கே.பியே தனது தலைவர் என்று அறிவித்த தயாமோகன் தயாரித்த ‘தலைமைச் செயலக’ அறிக்கை! ஒலிப்பதிவு ஆதாரம்!

Tuesday December 19, 2017
கடந்த 27.11.2017 அன்று மேற்குலக நாடுகளில் மாவீரர் நாள் நிகழ்வுகள் நடைபெற்ற மண்டபங்களில் தலைமைச் செயலகம் என்ற பெயரில் ஒலிபரப்பப்பட்ட அறிக்கையைத் தயாரித்தவர் சிங்களக் கைப்பாவையான கே.பியைத் தனது தலைவராக அறிவித்த தயாமோகன் என்பது சங்கதி-24 இணையத்தின் புலனாய்வுச் செய்தியாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது.

 18.05.2009 அன்று முள்ளிவாய்க்காலில் தமது ஆயுதங்களைத் தமிழீழ விடுதலைப் புலிகளின் மௌனித்தார்கள். அன்று இரவு தமிழ்நெற் இணையத்திற்கு செவ்வி வழங்கிய கே.பி என்றழைக்கப்படும் செல்வராஜா பத்மநாதன், தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பாதுகாப்பாகவும், நலமாகவும் இருக்கின்றார் என்று அறிவித்தார்.

  எனினும் சரியாக ஆறு நாட்கள் கழித்து 24.05.2009 அன்று அந்தர் பல்டி அடித்து அறிக்கை ஒன்றை வெளியிட்ட கே.பி, முள்ளிவாய்க்காலில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார் என்றும், அனைவரையும் ஒரு வாரத்திற்கு துக்கம் அனுட்டிக்குமாறும் வேண்டினார்.   தேசியத் தலைவர் தொடர்பான கே.பியின் இந்த அறிவித்தலை உலகத் தமிழர்கள் நிராகரித்ததை அடுத்து, இரண்டு நாட்கள் கழித்து 26.05.2009 அன்று பி.பி.சி தமிழோசைக்கு செவ்வி வழங்கிய அப்போதைய தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் தயாமோகன், தமிழீழத் தேசியத் தலைவர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார் என்று கே.பி அறிவித்தது உண்மை என்று தெரிவித்ததோடு, கே.பியே (செல்வராஜா பத்மநாதன்) தமது தற்போதைய தலைமை என்றும், அவரது கட்டளைப் படியே தானும் தென்தமிழீழத்தில் நிற்கும் ஏனைய போராளிகளும் இயங்குவதாகக் குறிப்பிட்டார்.   இவ்வாறு தமிழீழ தேசியத் தலைவரின் இருப்பை மறுதலித்தும், கே.பியைத் தனது தலைவராகப் பிரகடனம் செய்தும் தமிழீழத் தேசியத் தலைவருக்குப் பெரும் வரலாற்றுத் துரோகமிழைத்த தயாமோகன், பின்னர் மலேசியா சென்று அங்கு கே.பியை சந்தித்ததோடு, கே.பியைத் தலைவராகக் கொண்டு தலைமைச் செயலகம் என்ற புதிய அமைப்பை உருவாக்கி மேலும் ஒரு பெரும் வரலாற்றுத் துரோகத்தை இழைத்தார்.   இதற்கான அறிவித்தல் தயாமோகனின் சகாக்களான ராம், அமுதன் (சுரேஸ் அல்லது மாறன்) ஆகியோரால் 21.07.2009 அன்று விடுக்கப்பட்டது.   அதன் பின்னர் 07.08.2009 அன்று மலேசியாவில் கே.பியின் கைது நாடகம் அரங்கேறியது. அது நடைபெற்று நான்கு மாதங்கள் கழித்து 27.11.2009 அன்று மாவீரர் நாள் நடைபெற்ற பொழுது ராம், நகுலன் ஆகியோரும் சிங்களப் படைகளின் கைப்பாவைகளாக இயங்குவது உறுதியானது.   இந்நிலையில் மலேசியாவில் இருந்து சுவிற்சர்லாந்தை வந்தடைந்த தயாமோகன், அங்கிருந்தவாறு தலைமைச் செயலகம் என்ற துரோகக் கும்பலை இயக்குவதும், கடந்த மாவீரர் நாளன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் என்ற பெயரில் ஒலிபரப்பப்பட்ட அறிக்கை, தயாமோகனாலேயே தயாரிக்கப்பட்டது என்பதும் சங்கதி-24 இணையத்தின் புலனாய்வுச் செய்தியாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது.   தயாமோகனின் இத் துரோகச் செயலுக்கு பிரித்தானியாவில் வசிக்கும் ஒக்ஸ்போர்ட் மாட்டுப் பண்ணைக் கும்பலின் இணைப்பாளர்களில் ஒருவரான சுபன் அல்லது ஜேய் மாஸ்டர் என்று அழைக்கப்படும் யோகராசா முத்துவேல் என்பவரும் ஒத்தாசை புரிந்தது உறுதியாகியிருக்கின்றது. (சுபன்)   இவ்வாறு தமிழீழ தேசியத் தலைவருக்கும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் பெரும் வரலாற்றுத் துரோகங்களைப் புரிந்து கே.பியைத் தனது தலைவராக அறிவித்த தயாமோகனுடன் சுவிற்சர்லாந்து தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளரான ரகுபதி என்றழைக்கப்படும் விஜயரட்ணம் சிவநேசன் என்பவர் நெருங்கிய உறவைப் பேணி வருகிறார்.   அத்தோடு யேர்மனியில் கடந்த 27.11.2017 அன்று நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வில் தயாமோகனை சிறப்புப் பேச்சாளராக யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளரான சிறீரவி என்றழைக்கப்படும் ஜோன்பிள்ளை சிறீரவீந்திரநாதன் அவர்கள் மேடையேற்றியிருந்தார்.   பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்கள் மீது வன்முறையை ஏவி விட்டும், போட்டி மாவீரர் நாள் நிகழ்வுகளை நடாத்திக் குழப்பம் விளைவித்தும் சிங்களத்தின் கைப்பாவைகளாக இயங்கும் தலைமைச் செயலகக் கும்பலின் பிதாமகனும், கே.பியைத் தனது தலைவராகப் பகிரங்கமாகப் பிரகடனம் செய்வதருமான தயாமோகனுடன் இவர்கள் நெருங்கிய உறவைப் பேணுவது, சுவிற்சர்லாந்து, யேர்மனி ஆகிய நாடுகளில் உள்ள தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாட்டாளர்களின் மத்தியில் மட்டுமன்றி, ஏனைய நாடுகளில் உள்ள தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாட்டாளர்களின் மத்தியிலும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியிருப்பதாக டென்மார்க் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மூத்த செயற்பட்டாளர் ஒருவர் சங்கதி-24 இணையத்திற்கு தெரிவித்துள்ளார்.   இது விடயத்தில் தீர்க்கமான முடிவுகளை அனைத்து நாடுகளிலும் உள்ள தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாட்டாளர்கள் விரைந்து எடுத்தாலே ஒழிய தமிழீழ தேசியத் தலைவரால் உருவாக்கப்பட்ட கட்டமைப்புக்கள் காலப் போக்கில் தயாமோகன் போன்றவர்களால் சிதைத்தழிக்கப்படுவதைத் தடுப்பது சாத்தியமற்றதாகும் அபாயம் உள்ளது.    தமிழீழ தேசியத் தலைவரின் இருப்பை மறுதலித்தும், கே.பியைத் தனது தலைமையாகப் பிரகடனம் செய்தும் 26.05.2009 அன்று பி.பி.சி தமிழோசைக்கு தயாமோகன் வழங்கிய செவ்வியின் ஒலிவடிவம் இதோ:   நன்றி: பி.பி.சி. தமிழோசை.               தயாமோகனை செவ்வி கண்டவர் பி.பி.சி தமிழோசை சுவாமிநாதன்