்றுக்கு எதிராக கிளர்ந்தெழுந்து 26-10-1983இல் 20வது பிறந்த நாளன்று தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்தார். றீகன் என்ற பெயரில் விடுதலைப் புலிகளின் இரண்டாவது பயிற்சி முகாமில் இராணுவப் பயிற்சி பெற்றார். பயிற்சி முகாமில் சிறப்பாக செயற்பட்ட இவர் 4வது பயிற்சி முகாமின் பயிற்சி ஆசிரியர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார்.

1984 ஆம் ஆண்டு தளபதி விக்ரரோடு மன்னார் மாவட்டத்தில் கால்பதித்த விடுதலைப்புலிகளில் அணியில் பரிதியும் ஒருவர். வெற்றிகரமான பல தாக்குதல்களில் முக்கிய பங்கு வகித்தார். குறிப்பாக யாழ் காவல் நிலையத் தகர்ப்பிலும் மன்னார் காவல் நிலையத் தகர்ப்பிலும் சிறப்பாகச் செயற்பட்டார். தொடர்ந்து பல கண்ணிவெடித்தாக்குதல்களில் பங்கேற்றார். இவரது திறமையான செயற்பாட்டால் புலிகளின் 2ஆம் நிலை தளபதிகள் வரிசையில் இடம் பிடித்தார். மன்னாரில் மட்டுமல்லாது வவுனியா முல்லைத்தீவு கிளிநொச்சி என வட தமிழீழமெங்கும் பரிதியின் பணிகள் தொடர்ந்தன.

1987இல் யாழ் மாவட்டத்திற்கு திரும்பி அங்கும் பல தாக்குதல்களில் பங்கேற்றார். தளபதி ராதா யாழ் மாவட்டத் தளபதியாக பொறுப்பேற்ற காலத்தில் நடைபெற்ற தொடர்ச்சியான மினி முகாம் தகர்ப்புத் தாக்குதல்களில் முக்கிய பங்கு வகித்தார். யாழ் குடாநாட்டில் அமைந்திருந்த ராணுவ முகாம்கள் அனைத்தையும் முற்றுகையிட்டு மக்களைக் காக்கும் பணியில் முனைப்புடன் செயற்பட்டார்.1987 மே மாதம் யாழ். வடமராட்சிப் பகுதியில் சிறீலங்கா இராணுவத்துடனான மோதல் ஒன்றின் போதுகாயமடைந்தார்.

1987 செப்ரெம்பரில் சிகிச்சைக்காக இந்தியா சென்றார். 1987 ஒக்ரோபரில் இந்திய புலிகள் போர்ஆரம்பித்த பின்னர் தமிழ்நாட்டிலிருந்து சிகிச்சை பெற்ற போராளிகளை இந்திய காவல்துறை கைது செய்த போது கேணல் கிட்டு உட்பட ஏனைய பல போராளிகளுடன் கைது செய்யப்பட்டார்.இந்திய அரசால் இலங்கைக்கு அனுப்பப்பட்டு காங்கேசன்துறையில் இந்திய இராணுவச் சிறையில் அடைக்கப்பட்டார். இந்திய இராணுவம் இலங்கையிலிருந்து வெளியேறும் வரையான 30 மாத காலம் சிறையிலிருந்தார்.

இந்திய இராணுவம் இலங்கையைவிட்டு வெளியேறிய போது விடுதலையாகிய இவர் யாழ் தீவகப் பகுதியின் தளபதியாக நியமிக்கப்பட்டார்.அங்கு இலங்கை இராணுவத்தை முகாமை விட்டு வெளியேறாமல் முற்றுகையிட்டு முகாமிற்குள் முடக்கினார். போராளிகளுடனும் மக்களுடனும் அன்பாகப் பழகி அனைவரதும் அன்புக்கும் மதிப்பிற்கும் உரியவரானார். 1990 ஓகஸ்ட் மாதம் முற்றுகையை உடைத்து முன்னேற முற்பட்ட இராணுவத்தை தடுத்து நடந்த யுத்தத்தில் படுகாயமடைந்தார்.

அதன்பின் புலிகள் அமைப்பிலிருந்து விலகி பிரான்சு நாட்டிற்கு புலம்பெயர்ந்தார். திருமண வாழ்வில் இணைந்தார். ஒரு மகளைப் பெற்றார். மனைவி மகளுடன் அமைதியாக வாழ்ந்த இவர் காலத்தின் தேவை கருதி மீண்டும் புலிகளுடன் இணந்தார். தலைவரின் வேண்டுகோளுக்கிணங்க பரிதி என்ற பெயருடன் 2003இல் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளராக பொறுப்பேற்றார். பிரான்சு மண்ணில் தமிழர்கள் சார்பான அரசியல் வேலைகளில் சிறப்பாகச் செயற்பட்டார்.

புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் தமிழர்களின் தாய்மொழி, கலைகள், பண்பாடு, என்பனவற்றினை இழந்துவிடாது தொடர்ந்து பேண வேண்டும் என்பதற்காக அயராது உழைத்தார். புலம் பெயர் தமிழ்ச்சிறார்கள் தமிழையும் தமிழ்க் கலைகளையும் பயில வேண்டும் என்பதற்காகவும் தமிழ்ப் பண்பாடு சிதையக்கூடாது என்பதற்காகவும் தொடர்ந்து பாடுபட்டவர். தமிழ்க் குழந்தைகள் விளையாட்டுத் துறையிலும் பிரகாசிக்க வேண்டும் என்பதிலும் அக்கறை செலுத்தியவர்.2006 இறுதியில் ஐரோப்பிய அமைப்பு விடுதலைப் புலிகளைத் தடைசெய்தது. தொடர்ந்து 2007 ஏப்ரலில் பிரான்சு அரசால் கைது செய்யப்பட்டு 2010 யூன் வரை சிறையில் தடுத்துவைக்கப்பட்டார்.

அவர் விடுதலையாகி வந்தபோது முள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்து முடிந்திருந்தது. சிறைவாழ்வு அவரை மேலும் பக்குவப்படுத்தியிருந்தது. எல்லாமே முடிந்தது என எல்லோரும் நம்பிக்கையிழந்த போதும் பரிதி அவர்கள் தொடர்ந்து தமிழ் மக்களுக்காக நம்பிக்கையுடன் செயற்பட்டார்.சிறிலங்கா அரசுக்கெதிரான அரசியற் போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்தார். பிரான்சுடன் மட்டும் நின்றுவிடாது அனைத்துலக ரீதியில் தமிழர் அமைப்புகளை ஒன்றிணைப்பதிலும் போராட்டங்களை முன்னெடுப்பதிலும் முனைப்புடன் செயற்பட்டார்.

தனக்காகவும் தன் குடும்பத்திற்காகவும் உழைப்பதன் பொருட்டு நிறுனமொன்றில் வேலைபார்த்தார். ஆடம்பரமற்ற எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர். தனிப்பட்ட வாழ்விலும் பொது வாழ்விலும் உண்மையையும் நேர்மையையும் கடைப்பிடித்தவர். மக்களுக்கு முன்மாதிரியாக தனது மனைவி பிள்ளைகளையும் அரசியற் போராட்டங்களில் கலந்து கொள்ள ஊக்குவித்தார். மிகப்பெரிய பொறுப்பில் இருந்த போதிலும் மிகுந்த தன்னடக்கத்துடன் எல்லோருடனும் பழகியவர். பெரியவர்களுடன் அடக்கமாக பழகியவர்.

வயதில் மிக இளயோருடனும் உரிய மதிப்புக் கொடுத்து அன்பாக பழகியவர். ஏந்த வேலையை எவரைக் கொண்டு செய்விக்கலாம் என்ற கலையை சிறப்பாகப் பயன்படுத்தியவர். தன்னோடு இணைந்து செயற்பட்ட ஒவ்வொருவர் மீதும் தனிப்பட்ட அன்பும் அக்கறையும் கொண்டு செயற்பட்டவர். அவர்களது தனிப்பட்ட வாழ்வில் ஏற்படும் சிக்கல்கள் பிரச்சனைகளையும் தீர்க்க வழிகாட்டி உதவியவர்.

சிறிலங்கா அரசிற்கு தீராத தலைவலியாக புலம்பெயர் தமிழர்களின் போராட்டங்கள் அமைந்தன. இதனால் சினமுற்ற இலங்கையரசு கூலிப்படை மூலம் 30-10-2011இல் அவரை வாளால் வெட்டிக்கொல்ல முயன்றது. அதிர்~டவசமாக காயங்களுடன் உயிர் பிழைத்தார். மேலும் உத்வேகத்துடன் தனது அரசியற் பணிகளை முன்னெடுத்தார். எந்தச் சிக்கலான பிரச்சனையையும் அமைதியாகவும் நிதானமாகவும் அணுகும் வல்லமையையுடன் செயற்பட்டார்.

ஐ.நா சபை முன் போராட்டம் நடத்துவதற்கு சிவிற்சலாந்திற்கு பிரான்சுமக்களை அழைத்துச் செல்வதற்கென தனியே ஒரு தொடருந்தை முன்பதிவு செய்து புதிய எழுச்சியை ஏற்படுத்தினார். பிரான்சில் தமிழீழத் தேசியத் தலைவர் மற்றும் தமிழீழத் தேசியச் சின்னங்களைத் தாங்கிய முத்திரைகளை வெளியிட்டு சிங்கள ஆட்சியாளர்களின் தூக்கத்தைக் கெடுத்தார்.

தாயக மக்கள் மீது அளவற்ற அன்பு கொண்டவர். தாயகத்தில் வாழும் மக்களுக்கான பல்வேறு உதவித்திட்டங்களை வழிப்படுத்தினார்.தமிழர் அமைப்புக்கள் தம்முள் பிளவுபடாது ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என்ற ஆசையுடன் வாழ்ந்தவர். அதற்காக வெகுவாகப் பாடுபட்டவர். தமிழீழத்திற்காக உயிர் நீத்த மாவீரர்களின் கனவு வீணாகி விடக் கூடாது என்பதற்காக தொடர்ந்து பாடுபட்டார்.

ஓவ்வொரு முறையும் மாவீரர் நாளை பிரான்சு மண்ணில் சிறப்பாக நடாத்தினார். மாவீரர் குடும்பத்தவரை மதிப்புடன் நடாத்தினார். 08-11-2012இல் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்திற்கு முன்னால் சிறீலங்கா அரசின் கூலிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது வீரமரணத்தின் பின்னரும் வீறுகொண்டு தொடர்கின்றது தமிழர்களின் விடுதலைப் பயணம்.